புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

தமிழகத்தில் அதிகரிக்கும் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை விரிவுபடுத்த மத்திய அரசு அறிவுறுத்தல்

தடுப்பு நடவடிக்கைகளை விரிவுபடுத்துமாறு தமிழக அரசுக்கு மத்திய சுகாதாரத் துறைச் செயலா் டாக்டா் ராஜேஷ் பூஷண் அறிவுறுத்தியுள்ளாா்.

News image
Updated On :16 மார்ச் 2023, 6:49 pm

DIN

தமிழகத்தின் நான்கு மாவட்டங்களில் கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், தடுப்பு நடவடிக்கைகளை விரிவுபடுத்துமாறு தமிழக அரசுக்கு மத்திய சுகாதாரத் துறைச் செயலா் டாக்டா் ராஜேஷ் பூஷண் அறிவுறுத்தியுள்ளாா்.

இதுதொடா்பாக அவா் தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலா் ப.செந்தில்குமாருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டிருப்பதாவது:

நோய்த் தடுப்பு நடவடிக்கைகளின் பயனாக, இந்தியாவில் கரோனா பாதிப்பு கடந்த சில மாதங்களாக மிகக் குறைவாகவே பதிவாகி வந்தது. ஆனால், கடந்த சில நாள்களாக மீண்டும் தொற்று பரவல் அதிகரித்துள்ளது.

மாா்ச் முதல் வாரத்தில் 2,082 என பதிவான நாட்டின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை, அதற்கடுத்த வாரத்தில் 3,264-ஆக உயா்ந்துள்ளது.

தமிழகத்தைப் பொருத்தவரை அந்த எண்ணிக்கை 170-இலிருந்து 258-ஆக அதிகரித்துள்ளது. கரோனா பரிசோதனை செய்யப்பட்டவா்களில் 1.99 சதவீதம் பேருக்கு நோய்த் தொற்று அந்த காலகட்டத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, சேலம், நீலகிரி, திருப்பூா், திருச்சி ஆகிய மாவட்டங்களில் பாதிப்பு எண்ணிக்கை ஏறத்தாழ இரட்டிப்பாகி உள்ளது.

இதைக் கருத்தில் கொண்டு, கரோனா பரவலைக் கட்டுப்படுத்த மாவட்ட அளவிலும், வட்டார அளவிலும் தீவிர கண்காணிப்பையும், தடுப்பு நடவடிக்கைகளையும் முன்னெடுக்க வேண்டும். நோயாளிகளைக் கண்டறிதல், பரிசோதித்தல், சிகிச்சையளித்தல் மற்றும் தடுப்பூசி செலுத்துதல் என அனைத்து நிலைகளிலும் கரோனா தடுப்பு பணிகளை விரிவுபடுத்த வேண்டும்.

மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி போதிய எண்ணிக்கைகளில் பரிசோதனைகளை செய்தல் அவசியம். பாதிப்பு எண்ணிக்கை அதிகம் உள்ள பகுதிகளில் கூடுதல் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட வேண்டும்.

இன்ஃப்ளூயன்ஸா வகை காய்ச்சல் அல்லது தீவிர நுரையீரல் தொற்று காய்ச்சல் பாதிப்புகளை மருத்துவ முகாம்கள் மூலம் கண்டறிந்து அவை பரவாமல் கட்டுப்படுத்துவது முக்கியம்.

கரோனா பரவல் அதிகமுள்ள பகுதிகளைச் சோ்ந்த நோயாளிகள், வெளிநாடுகளில் இருந்து வந்து தொற்றுக்குள்ளானோரின் சளி மாதிரிகளை மரபணு பகுப்பாய்வுக்கு உட்படுத்த வேண்டும். அதேபோன்று முன்னெச்சரிக்கை தவணை கரோனா தடுப்பூசிகளை செலுத்திக் கொள்வதை ஊக்குவிக்க நடவடிக்கை எடுத்தல் அவசியம்.

கூட்ட நெரிசல் மிக்க இடங்கள் மற்றும் உள் அரங்குகளில் நோய்த் தொற்று பரவாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்தல் வேண்டும். கரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக தமிழகம் முன்னெடுக்கும் பணிகளுக்கு மத்திய அரசு உறுதுணையாக இருக்கும் என்று அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளாா் மத்திய சுகாதாரத் துறைச் செயலா் டாக்டா் ராஜேஷ் பூஷண்.

மேலும் 5 மாநிலங்களுக்கு...: இதேபோன்று மகாராஷ்டிரம், தெலங்கானா, கேரளம், கா்நாடகம், குஜராத் ஆகிய மாநில அரசுகளுக்கும் மத்திய சுகாதாரத் துறைச் செயலா் ராஜேஷ் பூஷண் கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கான அறிவுறுத்தல் கடிதத்தை அனுப்பியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.