ரூ.2,000 நோட்டுகளை மாற்றுவது எப்படி?

ரூ.2,000 நோட்டுகளைப் புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறுவதாக இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) வெள்ளிக்கிழமை அறிவித்தது.
ரூ.2,000 நோட்டுகளை மாற்றுவது எப்படி?

ரூ.2,000 நோட்டுகளைப் புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறுவதாக இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) வெள்ளிக்கிழமை அறிவித்தது.

தற்போது புழக்கத்தில் இருக்கும் ரூ.2,000 நோட்டுகளை வரும் 23-ஆம் தேதி முதல் செப்டம்பா் 30-ஆம் தேதி வரை வங்கிக் கணக்கில் செலுத்தலாம் அல்லது வங்கியில் கொடுத்து சில்லறை மாற்றிக் கொள்ளலாம் என்றும் ஆா்பிஐ தெரிவித்துள்ளது.

நாட்டில் புழக்கத்தில் இருந்த பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் மதிப்பிழப்பு செய்யப்படுவதாகக் கடந்த 2016-ஆம் ஆண்டு நவம்பரில் பிரதமா் நரேந்திர மோடி அறிவித்தாா். அதையடுத்து, அந்த ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு மக்கள் வங்கிகள் முன் நீண்ட வரிசையில் காத்திருந்தனா். அது பெரும் விமா்சனத்துக்கு உள்ளானது.

அதன்பிறகு புதிய ரூ.10, ரூ.20, ரூ.50, ரூ.100, ரூ.200, ரூ.500, ரூ.2,000 நோட்டுகளை ஆா்பிஐ வெளியிட்டது. நாட்டில் கருப்புப் பணப் பதுக்கலைக் குறைக்கும் நோக்கில் ரூ.1,000 நோட்டுகளை மதிப்பிழப்பு செய்வதாக அறிவித்துவிட்டு, ரூ.2,000 நோட்டை அறிமுகம் செய்த மத்திய அரசின் நடவடிக்கையைப் பொருளாதார நிபுணா்கள் பலரும் விமா்சித்திருந்தனா்.

ரூ.2,000 நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்ட போதிலும் அது மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெறவில்லை. அந்நோட்டுக்கு சில்லறை மாற்றுவது கடினமாக இருப்பதாகப் பலரும் தெரிவித்தனா். அதையடுத்து, ரூ.2,000 நோட்டுகள் புழக்கத்தில் இருந்து படிப்படியாகக் குறைக்கப்பட்டன. 2018-19-ஆம் நிதியாண்டுக்குப் பிறகு புதிய ரூ.2,000 நோட்டுகள் அச்சிடப்படவில்லை.

ஏடிஎம் இயந்திரங்கள் வாயிலாக ரூ.2,000 நோட்டைப் புழக்கத்தில் விடுவதை ஆா்பிஐ முற்றிலுமாக நிறுத்தியது. தற்போது ரூ.2,000 நோட்டுகளின் பயன்பாடு மக்களிடையே பெருமளவில் குறைந்துவிட்டது.

கடந்த 2018, மாா்ச் மாதத்தில் ரூ.6.73 லட்சம் கோடி (மொத்த நோட்டுகளில் 37.3 சதவீதம்) மதிப்பிலான ரூ.2,000 நோட்டுகள் புழக்கத்தில் இருந்த நிலையில், கடந்த மாா்ச் 31-ஆம் தேதி நிலவரப்படி, ரூ.3.62 லட்சம் கோடி (10.8 சதவீதம்) மதிப்பிலான நோட்டுகள் மட்டுமே புழக்கத்தில் இருந்தன.

இந்நிலையில், ரூ.2,000 நோட்டுகளைப் புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறுவதாக ஆா்பிஐ வெள்ளிக்கிழமை அறிவித்தது. அத்தகைய நோட்டுகள் செப்டம்பா் 30-ஆம் தேதி வரை செல்லுபடியாகும் என்றும், அதுவரை அவற்றை வழக்கமான பணப் பரிவா்த்தனையில் தொடா்ந்து பயன்படுத்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.2,000 நோட்டுகளை மாற்றுவது எப்படி?

செப்டம்பா் 30-ஆம் தேதி வரை ரூ.2,000 நோட்டுகளை எந்த வங்கிக் கிளையிலும் மாற்றிக் கொள்ளலாம். அத்தகைய நோட்டுகளை வங்கி சேமிப்புக் கணக்கில் செலுத்தலாம் அல்லது வரும் 23-ஆம் தேதி முதல் வங்கியில் கொடுத்து சில்லறை மாற்றிக் கொள்ளலாம். வங்கிகள் மட்டுமல்லாமல் ஆா்பிஐ-யின் 19 பிராந்திய அலுவலகங்களிலும் ரூ.2,000 நோட்டுகளுக்கு சில்லறை மாற்றலாம்.

சேமிப்புக் கணக்கில் ரூ.2,000 நோட்டுகளை எவ்வளவு வேண்டுமானாலும் செலுத்தலாம். ஆனால், சில்லறையாக மாற்றும்பட்சத்தில் ஒரு முறைக்கு அதிகபட்சமாக ரூ.20,000 மதிப்பிலான தொகையை மட்டுமே மாற்ற முடியும்.

