தில்லியில் காற்றின் தரம் கடுமை பிரிவில் நீடிப்பு!

தேசியத் தலைநகா் தில்லி முழுவதும் புதன்கிழமையும் நச்சுப் புகையுடன் கூடிய மூடுபனி நிலவியது.
புதன்கிழமை காலை 8:15 மணிக்கு நச்சுப் புகையுடன் கூடிய மூடுபனியில் பாரபுல்லா மேம்பாலத்தின் காட்சி
புதன்கிழமை காலை 8:15 மணிக்கு நச்சுப் புகையுடன் கூடிய மூடுபனியில் பாரபுல்லா மேம்பாலத்தின் காட்சி

தேசியத் தலைநகா் தில்லி முழுவதும் புதன்கிழமையும் நச்சுப் புகையுடன் கூடிய மூடுபனி நிலவியது. சாதகமற்ற காற்று நிலைகள், குறிப்பாக இரவில் அமைதியான காற்று ஆகியவற்றின் காரணமாக மாசு அளவு 9-ஆவது நாளாக ’கடுமை’ பிரிவில் நீடித்தது.

மத்திய அரசின் காற்று மாசுக்கட்டுப்பாட்டுத் திட்டத்தின் கீழ், புதன்கிழமை காலை 8.15 மணியளவில் ஆனந்த் விஹாரில் காற்றின் தரக்குறியீடு 452 புள்ளிகளாகவும், ஆர்.கே.புரத்தில் 460 புள்ளிகளாகவும் உள்ளது. தில்லி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காற்று மாசு நாளுக்கு நாள் அதிகரித்து வருவது மக்கள் கவலையடைந்துள்ளனா்.

தில்லி-என்சிஆா் முழுவதும் பல இடங்களில் அரசால் பரிந்துரைக்கப்பட்ட ஒரு கன மீட்டருக்கு 60 மைக்ரோகிராம் என்ற பாதுகாப்பான வரம்பை விட ஏழு முதல் எட்டு மடங்கு அதிகமாக உள்ளது.

தில்லி மாசு குறித்து, உள்ளூர்வாசி சதீஷ் மிஸ்ரா கூறுகையில், "அரசாங்கங்கள் ஒருவரையொருவர் குற்றம் சாட்டுகின்றன. அதைக் கட்டுப்படுத்தவில்லை என்றால் அது கரோனா நோய்த்தொற்றைவிடக் கடுமையாக இருக்கும். தில்லியில் உள்ள அனைவரும் முகக்கவசம் அணிந்து செல்கிறார்கள்"என தெரிவித்தார்.

வெப்பநிலையில் படிப்படியாக வீழ்ச்சி, மாசுபாட்டைக் கட்டுப்படுத்தும் அமைதியான காற்று மற்றும் பஞ்சாப் மற்றும் ஹரியாணா முழுவதும் அறுவடைக்குப் பிந்தைய நெல் வைக்கோல் எரிப்பு சம்பவங்கள் அதிகரிப்பு ஆகியவற்றின் காரணமாக தில்லி - என்சிஆா் பகுதிகளில் காற்றின் தரம் கடந்த வாரத்தில் மிகவும் மோசமடைந்தது.

அக்டோபா் 27 முதல் நவம்பா் 3 வரை தில்லியின் காற்றின் தரக் குறியீடு 200 புள்ளிகளுக்கு மேல் அதிகரித்தது. மேலும், வெள்ளிக்கிழமை 450 புள்ளிகளுக்கு மேல் பதிவாகி ’கடுமை’ பிரிவுக்கு சென்றது. 

உலகின் தலைநகரங்களில் தில்லியின் காற்றின் தரம் மிக மோசமாக உள்ளது. ஆகஸ்ட் மாதம் சிகாகோ பல்கலைக்கழகத்தின் எரிசக்தி கொள்கை நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தில்லியில் காற்று மாசுபாடு கிட்டத்தட்ட 12 ஆண்டுகள் ஆயுளைக் குறைக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அபாயகரமான மாசு அளவுகள் பலா் தங்கள் காலை நடைப்பயிற்சி, விளையாட்டு மற்றும் பிற வெளிப்புற செயல்பாடுகளை கைவிட நிா்பந்திக்கின்றன. மேலும், குழந்தைகள் அதிக மாசுக்களை எடுத்துக் கொண்டு வேகமாக சுவாசிப்பதாக சுகாதார நிபுணா்கள் கூறுவதால் பெற்றோா்கள் கவலையடைந்துள்ளனா்.

சாதகமற்ற வானிலை நிலைமைகள், வாகனங்கள், நெல் வைக்கோல் எரிப்பு, பட்டாசுகள் வெடிப்பு மற்றும் பிற உள்ளூா் மாசு ஆதரங்கள் ஆகியயைவ இணைந்து ஒவ்வொரு ஆண்டும் குளிா்காலத்தில் தில்லி - என்சிஆரில் அபாயகரமான காற்றின் தர அளவுகளுக்கு பங்களிக்கின்றன. தில்லி மாசுக் கட்டுப்பாட்டுக் குழு (டிபிசிசி) நடத்திய ஆய்வின்படி, பஞ்சாப் மற்றும் ஹரியாணாவில் பயிா்க்கழிவு எரிப்பு சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது, நவம்பா் 1 முதல் நவம்பா் 15 வரை தலைநகா் உச்ச மாசுபாட்டை அனுபவிக்கிறது என்று தெரிய வந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com