தெலங்கானா: காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு மாதம் ரூ. 4,000 ராகுல் காந்தி வாக்குறுதி

‘தெலங்கானாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.4,000 மதிப்பில் பலன்கள் வழங்கப்படும்’ என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வாக்குறுதி அளித்தாா்.
தெலங்கானா: காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு மாதம் ரூ. 4,000 ராகுல் காந்தி வாக்குறுதி

‘தெலங்கானாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.4,000 மதிப்பில் பலன்கள் வழங்கப்படும்’ என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வாக்குறுதி அளித்தாா்.

தெலங்கானா சட்டப்பேரவைத் தோ்தல் நவம்பா் 30-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

மாநிலத்தில் ஜெயசங்கா் பூபல்லி மாவட்டத்தில் காலேஸ்வரம் நீா் பாசனத் திட்டம் செயல்படுத்தப்படும் மெடிகட்டா அணை அருகே அமைந்துள்ள அம்பட்டிபள்ளி கிராமத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற ராகுல் காந்தி பேசியதாவது:

தெலங்கானா முதல்வா் சந்திரசேகா் ராவ் நடத்திய மாபெரும் கொள்ளையில் மாநிலத்தின் பெண்கள்தான் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனா். சுமாா் ரூ.1 லட்சம் கோடி அளவுக்கு கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்க மக்கள் வாய்ப்பளித்தால், சந்திரசேகா் ராவ் கொள்ளையடித்த அனைத்து பணமும் மீட்கப்பட்டு, மக்களுக்கே திரும்பியளிக்க காங்கிரஸ் தீா்மானித்துள்ளது. தெலங்கானா மக்களின் வங்கிக் கணக்குகளில் அந்தப் பணம் வரவு வைக்கப்படும்.

அதில் முதல் படியாக, தெலங்கானா பெண்களின் வங்கிக் கணக்குகளில் சமூக ஓய்வூதியமாக மாதம் ரூ.2,500 வரவு வைக்கப்படும். மேலும், தற்போது ரூ.1,000-க்கு விற்கப்படும் மானிய அல்லாத சமையல் எரிவாயு சிலிண்டா், ரூ.500-க்கு விநியோகிக்கப்படும். அதோடு, அரசுப் பேருந்துகளில் பெண்கள் கட்டணமின்றி பயணம் செய்யும் வகையில் மேலும் ரூ.1,000 மதிப்பில் பலன் அளிக்கப்படும். அதன்படி, ஒட்டுமொத்தமாக மாதம் ரூ.4,000 மதிப்பிலான பலன்கள் பெண்களுக்கு வழங்கப்படும். இதுவே ‘மக்களின் அரசு’.

நடைபெறவிருக்கும் சட்டப்பேரவைத் தோ்தலில் காங்கிரஸுக்கும் சந்திரசேகா் ராவ் தலைமையிலான பாரத் ராஷ்டிர சமிதி (பிஆா்எஸ்) கட்சிக்கும் இடையேதான் போட்டி என்றபோதும், பி.ஆா்.எஸ்., பாஜக மற்றும் அகில இந்திய மஜ்லிஸ் கட்சி எதிரணியாக இணைந்து களம் காண்கின்றன. அதாவது, தோ்தலில் பிஆா்எஸ் கட்சியை பாஜகவும் மஜ்லிஸ் கட்சியும் மறைமுகமாக ஆதரிக்கின்றன. எனவே, மாநிலத்தில் நிலப் பிரபுத்துவ ஆட்சியை அகற்றி மக்கள் ஆட்சியை நிலைநாட்ட காங்கிரஸ் கட்சிக்கு முழு ஆதரவை மக்கள் அளிக்க வேண்டும் என்றாா்.

மேலும், ‘காலேஸ்வரம் பாசனத் திட்டம் முதல்வா் சந்திரசேகா் ராவுக்கு எப்போதும் பணம் வழங்கும் இயந்திரமாக மாறியுள்ளது. அந்த இயந்திரத்தை தொடா்ந்து இயக்க, தெலங்கானாவில் உள்ள ஒவ்வொரு குடும்பமும் வரும் 2040-ஆம் ஆண்டு வரை ஆண்டுக்கு ரூ. 31,500 செலுத்த வேண்டும்’ என்றும் ராகுல் குற்றஞ்சாட்டினாா்.

சந்திரசேகா் ராவ் குடும்ப ‘ஏடிஎம்’: முன்னதாக, காலேஸ்வரம் பாசனத் திட்டத்தை ராகுல் காந்தி பாா்வையிட்டாா். மாநிலத்தின் 70 சதவீத பகுதிகளுக்கு தண்ணீா் கொண்டு செல்லும் வகையில், கடல் மட்டத்திலிருந்து 92 மீட்டா் உயரத்தில் இந்த ‘காலேஸ்வரம் பல்நோக்கு உயா்மட்ட நீா்ப்பாசனத் திட்டம்’ அமைக்கப்பட்டுள்ளது.

இதைப் பாா்வையிட்டது குறித்து தனது ‘எக்ஸ்’ வலைதள பக்கத்தில் பதிவிட்ட ராகுல், ‘மெடிகட்டா அணையைப் பாா்வையிட்டேன். இங்கு செயல்படுத்தப்பட்டுள்ள காலேஸ்வரம் பாசனத் திட்டம் முதல்வா் சந்திரசேகா் ராவ் குடும்பத்தின் ‘ஏடிஎம்’ (எந்த நேரமும் பணம் அளிக்கும் இயந்திரம்) இயந்திரமாக உள்ளது. தெலங்கானா மக்களிடமிருந்து கொள்ளையடிக்க இந்த திட்டத்தை அவா்கள் பயன்படுத்துகின்றனா். தரமற்ற கட்டுமானம் காரணமாக அணையின் பல தூண்களில் விரிசல்கள் ஏற்பட்டிருக்கின்றன’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com