மீனாவின் கணவரைப் போல: புறாக்களால் ஆஸ்துமா அபாயப் பகுதியாக மாறுகிறதா பெங்களூரு?

பெங்களூருவில், புறாக்களின் அசுர வளர்ச்சி, மக்களின் உடல்நலப் பாதிப்புகள் குறித்த கவலையையும் அதிகரிப்பதாக சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள். 
புறாக்களால் ஆஸ்துமா ஆபாயப் பகுதியாக மாறுகிறதா பெங்களூரு?
புறாக்களால் ஆஸ்துமா ஆபாயப் பகுதியாக மாறுகிறதா பெங்களூரு?


பெங்களூரு: பெங்களூருவில், புறாக்களின் அசுர வளர்ச்சி, மக்களின் உடல்நலப் பாதிப்புகள் குறித்த கவலையையும் அதிகரிப்பதாக சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள். 

புறாக்களின் எச்சத்தால் பரவும் ஹைபர்சென்சிடிவ் நிமோனிடிஸ் (எச்பி) மற்றும் இதர நுரையீரல் தொற்றுகள் பரவும் ஆபத்து இருப்பதாக எச்சரிக்கை மணி ஒலிக்கிறது.

பறவைகள் ஆர்வலர்கள் மற்றும் நகர்ப்புற திட்டமிடுபவர்கள் என பல தரப்பும், புறாக்களை பூச்சிகள் என்று அடையாளப்படுத்தி, அதன் எண்ணிக்கை அதிகரிப்பது, மக்களின் சுகாதாரத்துக்கு கவலையளிக்கும் விஷயம் என்று ஒப்புக் கொள்வதோடு, இது பல்லுயிர் பெருக்கத்தை நகரம் இழந்து, ஆஸ்தமா தலைநகராக மாறும் அபாயம் இருப்பதையும் சுட்டிக்காட்டுகிறார்கள்.

நுரையீரல் துறை நிபுணர்கள், நுரையீரல் மற்றும் ஹைபர்சென்சிடிவ் நிமோனிடிஸ் (எச்பி) பாதிப்புகள் அதிகரிப்பதை உறுதி செய்துள்ளனர். மும்பையைக் காட்டிலும், அங்கு ஹைபர்சென்சிடிவ் நிமோனிடிஸ் (எச்பி) பாதிப்பால் 20 மரணங்கள் நிகழ்ந்துள்ளன. பெங்களூரு அவ்வளவு மோசமாக பாதிக்கப்படவில்லை. ஆனாலும், புறாக்களுக்கு தீனி போடுவதும், புறாக்களை வளர்ப்பதும் பெங்களூரு நகரத்தில் தற்போது அதிகரித்திருப்பது நிச்சயம் கவலைதரும் விஷயம்தான் என்கிறார் பிஜிஎஸ் கிளெநீகல்ஸ் குளோபல் மருத்துவமனையின் டாக்டர் சந்தீப். இவர் முன்பு மும்பையில் பணியாற்றியவர்.

அதாவது, புறாக்கள் இருக்கும் இடத்தில் ஓரிரு நாள்கள் இருப்பது, அதன் எச்சம் இருப்பது என்பது எல்லாம் எச்பி நோய்க்கு காரணியாக மாறாது. தொடர்ந்து புறாக்களுடன் பல ஆண்டுகள் வசிக்கும்போது இந்த நோய் தாக்கும் அபாயம் இருக்கிறது என்பதே உண்மை. அதாவது உங்கள் வீட்டில் நாள்தோறும் புறாக்களுக்கு உணவளித்தால் அதன் கழிவுகள் உங்கள் வீட்டைச் சுற்றிலும் இருக்கும். அதனுடன் கலந்த காற்றை நாம் தொடர்ச்சியாக சுவாசிக்கும் போது நுரையீரல் பிரச்னை ஏற்படுகிறது. இதுதான் நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகருக்கும் ஏற்பட்டது. நுரையீரல் பாதித்து மாற்று அறுவைசிகிச்சைக்காக காத்திருந்த போதுதான் அவர் சிகிச்சைபலனின்றி பலியானார். அப்போதுதான் இந்த நோய் பற்றிய விவரங்கள் மக்களிடையே பரவலாகப் பேசப்பட்டது.

எனவே, புறாக்களுக்கு உணவளிப்பது மற்றும் அதன் அருகில் வசிப்பதைத் தவிர்ப்பதே இதற்கு நல்ல தீர்வாக இருக்கும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

புறாக்களை பராமரிக்க எந்த வழிகாட்டுதல்களும் இல்லை. பல பொதுவிடங்களில் கூட புறாக்களுக்கு உணவிடும் முறை உள்ளது. இந்திய மருத்துவக் கழகத்தின் நிலைக் குழுவில் உள்ள மருத்துவர்கள், இந்த பாதிப்பு குறித்து நடத்திய ஆய்வின் மூலம், எண்ணற்ற புறாக்கள் சுற்றுப்புறத்தில் இருக்கும் இடங்களில் வசிப்பதைத் தவிருங்கள், சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்ளுங்கள், குறிப்பாக புறாக்களின் எச்சங்களை கவனமாக சுத்தப்படுத்துங்கள் என்கிறார்கள்.

புறாக்களைப் போலவே கிளிகளின் எச்சங்களாலும் இந்நோய் தாக்கக் கூடும் என்று மணிப்பால் மருத்துவமனையின் நுரையீரல் துறை மருத்துவர் சத்யநாராயண் கூறுகிறார். ஆனால், புறாக்கள் அதிகளவில் கூட்டமாக வசிப்பதால், இந்த பாதிப்பு அதிகம் கண்டறியப்படுகிறது என்றும் கூறப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com