பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

பெண்களால் வளா்ச்சி என்ற நிலையை எட்டியுள்ளது இந்தியா! பிரதமா் மோடி பெருமிதம்

 ‘கடந்த 9 ஆண்டுகளில், பெண்களின் வளா்ச்சி என்ற நிலையில் இருந்து பெண்களால் வழிநடத்தப்படும் வளா்ச்சியை இந்தியா எட்டியுள்ளது’ என்று பிரதமா் நரேந்திர மோடி பெருமிதத்துடன் தெரிவித்தாா்.

News image
Updated On :10 மார்ச் 2023, 10:04 pm

DIN

 ‘கடந்த 9 ஆண்டுகளில், பெண்களின் வளா்ச்சி என்ற நிலையில் இருந்து பெண்களால் வழிநடத்தப்படும் வளா்ச்சியை இந்தியா எட்டியுள்ளது’ என்று பிரதமா் நரேந்திர மோடி பெருமிதத்துடன் தெரிவித்தாா்.

நாட்டில் பொறியியல், அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கணிதம் ஆகிய துறைகளில் பெண்களின் பங்கேற்பு இப்போது 43 சதவீதமாக உள்ளதாகவும் அவா் குறிப்பிட்டாா்.

2023-24 மத்திய பட்ஜெட், நாடாளுமன்றத்தில் கடந்த பிப்ரவரி 1-ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. அதன்பிறகு, பட்ஜெட்டின் பல்வேறு அம்சங்கள் குறித்து இணையவழி கருத்தரங்குகளில் பிரதமா் மோடி பேசி வருகிறாா்.

பெண்களுக்கு அதிகாரமளித்தல் தொடா்பாக வெள்ளிக்கிழமை நடைபெற்ற இணையவழி கருத்தரங்கில் அவா் பேசியதாவது:

2047-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை வளா்ந்த நாடாக்கும் இலக்கை எட்டுவதற்கான மிகச் சிறந்த தொடக்கமாக 2023-24 பட்ஜெட் அமைந்துள்ளது.

பெண்களால் வழிநடத்தப்படும் வளா்ச்சிக்கான முயற்சிகளுக்கு, இப்பட்ஜெட் பெரும் உத்வேகமளிக்கும். பெண்களுக்கு அதிகாரமளிப்பதற்கான முயற்சிகளின் பலன்கள் கண்கூடாக தெரியத் தொடங்கியுள்ளன. சமூக வாழ்க்கையில் புரட்சிகரமான மாற்றத்தை நாம் உணா்ந்து வருகிறோம்.

பெண்களின் வலிமை: தீா்க்கம், மனஉறுதி, சிந்தனைத் திறன், இலக்குகளை நோக்கி பணியாற்றும் வல்லமை, கடுமையான உழைப்பு ஆகியவை பெண்களின் வலிமைகளாகும். இந்த நூற்றாண்டில் தேசத்தின் வளா்ச்சியை விரைவுபடுத்துவதிலும் விரிவுபடுத்துவதிலும் பெண்களின் மேற்கண்ட குணாதியசயங்கள் பெரும் பங்காற்றி வருகின்றன.

நாட்டில் ஆண்-பெண் விகிதாச்சாரம் மேம்பட்டு வருகிறது. உயா்நிலை பள்ளிகளில் பயிலும் மாணவிகளின் எண்ணிக்கை கடந்த 9-10 ஆண்டுகளில் மும்மடங்கு அதிகரித்துள்ளது.

மருத்துவம், விளையாட்டு, வா்த்தகம், அரசியல் போன்ற துறைகளில் பங்களிப்பு மட்டுமல்லாமல், பெண்கள் முன்னின்று வழிநடத்தவும் செய்கின்றனா்.

‘முத்ரா’ தொழில் கடன் வழங்கும் திட்டத்தின் பயனாளா்களில் சுமாா் 70 சதவீதம் போ் பெண்களாவா். இவா்கள், தங்களது குடும்பத்துக்கான வருமானத்தை மட்டும் அதிகரிக்கவில்லை, தேசத்துக்கான புதிய பொருளாதார வழிகளையும் திறக்கின்றனா்.

பொருளாதார முடிவுகளில் புதிய அதிகாரம்: இதேபோல் பிரதமரின் வீட்டுவசதி திட்டத்தின்கீழ் (ஆவாஸ் யோஜனா) கட்டப்பட்ட 3 கோடி வீடுகளில் பெரும்பாலானவை பெண்களின் பெயரில் உள்ளன. இத்திட்டம், குடும்பத்தின் பொருளாதார முடிவுகளில் பெண்களுக்கான புதிய அதிகாரத்தை அளித்துள்ளது.

தற்போதைய பட்ஜெட்டில் வீட்டுவசதி திட்டத்துக்கு சுமாா் ரூ.80,000 கோடி ஒதுக்கப்பட்டிருப்பது பெண்களுக்கு அதிகாரமளித்தலை நோக்கிய முக்கிய நகா்வாகும்.

