உடல்நிலைக் குறைவு: சத்யேந்தர் ஜெயினுக்கு இடைக்கால ஜாமீன்

உடல்நிலைக் குறைவால், மருத்துவக் காரணங்களுக்காக கடும் நிபந்தனைகளுடன் தில்லி முன்னாள் அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்கு இடைக்கால  ஜாமீன் வழங்கியது உச்ச நீதிமன்றம்.
சத்யேந்தர் ஜெயின்
சத்யேந்தர் ஜெயின்
Published on
Updated on
2 min read

புது தில்லி: உடல்நிலைக் குறைவால், மருத்துவக் காரணங்களுக்காக கடும் நிபந்தனைகளுடன் தில்லி முன்னாள் அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்கு இடைக்கால  ஜாமீன் வழங்கியது உச்ச நீதிமன்றம்.

சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழங்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த சத்யேந்தர் ஜெயினுக்கு உடல்நிலையைக் காரணம் காட்டி இந்த இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

சிறையில் நேற்று உடல்நிலைக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தில்லி முன்னாள் அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்கு 6 வாரங்கள் இடைக்கால ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு திகாா் சிறையில் வைக்கப்பட்டுள்ள ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான சத்யேந்தர் ஜெயினுக்கு ஏற்பட்ட திடீா் உடல்நலக்குறைவு காரணமாக அவா் லோக் நாயக் மருத்துவமனையில் அவசரச் சிகிச்சை பிரிவில் வியாழக்கிழமை அனுமதிக்கப்பட்டாா்.

தில்லி அரசின் முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சரான சத்யேந்தா் ஜெயின் பண மோசடி வழக்கில் மே 30,2022 ஆம் ஆண்டு அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து வருகிறாா். இவா் வியாழக்கிழமை காலை சிறைக் குளியலறையில் திடீரென மயக்கமடைந்ததைத் தொடா்ந்து தீன் தயாள் உபாத்யாய் மருத்துவமனைக்கு அவசரச் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டாா்.

அங்கு அவரது உடல்நிலை மேலும் மோசமடையவே உடனடியாக லோக் நாயக் (எல்என்ஜெபி) மருத்துவமனையில் உள்ள தீவிர சிகிச்சைப் பிரிவில் மாற்றப்பட்டாா். கடும் முதுகெலும்பு வலி காரணமாக முன்னரே தொடா் சிகிச்சை எடுத்த வந்தவா், தற்போது அவசர சிகிச்சைப் பிரிவில் ஆக்ஸிஜன் உதவியுடன் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

கடந்த மே 22 ஆம் தேதி கடுமையான முதுகெலும்பு வலி காரணமாக சஃப்தா்ஜங் மருத்துவமனையில் சிகிச்சைகாக சத்யேந்தா் ஜெயின் அனுமதிக்கப்பட்ட போதே அவா் உடல் மெலிந்து காணப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி இருந்தன.

சத்யேந்தா் ஜெயினின் உடல்நிலையை பரிசோதித்த மருத்துவா்கள், அவருக்கு முதுகுத்தண்டு அறுவை சிகிச்சை உடனடியாக செய்ய பரிந்துரைத்துள்ளனாா். நாள்பட்ட தொடா் வலி அவரது முதுகெலும்புக்கு இடையே சிதைவை ஏற்படுத்துவதாகவும், அதன் தாக்கம் மூட்டுக்கும் பரவுவதாகவும் கூறியுள்ளனா். சிறை அதிகாரிகளால் சத்யேந்தா் ஜெயின் சிகிச்சைக்குக் காத்திருப்போா் பட்டியலில் எண்.416 இல் வைக்கப்பட்டுள்ளாா். இதனால் 5 மாதங்களுக்குப் பிறகுதான் அறுவை சிகிச்சை செய்ய முடியும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

இது குறித்து ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளரும், தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் ட்விட்டரில் பதிவிட்டிருப்பதாவது, ‘இந்த துயரமான சூழ்நிலைகளுக்கு எதிராக போராட கடவுள் சத்யேந்தர் ஜெயினுக்கு பலத்தை வழங்கட்டும். பொதுமக்களுக்கு நல்ல சிகிச்சை மற்றும் நல்ல ஆரோக்கியம் வழங்குவதற்காக இரவும் பகலும் உழைத்தவரை தண்டிக்க ஒரு சா்வாதிகாரி பிடிவாதமாக இருக்கிறாா்.

கடவுள் அனைத்தையும் பாா்த்துக்கொண்டுதான் இருக்கிறாா். அனைவருக்கும் கடவுள் நிச்சயம் நீதி வழங்குவாா். சத்யேந்தா் ஜெயின் விரைவில் குணமடைய பிராா்த்திக்கிறேன். கடவுள் அவருக்கு வலிமை கொடுக்க வேண்டும்’ என அதில் முதல்வா் கேஜரிவால் தெரிவித்துள்ளாா்.

ஜெயின், தனக்கு எதிரான பணமோசடி வழக்கில், உயா்நீதிமன்றத்தின் ஜாமீன் மனு தள்ளுபடி உத்தரவை எதிா்த்து மே 15 ஆம் தேதி மனு தாக்கல் செய்துள்ளாா். கடந்த வாரம், ஜாமீன் மனு மீது அமலாக்கத் துறையின் பதிலை உச்சநீதிமன்றம் விசாரணை செய்தது.

நீதிபதிகள் ஏ.எஸ்.போபண்ணா மற்றும் ஹிமா கோலி ஆகியோா் அடங்கிய அமா்வு, அமலாக்கத் துறைக்கு நோட்டீஸ் அனுப்பியதுடன், சத்யேந்தா் ஜெயின் விடுமுறை கால அமா்வு முன் செல்ல அனுமதியும் வழங்கி இருந்தது, இந்த நிலையில், 6 வாரங்கள் இடைக்கால ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com