இன்ஃப்ளூயன்ஸாவுக்கு 2 பேர் உயிரிழப்பு: மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் எச்சரிக்கை!

இந்தியாவில் பரவி வரும் பருவகால இன்ஃப்ளூயன்ஸா காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையை மாநிலங்கள் கூர்ந்து  கவனிக்க வேண்டும் என மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டாவியா தெரிவித்தார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

இந்தியாவில் பரவி வரும் பருவகால இன்ஃப்ளூயன்ஸா காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையை மாநிலங்கள் கூர்ந்து  கவனிக்க வேண்டும் என மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டாவியா மாநில அரசுகளைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்தியாவில் பருவகால இன்ஃப்ளூயன்ஸா காய்ச்சலுக்கு இன்று (மார்ச் 10) இருவர் பலியான நிலையில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா மாநில அரசுகளுக்கு இவ்வாறு அறிவுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக மத்திய சுகாதாரத் துறை சார்பில் கூறியிருப்பதாவது: ஜனவரி 2 முதல் மார்ச் 5 வரை மொத்தமாக 5,451 பேர் ஹெச்3என்2 இன்ஃப்ளூயன்ஸா காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த ஆண்டு தொடக்கம் முதல் மேற்கொள்ளப்பட்ட இன்ஃப்ளூயன்ஸா காய்ச்சல் பரிசோதனையின்போது பலரும் ஹெச்3என்2 வகை இன்ஃப்ளூயன்ஸா காய்ச்சலால் அதிக அளவில் பாதிக்கப்படுவதைப் பார்க்க முடிகிறது. இந்த இன்ஃப்ளூயன்ஸா காய்ச்சலைக் கட்டுப்படுத்த மத்திய அரசு மாநில அரசுகளுக்குத் தேவையான உதவிகளை செய்து வருகிறது.

காய்ச்சல் தொடர்பான ஆலோசனைகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் போன்றன மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளன. ஹெச்3என்2 இன்ஃப்ளூயன்ஸா காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களையும், அதனால் உயிரிழப்பு ஏற்படுவது குறித்த சூழலையும் சுகாதரத் துறை கூர்ந்து கவனித்து வருகிறது. இந்த பருவகாலக் காய்ச்சலுக்கு குழந்தைகள் மற்றும் இணைநோய் உடைய வயதானவர்கள் அதிக அளவில் பாதிக்கப்படுகிறார்கள். இதுவரை ஹெச்3என்2 இன்ஃப்ளூயன்ஸா காய்ச்சலால் கர்நாடகத்தில் ஒருவரும், ஹரியாணாவில் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.

இந்த இன்ஃப்ளூயன்ஸா காய்ச்சல் தொடர்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா டிவிட்டரில் பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

அந்தப் பதிவில் அவர் கூறியிருப்பதாவது: நாட்டில் வேகமாகப் பரவி வரும் ஹெச்3என்2 இன்ஃப்ளூயன்ஸா காய்ச்சல் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுள்ளது. மாநிலங்கள் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளன. மத்திய அரசு இந்த பருவகால இன்ஃப்ளூயன்ஸா காய்ச்சல் பாதிப்புகளை உன்னிப்பாக கவனித்து வருகிறது எனப் பதிவிட்டுள்ளார்.

இந்த இன்ஃப்ளூயன்ஸா காய்ச்சல் குறித்து கடந்த வாரம் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழு வெளியிட்ட அறிவுரைகளில் கூறியிருப்பதாவது: மக்கள் தங்களது கைககளை நன்றாக சோப்பு போட்டுக் கழுவ வேண்டும். கூட்ட நெரிசல் உள்ள இடங்களுக்கு செல்வதைத் தவிர்க்க வேண்டும். அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும். இருமும் போதும், தும்மும் போதும் வாய்ப்பகுதியினை நன்றாக மூடிக் கொள்ள வேண்டும். அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும். கண் மற்றும் மூக்கினைத் தொடுவதைத் தவிர்க்க வேண்டும். மற்றவர்களுடன் கை குலுக்குவதைத் தவிர்க்க வேண்டும். பொது இடங்களில் எச்சில் துப்பக்கூடாது. மருத்துவரியின் பரிந்துரையின்றி எந்த ஒரு ஆண்டிபயாட்டிக் மாத்திரைகளையும் எடுத்துக்கொள்ளக் கூடாது. மிகவும் நெருக்கமாக அருகருகே அமர்ந்து சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும் எனக் கூறியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com