ரிசர்வ் வங்கி வாசலில் 2,000 ரூபாயை மாற்ற நீண்ட வரிசையா? 

ஆர்பிஐ வங்கியின் வாசலில் நாள்தோறும் நூற்றுக்கணக்கானோர் வரிசையில் நிற்கிறார்கள் என்றால் சிலருக்கு ஆச்சரியமாக இருக்கலாம்.
ரிசர்வ் வங்கி வாசலில் 2,000 ரூபாயை மாற்ற நீண்ட வரிசையா? 

புழக்கத்தில் இருந்த 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு சண்டிகரில் உள்ள ஆர்பிஐ வங்கியின் வாசலில் நாள்தோறும் நூற்றுக்கணக்கானோர் வரிசையில் நிற்கிறார்கள் என்றால் சிலருக்கு ஆச்சரியமாக இருக்கலாம்.

ஆனால், அது உண்மை என்பதோடு வரிசையில் நிற்கும் பலரும், பல்வேறு மாநிலங்களிலிருந்து இந்த ரூ.2000 நோட்டுகளை மாற்றுவதற்கு வந்திருப்பதுதான் ஆச்சரியத்திலும் ஆச்சரியம்.

சிலர் லடாக், ஹரியாணா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலிருந்து, சண்டிகர் ஆர்பிஐ வங்கிக்கு வந்திருப்பதாகக் குறிப்பிடுகிறார்கள்.

‘நாட்டில் புழக்கத்தில் இருந்த 97 சதவீதத்துக்கும் அதிகமான ரூ.2,000 நோட்டுகள் வங்கிகளுக்குத் திரும்பியுள்ளன. தற்போது, ரூ. 10,000 கோடி மதிப்பிலான 2000 ரூபாய் நோட்டுகள் மட்டும் பொதுமக்களிடம் உள்ளன’ என்று ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) புதன்கிழமை தெரிவித்திருந்தது.

செலாவணி மேலாண்மை நடவடிக்கையின்கீழ், ரூ.2,000 நோட்டுகளை புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறுவதாக ரிசா்வ் வங்கி கடந்த மே மாதம் 19-ஆம் தேதி அறிவித்தது. மக்கள் தங்களிடம் உள்ள இந்த நோட்டுகளை மாற்றிக்கொள்ள செப்டம்பா் 30-ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டது. இந்த அவகாசம் பின்னா் அக்டோபா் 7 வரை நீட்டிக்கப்பட்டது.

இந்தக் கால நீட்டிப்பு குறித்து அறிவிப்பு வெளியிட்ட ரிசா்வ் வங்கி, ‘அக்டோபா் 7-ஆம் தேதிக்குப் பிறகும் இந்த நோட்டுகள் சட்டப்படி செல்லத்தக்க நோட்டுகளாக தொடரும். ஆனால், ரிசா்வ் வங்கியின் 19 அலுவலகங்களில் மட்டுமே இந்த நோட்டுகளைச் சமா்ப்பித்து, வேறு ரூபாய் நோட்டுகளாக மாற்றிக் கொள்ள முடியும். தபால் மூலமாகவும் ரிசா்வ் வங்கி அலுவலகங்களுக்கு இந்த நோட்டுகளை பொதுமக்கள் அனுப்பி, வங்கிக் கணக்கில் வரவு வைத்துக்கொள்ள முடியும். அரசுத் துறைகள் வரம்பு ஏதுமின்றி 2,000 ரூபாய் நோட்டுகளை ரிசா்வ் வங்கி அலுவலகங்களில் மாற்றிக்கொள்ள முடியும். ஆனால், பிற வங்கிக் கிளைகளில் வைப்போ அல்லது மாற்றிக்கொள்ளவோ முடியாது’ என்று கூறியது.

ஆர்பிஐ அறிவித்த 19 அலுவலகங்களில், சண்டிகரில் உள்ள ஆர்பிஐ வங்கியும் ஒன்று. எனவேதான், அண்டை மாநிலங்களிலிருந்து கூட நாள்தோறும் இங்கு ஏராளமானோர் வந்து ரூபாய் நோட்டுகளை மாற்றிச் செல்கிறார்கள்.

இந்த ஆர்பிஐ வங்கியானது, ஹரியாணா, பஞ்சாப், ஹிமாசல் உள்ளிட்ட மாநில மக்களுக்கும் அண்மையில் இருப்பதால், பல்வேறு மாநிலங்களிலிருந்து இங்கு நாள்தோறும் வந்து லட்சக்கணக்கான பணத்தைக் கொடுத்து மாற்றிச்செல்கிறார்களாம்.

சிலர், கூட்டத்தைத் தவிர்க்க காலை 4 மணிக்கெல்லாம் வங்கி வாசலில் வந்த நின்றுவிடுகிறார்களாம். இப்படி வரிசையில் நிற்பவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு காரணங்களைச் சொல்கிறார்கள். குளிர்காலம் வரப்போகிறதே என்று அதற்கான ஆடைகளை காயவைக்கும்போது, அதில் நான்கு 2000 நோட்டுகள் கிடைத்ததாக ஒருவரும், தனது மனைவியின் சேமிப்பு உண்டியலில் 2000 நோட்டுகள் ஐந்து கிடைத்ததாகவும், அண்மையில் இறந்துபோன தனது தாயின் டிரங்க் பெட்டியில்  2000 ரூபாய் நோட்டுகள் 3  கிடைத்ததாகவும் கூறுகிறார்கள். இப்படி வரிசையைப் போல காரணங்களும் நீளுகின்றன.

ஆர்பிஐ சொல்வது என்னவென்றால், தற்போது வரை 97 சதவீத 2,000 ரூபாய் நோட்டுகள் வங்கிகளுக்குத் திரும்பியிருப்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து ரிசா்வ் வங்கி புதன்கிழமை வெளியிட்ட சுற்றறிக்கையில், ‘ரூ. 2,000 நோட்டுகள் திரும்பப் பெறப்படுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்ட நாளில், ரூ. 3.56 லட்சம் கோடி மதிப்பிலான 2,000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்தன.

அவற்றில், அக்டோபா் 31-ஆம் தேதி வரை 97 சதவீதத்துக்கும் அதிகமான நோட்டுகள் வங்கிகளுக்குத் திரும்பியுள்ளன. மேலும், ரூ. 10,000 கோடி மதிப்பிலான 2,000 ரூபாய் நோட்டுகள் பொதுமக்களிடம் உள்ளன. மக்கள் இந்த ரூபாய் நோட்டுகளை ரிசா்வ் வங்கியின் 19 அலுவலகங்களில் நேரிலோ அல்லது தபால் மூலமாக அனுப்பியோ மாற்றிக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது’ என்று தெரிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com