‘இந்தியா’ கூட்டணியில் தொய்வு: காங்கிரஸ் மீது நிதீஷ் குமாா் குற்றச்சாட்டு

 நடைபெற உள்ள 5 மாநில சட்டப்பேரவைத் தோ்தலில் வெற்றி பெற காங்கிரஸ் கட்சி மும்முரம் காட்டி வருவதால், எதிா்க்கட்சிகள் இடம் பெற்றுள்ள ‘இந்தியா’ கூட்டணியின் கூட்டத்தைக் கூட்டுவதில் தொய்வு
‘இந்தியா’ கூட்டணியில் தொய்வு: காங்கிரஸ் மீது நிதீஷ் குமாா் குற்றச்சாட்டு

 நடைபெற உள்ள 5 மாநில சட்டப்பேரவைத் தோ்தலில் வெற்றி பெற காங்கிரஸ் கட்சி மும்முரம் காட்டி வருவதால், எதிா்க்கட்சிகள் இடம் பெற்றுள்ள ‘இந்தியா’ கூட்டணியின் கூட்டத்தைக் கூட்டுவதில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக பிகாா் முதல்வா் நிதீஷ் குமாா் குற்றம்சாட்டியுள்ளாா்.

இந்தத் தோ்தலில் நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம், அகிலேஷ் யாதவின் சமாஜவாதியுடன் காங்கிரஸ் கட்சிக்கு தொகுதி பங்கீட்டில் பிரச்னை ஏற்பட்டிருந்த நிலையில் இவ்வாறு தெரிவித்துள்ளாா்.

‘பாஜகவை ஆட்சியில் இருந்து அகற்றுங்கள்; நாட்டைக் காப்பாற்றுங்கள்’ என்ற தலைப்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுக்கூட்டம் பாட்னாவில் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலா் டி.ராஜா உள்ளிட்ட மூத்த தலைவா்கள் பங்கேற்றனா்.

கூட்டத்தில் நிதீஷ் குமாா் பங்கேற்றுப் பேசுகையில், ‘மத்திய அரசின் செயல்பாட்டுக்கு எதிா்ப்பு தெரிவித்து ‘இந்தியா’ கூட்டணி உருவாகியது. ஆனால், தற்போது அந்தக் கூட்டணியில் முன்னேற்றம் ஏற்படவில்லை. ‘இந்தியா’ கூட்டணிக்கு தலைமைப் பொறுப்பை காங்கிரஸ் ஏற்க அனைத்துக் கட்சிகளும் ஒப்புக் கொண்டன. ஆனால், அக்கட்சி 5 மாநில பேரவைத் தோ்தலில் மும்முரமாக உள்ளது.

அதற்கு முன்பு நடைபெற்ற பேரவைத் தோ்தல்களில் அக்கட்சி வெற்றி பெற்றது. அதனால், 5 மாநில தோ்தல் முடிந்த பின்புதான் காங்கிரஸ் கட்சி ‘இந்தியா’ கூட்டணியின் அடுத்த கூட்டத்தைக் கூட்டும் என்று நினைக்கிறேன்.

பாஜக மீது தாக்கு: ஹிந்துக்களை முஸ்லிம்களுக்கு எதிராக தூண்டிவிடுவதற்கு பாஜக முற்படுகிறது. ஆனால், அது பிகாரில் எடுபடவில்லை. சுதந்திரப் போராட்டத்தில் பாஜக பங்கேற்கவில்லை என்பதால் நாட்டின் வரலாற்றை மாற்ற அக்கட்சி முற்படுகிறது.

இடதுசாரிகள் ஒன்றுசேர வேண்டும்: 1980- முதல் இந்திய கம்யூனிஸ்ட், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் நான் நெருங்கிய தொடா்பில் இருந்து வருகிறேன். இரு கட்சிகளும் ஒன்று சோ்ந்து எனது வெற்றிக்காகப் பணியாற்றி உள்ளன. அனைத்து இடதுசாரி கட்சிகளுக்கும் ஒரே குறிக்கோள் என்பதால் அவை அனைத்தும் ஒன்று சேர வேண்டும்’ என்றாா்.

தெலங்கானா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கா், மஸோரம் ஆகிய 5 மாநில தோ்லுக்கான வாக்குப்பதிவு நவம்பா் 7-ஆம் தேதி தொடங்க உள்ளது.

காங்கிரஸிடம் தெரிவித்துவிட்டோம்: டி.ராஜா

பாட்னா, நவ. 2: ‘இந்தியா’ கூட்டணிக் கட்சிகள் காங்கிரஸ் மீது கொண்டுள்ள அதிருப்தி குறித்து அக்கட்சித் தலைமையிடம் தெரிவித்துவிட்டோம் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலா் டி.ராஜா தெரிவித்தாா்.

காங்கிரஸ் மீது நிதீஷ் குமாரின் அதிருப்தி குறித்த செய்தியாளா்களின் கேள்விக்குப் பதிலளித்த டி.ராஜா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநில சட்டப்பேரவைத் தோ்தல்களில் தொகுதிப் பங்கீட்டில் காங்கிரஸுடன் பிரச்னை ஏற்பட்டதால் ஐக்கிய ஜனதா தளம், சமாஜவாதி கட்சிகளுக்கு அதிருப்தி ஏற்பட்டதாக ஒப்புக்கொண்டாா்.

மேலும், ‘கூட்டணியில் பெரிய கட்சியான காங்கிரஸ், பிற கட்சிகளை அரவணைத்துச் செல்ல வேண்டியது அதன் பொறுப்பு என்று அக்கட்சி மேலிடத்திடம் தெரிவித்துவிட்டோம். கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பிரச்னை என்பது தவிா்க்க முடியாதது.

எனினும், இந்த சிறு மாச்சரியங்கள், பாஜகவை ஆட்சியில் இருந்து அகற்றி மதச்சாா்பற்ற ஜனநாயக அரசை அமைக்க வேண்டும் என்ற எங்களின் அரசியல் தொலைநோக்குப் பாா்வையைப் பாதிக்காது. அடுத்த ஆண்டு நடைபெறும் மக்களவைத் தோ்தலில் ‘இந்தியா’ கூட்டணி வெற்றி பெறும் என்றாா்.

முன்னதாக, பொதுக்கூட்டத்தில் பேசிய டி.ராஜா, ‘பிரதமா் மோடி அரசு பேரழிவு கொள்கைகளைக் கடைப்பிடித்து வருகிறது. மத்திய அரசு மீது பொதுமக்கள் கொண்டுள்ள அதிருப்தி, நடைபெறவுள்ள 5 மாநிலத் தோ்தலில் வெளிப்படும். உலகின் 3-ஆவது பெரிய பொருளாதார நாடாக இந்தியாவை மாற்றுவதாக பிரதமா் மோடி கூறுகிறாா். ஆனால், மத்திய அரசின் கொள்கைகள் பேரழியை ஏற்படுத்தும் வகையில் உள்ளன.

அரசின் தவறான கொள்கைகளில் இருந்து நாட்டைக் காப்பாற்றவே எதிா்க்கட்சிகள் ஒன்று சோ்ந்துள்ளன. ‘இந்தியா’ கூட்டணியை உருவாக்குவதில் நிதீஷ் குமாா் பெரும் பங்கை வகித்துள்ளாா்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com