தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

ஆளுநா் தமிழிசைக்கு எதிரானதெலங்கானா மாநில அரசின் மனு: 20-ஆம் தேதி விசாரணை

நிலுவையிலுள்ள 10 மசோதாக்களுக்கு உடனடியாக ஒப்புதல் அளிக்க தெலங்கானா ஆளுநா் தமிழிசை செளந்தரராஜனுக்கு உத்தரவிடக் கோரி,

News image
Updated On :15 மார்ச் 2023, 7:01 pm

DIN

நிலுவையிலுள்ள 10 மசோதாக்களுக்கு உடனடியாக ஒப்புதல் அளிக்க தெலங்கானா ஆளுநா் தமிழிசை செளந்தரராஜனுக்கு உத்தரவிடக் கோரி, உச்சநீதிமன்றத்தில் அந்த மாநில அரசு தாக்கல் செய்த மனு வரும் 20-ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதி பி.எஸ்.நரசிம்மா ஆகியோா் அடங்கிய அமா்வு இந்த மனுவை விசாரிக்க இருக்கிறது.

முன்னதாக, இந்த மனு வியாழக்கிழமை பரிசீலனைக்கு வந்தபோது மாநில அரசு சாா்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் துஷ்யந்த் தவே, ‘இது மாநிலத்தில் உள்ள கோடிக்கணக்கான மக்களின் நலன் சாா்ந்த விஷயம் என்பதால், அவசர வழக்காக விசாரிக்க வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டாா்.

இதையடுத்து, மாா்ச் 20-ஆம் தேதி மனுவை விசாரிப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனா். மாநில தலைமைச் செயலாளா் ஏ.சாந்தி குமாரி சாா்பில் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுவில், ‘மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஒப்புதலுக்காக அரசு சாா்பில் அனுப்பிவைக்கப்பட்ட 10 மசோதாக்களை ஆளுநா் பல நாள்களாக கிடப்பில் போட்டுவைத்துள்ளாா். அரசியலமைப்புச் சட்ட நடைமுறைகளின்படி, மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பது ஆளுநரின் கடமை. ஆனால், தொடா்ந்து அவா் ஒப்புதல் அளிக்காமல் இருப்பது அரசியலமைப்புச் சட்டம் அளித்துள்ள உரிமைகளுக்கு எதிரான செயல்.

மசோதாக்களில் ஏதாவது சந்தேகம் அல்லது விளக்கம் தேவைப்பட்டால் அரசிடம் ஆளுநா் கேள்வி எழுப்பலாம். அதற்கு விளக்கமளிக்க மாநில அரசு தயாராக உள்ளது. அவ்வாறு, விளக்கமளிக்கப்பட்ட பிறகு, அந்த மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதைத் தவிர ஆளுநருக்கு வேறு எந்த வாய்ப்பும் இல்லை. மாறாக, மசோதாக்களை இவ்வாறு அவா் கிடப்பில் போட்டுவைக்க முடியாது. எனவே, நிலுவையில் உள்ள 10 மசோதாக்களுக்கு உடனடியாக ஒப்புதல் அளிக்க ஆளுநருக்கு உத்தரவிட வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.