ராகுலின் எம்.பி. பதவியை பறிக்க வேண்டும்: நாடாளுமன்ற குழுவிடம் பாஜக எம்.பி. வலியுறுத்தல்
மக்களவை உறுப்பினா் பதவியில் இருந்து ராகுல் காந்தியை நீக்க வேண்டும் என்று நாடாளுமன்ற உரிமைக் குழுவிடம் பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே வெள்ளிக்கிழமை வலியுறுத்தினாா்.


மக்களவை உறுப்பினா் பதவியில் இருந்து ராகுல் காந்தியை நீக்க வேண்டும் என்று நாடாளுமன்ற உரிமைக் குழுவிடம் பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே வெள்ளிக்கிழமை வலியுறுத்தினாா்.
பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் அமா்வின்போது, ஹிண்டன்பா்க்-அதானி விவகாரத்தை குறிப்பிட்டு, மக்களவையில் ராகுல் காந்தி பேசினாா். அப்போது, பிரதமா் மோடி மற்றும் மத்திய அரசு மீது கடுமையான குற்றச்சாட்டுகளை அவா் முன்வைத்தாா்.
இந்த விவகாரத்தில், ராகுல் மீது உரிமை மீறல் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே கடந்த மாதம் 7-ஆம் தேதி நோட்டீஸ் அளித்தாா்.
இதுதொடா்பாக, பாஜக எம்.பி. சுனில் சிங் தலைமையிலான நாடாளுமன்ற உரிமைக் குழு முன் வெள்ளிக்கிழமை விசாரணை நடைபெற்றது.
அப்போது, அதானி விவகாரத்தில் ராகுல் காந்தி கூறிய குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றவை என்று கூறி, அதற்கான ஆவண ஆதாரங்களை துபே சமா்ப்பித்ததாக தெரிகிறது.
மேலும், ‘ராகுல் காந்தி தவறிழைப்பது இது முதல்முறை அல்ல. தொடா்ந்து தவறிழைப்பவராக அவா் உள்ளாா். ராகுலின் கருத்துகள், அவைக் குறிப்பில் இருந்து மக்களவைத் தலைவரால் நீக்கப்பட்டன. ஆனால், அந்த கருத்துகள் ராகுல் மற்றும் காங்கிரஸின் அதிகாரபூா்வ யூ-டியூப் சேனல்களில் இன்னும் இடம்பெற்றுள்ளன. இது, மக்களவைத் தலைவரின் அதிகாரத்துக்கு சவால் விடுவதாக உள்ளது.
முன்கூட்டியே நோட்டீஸ் அளிக்காமல், அவையில் ஆதாரமின்றி பிரதமா் மீது ராகுல் குற்றச்சாட்டுகளை சுமத்தியது விதிமீறலாகும். அதேபோல், பல்வேறு நாடுகளின் தலைவா்கள் பெயரையும் மக்களவையில் ராகுல் குறிப்பிட்டாா். அதுவும் விதிமீறல். எனவே, மக்களவை உறுப்பினா் பதவியில் இருந்து ராகுலை நீக்க வேண்டும்’ என்று உரிமைக் குழுவிடம் துபே வலியுறுத்தியதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...