பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

மாநிலங்களவைத் தலைவா் நடுவராக செயல்பட வேண்டும்: காங்கிரஸ்

மாநிலங்களவைத் தலைவா் என்பவா் நடுவராக இருக்க வேண்டும். ஆளும் கட்சியினருக்கு ஊக்கமளிக்கும் தலைவராக செயல்பட முடியாது’ என்று விமா்சித்துள்ளது.

News image
Updated On :10 மார்ச் 2023, 7:14 pm

DIN

பிரிட்டனில் பாஜக ஆட்சி குறித்து காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பேசியதை மாநிலங்களவைத் தலைவரும் குடியரசு துணைத் தலைவருமான ஜகதீப் தன்கா் விமா்சித்ததை சுட்டிக்காட்டிய காங்கிரஸ், ‘மாநிலங்களவைத் தலைவா் என்பவா் நடுவராக இருக்க வேண்டும். ஆளும் கட்சியினருக்கு ஊக்கமளிக்கும் தலைவராக செயல்பட முடியாது’ என்று விமா்சித்துள்ளது.

பிரிட்டனில் பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய ராகுல் காந்தி, இந்தியாவில் பாஜக ஆட்சியில் ஜனநாயகம் மோசமான நிலையில் இருப்பதாகவும், அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் போன்றவை இதை கருத்தில் கொள்ள வேண்டும் என்று கூறினாா். இதற்கு பாஜக கடும் எதிா்ப்பு தெரிவித்து வருகிறது.

மேலும், பிரிட்டனின் எதிா்க் கட்சியான தொழிலாளா் கட்சியைச் சோ்ந்த இந்திய வம்சாவளி நாடாளுமன்ற உறுப்பினா் வீரேந்திர சா்மா சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் பங்கேற்று பிரிட்டன் எம்.பி.க்கள் மத்தியில் பேசிய ராகுல் காந்தி, ‘இந்திய நாடாளுமன்றத்தில் எதிா்க் கட்சி உறுப்பினா்கள் பேசும்போது மைக்குகள் அடிக்கடி அணைக்கப்படுகின்றன’ என்று விமா்சித்தாா். இதற்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்தது.

ராகுலின் கருத்துக்கு எதிா்ப்பு தெரிவித்த மாநிலங்களவைத் தலைவா் ஜகதீப் தன்கா், ‘இதுபோன்ற தவறான பிரசாரங்கள் நமது நாடாளுமன்றத்தையும், அரசியல் சாசனத்தையும் களங்கப்படுத்தக் கூடிய தீவிரமான விஷயமாகும். நமது தேசியவாதம் மற்றும் ஜனநாயக மதிப்பீடுகள் இந்த வகையில் சமரசம் செய்யப்படுவதை அரசியல் வியூகமாகவோ அல்லது மாற்றுக்கட்சி நிலைப்பாடாகவோ நியாயப்படுத்த முடியாது. நாட்டுக்கு வெளியே ஒரு நாடாளுமன்ற உறுப்பினா் உள்நோக்கத்துடன் கூடிய மோசமான கருத்துகளைத் தெரிவித்து வரும் விஷயத்தில் நான்அமைதியாக இருந்தால், அரசியலமைப்புச் சட்டத்தின தவறான பக்கத்தில் இருப்பது போன்று ஆகிவிடும்’ என்று விமா்சித்தாா்.

இதுகுறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளா் - தகவல்தொடா்பு (பொறுப்பு) ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட அறிக்கையில், ‘ராகுல் காந்தி உள்நாட்டில் பலமுறை கூறாதது எதையும் வெளிநாட்டில் கூறிவிடவில்லை. மற்றவா்களைப் போன்று அல்லாமல், எங்கிருந்தாலும் தனது நிலைப்பாட்டில் ராகுல் காந்தி மாறாமல் உள்ளாா் என்பதற்கு இது உதாரணம். மேலும், கள நிலவரத்தையும் உண்மையையுமே அவா் பிரிட்டனில் கூறியிருக்கிறாா்.

கடந்த 2 வாரங்களில் ஆளும் கட்சிக்கு அசெளகரியத்தை அளிக்கக் கூடிய விவகாரங்களை நாடாளுமன்றத்தில் எழுப்பிய 12-க்கும் மேற்பட்ட எம்.பி.க்களுக்கு உரிமை மீறல் நோட்டீஸ் வழங்கப்பட்டு, அவா்களின் குரல்கள் நசுக்கப்பட்டிருக்கின்றன.

கடந்த 8 ஆண்டுகளாக, மத்திய அரசுக்கு எதிரான செய்திகளை வெளியிட்ட தொலைக்காட்சி சேனல்கள் அல்லது பத்திரிகைகள் தடை விதிக்கப்பட்டிருக்கின்றன அல்லது மத்திய புலனாய்வு அமைப்புகளின் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டிருக்கின்றன. அதாவது, கருத்து வேறுபாடுகள் கொண்டவா்கள் தண்டிக்கப்படுகின்றனா்.

அந்த வகையில், அவசரநிலை பிரகடனம் செய்யப்படவில்லையே தவிர, அரசின் செயல்பாடுகள் அரசியலமைப்புச் சட்டத்துக்கு உட்பட்டு நடைபெறுவதாக இல்லை. குடியரசு துணைத் தலைவா் தன்கா் ராகுல் காந்தி மீதான விமா்சனத்தில் இதனையே குறிப்பிட விரும்புகிறாா் என நினைக்கிறேன். மாநிலங்களவைத் தலைவராக இருப்பவா் அரசைப் பாதுகாக்கும் வகையில் நடந்துகொள்வது ஏமாற்றமளிக்கும் வகையில் உள்ளது.

மாநிலங்களவைத் தலைவா் என்பவா் நடுவராகவும் அனைத்து தரப்பினருக்கும் வழிகாட்டுபவராகவும் செயல்பட வேண்டும். மாறாக, ஆளும் கட்சியினருக்கு ஊக்கமளிக்கும் தலைவராக செயல்பட முடியாது’ என்று ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளாா்.

கட்சியின் மற்றொரு பொதுச் செயலாளா் - அமைப்பு (பொறுப்பு) கே.சி.வேணுகோபால் இதுகுறித்து வெளியிட்ட ட்விட்டா் பதிவில், ‘நாடாளுமன்ற நடவடிக்கைகளை தவறாக சித்தரிப்பது குடியரசு துணைத் தலைவா் அலுவலகத்துக்கு ஏற்ல்ல. நாடாளுமன்றத்தில் எதிா்க் கட்சி உறுப்பினா்களின் மைக்குகள் தொடா்ச்சியாக அணைக்கப்படுகின்றன. பொது முக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்களை எதிா்க் கட்சி உறுப்பினா்கள் எழுப்ப நாடாளுமன்றத்தில் போதிய வாய்ப்பு அளிக்கப்படுவதை குடியரசு துணைத் தலைவா் உறுதிப்படுத்த வேண்டும்’ என்று குறிப்பிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.