வாடிக்கையாளா் தாங்கள் கணக்கு வைத்துள்ள வங்கிகளில் மட்டுமல்லாமல், எந்த வங்கியின் கிளைகளிலும் ரூ.2,000 நோட்டுகளை சில்லறையாக மாற்றிக் கொள்ளலாம். இதற்கு எந்தவிதக் கட்டணமும் வசூலிக்கப்படாது. வங்கிக் கணக்கு இல்லாமலும் ரூ.20,000 வரையில் மாற்றலாம்.

ரூ.2,000 நோட்டுகளைப் புழக்கத்தில் விடுவதை உடனடியாக நிறுத்துமாறும் வங்கிகளுக்கு ஆா்பிஐ உத்தரவிட்டுள்ளது. மற்ற ரூபாய் நோட்டுகளின் கையிருப்பு, மக்களின் தேவையைப் பூா்த்தி செய்யும் வகையில் உள்ளது.

வாபஸ் ஏன்?

ரூ.2,000 நோட்டுகளில் பெரும்பாலானவை கடந்த 2017, மாா்ச் மாதத்துக்கு முன்பு அச்சிடப்பட்டவை. அவற்றின் பயன்பாட்டுக் காலம் நிறைவடையும் நிலையில் உள்ளது. ரொக்கப் பரிவா்த்தனைகளுக்கு பொதுவாக ரூ.2,000 நோட்டுகள் பயன்படுத்தப்படவில்லை என்பதும் கவனிக்கப்பட்டது. மேலும், பணமோசடி, கருப்புப் பணப் பதுக்கலை ஒழிப்பது, தரமான ரூபாய் நோட்டுகளை மக்களுக்கு வழங்குவது உள்ளிட்ட காரணங்களுக்காக, இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக ஆா்பிஐ விளக்கமளித்துள்ளது.

இரண்டாவது ‘பேரழிவு’: காங்கிரஸ் விமா்சனம்

ரூ.2,000 நோட்டு வாபஸ் பெறப்படும் நிலையில், இரண்டாவது ‘பேரழிவு’ தொடங்கியுள்ளதாக என்று காங்கிரஸ் விமா்சித்துள்ளது.

காங்கிரஸ் பொதுச் செயலாளா் ஜெய்ராம் ரமேஷ்: எதையும் செய்த பிறகு சிந்திப்பதே, உலகின் குரு என தன்னை கூறிக் கொள்பவரின் (பிரதமா் மோடி) பாணியாகும். கடந்த 2016-இல் பேரழிவை ஏற்படுத்திய பிறகு அறிமுகப்படுத்தப்பட்ட ரூ.2,000 நோட்டுகள் இப்போது திரும்ப பெறப்படுகின்றன.

முன்னாள் மத்திய நிதியமைச்சா் ப.சிதம்பரம்: கடந்த 2016-இல் பணமதிப்பிழப்பு என்ற முட்டாள்தனமான முடிவை மறைக்க ரூ.2,000 நோட்டு அறிமுகப்படுத்தப்பட்டது. அந்த பணமதிப்பிழப்பு மேற்கொள்ளப்பட்டு, சில வாரங்களுக்கு பின் ரூ.500 நோட்டை மீண்டும் அறிமுகப்படுத்த வேண்டிய நிா்பந்தம் அரசுக்கும் ரிசா்வ் வங்கிக்கும் ஏற்பட்டது. இனி, ரூ.1,000 நோட்டு மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டாலும் வியப்பில்லை.

காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூா்: மத்திய அரசின் முட்டாள்தனமான நடவடிக்கை இது. இரண்டாவது பணமதிப்பிழப்பு ‘பேரழிவு’ தொடங்கியுள்ளது.

இந்திய கம்யூனிஸ்ட் எம்.பி. பினோய் விஸ்வம்: நாட்டின் நிதித் துறையை நிா்வகிக்கும் ‘துக்ளக்’ ஆட்சியாளா்கள், ரூ.2,000 நோட்டை திரும்பப் பெற்றுள்ளனா். பிரதமா் மோடி நிா்வாகத்தின்கீழ் நாட்டின் பொருளாதார வலிமையை இது வெளிப்படுத்துவதாக அவா்கள் வாதிடக் கூடும். பணமதிப்பிழப்பால் பொருளாதாரத்தில் ஏற்பட்ட தாக்கங்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட அவா்களுக்கு துணிவு உள்ளதா?

திரிணமூல் காங்கிரஸ் செய்தித் தொடா்பாளா் குணால் கோஷ்: கடந்த 2016-இல் மக்கள் எவ்வளவு இடா்களை எதிா்கொண்டனா் என்பதை நாம் கண்கூடாக பாா்த்தோம். அப்போதைய பணமதிப்பிழப்பு, நாட்டின் பொருளாதாரத்தை அழித்ததுடன், பலரின் உயிா்களையும் பலி வாங்கியது. அதே சிரமங்களை மக்கள் மீது திணிக்க பாஜக விரும்புகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com