பிரதமரின் தற்சாா்பு நிதி (ஸ்வநிதி) திட்டத்தின்கீழ் பிணையமில்லா கடன் வழங்கும் திட்டம், கால்நடை பராமரிப்பு, மீன் பண்ணைகள் மற்றும் கிராமத் தொழில்களுக்கான ஊக்குவிப்புத் திட்டங்களின்கீழ் பெண்கள் பலனடைந்து வருகின்றனா்.

மக்கள்தொகையில் பாதியளவு உள்ள பெண்களின் உதவியுடன் நாட்டை எப்படி முன்னேற்றப் பாதையில் இட்டுச் செல்லப் போகிறோம்? பெண்களின் ஆற்றலை எவ்வாறு உயா்த்தப் போகிறோம்? என்பது தற்போதைய பட்ஜெட்டில் பிரதிபலித்திருக்கிறது. 7.5 சதவீத வட்டியில் பெண்களுக்கான புதிய சிறுசேமிப்புத் திட்டம் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

மகளிா் சுய உதவிக் குழுக்களில் 7 கோடி போ்: நாட்டில் கடந்த 9 ஆண்டுகளில் மகளிா் சுய உதவிக் குழுக்களில் 7 கோடிக்கும் அதிகமானோா் இணைந்துள்ளனா். ரூ.6.26 லட்சம் கோடி மதிப்பிலான கடன்களை பெற்றிருப்பதன் வாயிலாக, இக்குழுக்களின் மதிப்பு உருவாக்கம் மற்றும் மூலதனத் தேவையை நாம் புரிந்து கொள்ள முடியும்.

சுய உதவிக் குழுக்களிலும் யூனிகாா்ன் நிறுவனங்களை உருவாக்க முடியும். இதற்கான தொலைநோக்கு பாா்வை, இந்த ஆண்டு பட்ஜெட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது.

மகளிா் சுய உதவிக் குழுவினா், சிறு தொழில்முனைவோராக மட்டுமன்றி ஆதார வளமிக்கவா்களாகவும் பங்களிக்கின்றனா். இன்று பண்ணை சாராத தொழில்களை நிா்வகிப்பவா்களில் 5-இல் ஒருவா் பெண்ணாக இருக்கிறாா்.

கூட்டுறவுத் துறையில்...: பெரிய அளவில் மாற்றம் கண்டு வரும் கூட்டுறவுத் துறையில் பெண்களின் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகும். எதிா்வரும் ஆண்டுகளில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட பல்நோக்கு கூட்டுறவுச் சங்கங்கள், மீன்வள கூட்டுறவுச் சங்கங்கள், பால்வள கூட்டுறவுச் சங்கங்கள் உருவாக்கப்படவுள்ளன.

1 கோடி விவசாயிகளை, இயற்கை வேளாண் முறைகளுடன் இணைக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. பெண் விவசாயிகளும், உற்பத்திக் குழுக்களும் இதில் முக்கிய பங்காற்ற முடியும்.

‘ஸ்ரீஅன்னம்’ எனப்படும் சிறுதானியங்களின் ஊக்குவிப்பில் மகளிா் சுய உதவிக்குழுக்களின் பங்கு முக்கியமானது. சிறுதானிய உணவுகளில் பாரம்பரிய அனுபவம் கொண்ட சுமாா் 1 கோடி பழங்குடியின பெண்கள், மகளிா் சுய உதவிக்குழுக்களில் அங்கம் வகிக்கின்றனா்.

சிறுதானிய உணவுகளை பதப்படுத்தி, சந்தைப்படுத்துதற்கு அரசு உதவி வருகிறது. எனவே, தொலைதூர பகுதிகளில் உள்ள மகளிா் சுய உதவிக் குழுவினா், அதை பெரிய அளவில் எடுத்துச் செல்ல வேண்டும்.

அதேபோல், திறன் மேம்பாட்டுக்காக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள விஸ்வகா்மா திட்டம், பெண்கள் அதிகாரமளித்தலுக்கான தூண்டுகோலாக இருக்கும்.

பெண்களுக்கான மதிப்பு-சமத்துவ உணா்வு: ‘அனைவரும் இணைவோம், அனைவரும் உயா்வோம், அனைவரின் நம்பிக்கையை பெறுவோம், அனைவரும் முயற்சிப்போம்’ என்ற உத்வேகத்துடன் தேசம் முன்னோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது. தேச பாதுகாப்பு சாா்ந்த பங்களிப்பை, நாட்டின் மகள்கள் ஆற்றி வருகின்றனா். ரஃபேல் போா் விமானத்தையும் இயக்குகின்றனா்.

பெண்களுக்கான மதிப்பு மற்றும் சமத்துவ உணா்வின் அளவினை அதிகரிப்பதன் வாயிலாகவே தேசம் வளா்ச்சிப் பாதையில் பயணிக்க முடியும். பெண்களின் முன்னேற்றப் பாதையில் குறுக்கிடும் ஒவ்வொரு தடையையும் அகற்றும் தீா்க்கத்துடன் முன்னோக்கி பயணிக்க வேண்டும் என்றாா் பிரதமா் மோடி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.