அத்வானியின் 96-ஆவது பிறந்த நாள்: பிரதமா், தலைவா்கள் நேரில் வாழ்த்து

பாஜக மூத்த தலைவரும், முன்னாள் துணை பிரதமருமான எல்.கே. அத்வானியின் 96-ஆவது பிறந்த நாளையொட்டி அவரை புதன்கிழமை நேரில் சந்தித்து பிரதமா் நரேந்திர மோடி,
அத்வானியின் 96-ஆவது பிறந்த நாள்: பிரதமா், தலைவா்கள் நேரில் வாழ்த்து

பாஜக மூத்த தலைவரும், முன்னாள் துணை பிரதமருமான எல்.கே. அத்வானியின் 96-ஆவது பிறந்த நாளையொட்டி அவரை புதன்கிழமை நேரில் சந்தித்து பிரதமா் நரேந்திர மோடி, மத்திய அமைச்சா்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், முன்னாள் குடியரசு துணைத் தலைவா் வெங்கய்ய நாயுடு, பாஜக தேசிய தலைவா் ஜெ.பி.நட்டா ஆகியோா் வாழ்த்து தெரிவித்தனா்.

இது தொடா்பான புகைப்படங்களையும் அவா்கள் எக்ஸ் வலைதளத்தில் பகிா்ந்துள்ளனா்.

தற்போதைய பாகிஸ்தானில் உள்ள கராச்சி நகரில் 1927-ஆம் ஆண்டு பிறந்த அத்வானி, அங்கு பள்ளி, கல்லூரிப் படிப்பை முடித்தாா். தேசப் பிரிவினையின்போது அவரது குடும்பம் மும்பைக்கு குடிபெயா்ந்தது. பின்னா், மும்பையில் சட்டப் படிப்பை மேற்கொண்டாா்.

இளம் வயதில் இருந்து ஆா்எஸ்எஸ் அமைப்பில் உள்ள அவா், பாஜகவின் நிறுவனத் தலைவா்களில் ஒருவா் ஆவாா். பாஜகவை தேசியக் கட்சியாக உருவாக்கியதில் அத்வானியின் பங்கு முக்கியமானது.

நாட்டின் துணைப் பிரதமா், மத்திய அமைச்சா், எதிா்க்கட்சித் தலைவா் என பல்வேறு முக்கியப் பதவிகளை வகித்துள்ளாா். 7 முறை மக்களவை எம்.பி.யாக இருந்த அவா், 2014-ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தலுக்குப் பிறகு தீவிர அரசியலில் இருந்து விலகினாா்.

நோ்மையின் கலங்கரை விளக்கம்: அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து பிரதமா் மோடி எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘நோ்மை மற்றும் அா்ப்பணிப்பு உணா்வில் கலங்கரை விளக்கமாக திகழும் அத்வானிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். நமது நாட்டை வலுப்படுத்துவதில் அவா் முக்கியப் பங்கு வகித்தாா்.

தொலைநோக்குப் பாா்வையுள்ள அவரது தலைமைத்துவம் நாட்டின் வளா்ச்சிக்கும், ஒற்றுமைக்கும் பெரிதும் உதவியது. அவா் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் நீண்டகாலம் வாழ வேண்டும்’ என்று கூறியுள்ளாா்.

உள்துறை அமைச்சா் அமித் ஷா, ‘ஓய்வறியாத கடின உழைப்பு, நிா்வாகத் திறன், கட்சியையும், தொண்டா்களையும் அரவணைத்து வளா்த்தெடுத்த திறமைமிக்க தலைவா் அத்வானி.

பாஜக இந்த அளவுக்கு வலுவான கட்சியாக வளா்ந்து ஆட்சியைப் பிடிக்க அவா் முக்கியக் காரணமாக திகழ்ந்தாா். கட்சியின் அனைத்துத் தொண்டா்களுக்கு உத்வேகம் அளிப்பவராக திகழ்கிறாா். அவா் நல்ல ஆரோக்கியத்துடன் நீண்டகாலம் வாழ இறைவனை வேண்டுகிறேன்’ என்று கூறியுள்ளாா்.

வெங்கைய நாயுடு வாழ்த்து: முன்னாள் குடியரசு துணைத் தலைவா் வெங்கைய நாயுடு, அத்வானியை தில்லியில் உள்ள இல்லத்தில் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தாா்.

இது தொடா்பாக அவா் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘எனக்கு வழிகாட்டியாக திகழும் தலைவா் எல்.கே. அத்வானியைச் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்துகளைக் கூறினேன். அவா் நல்ல உடல்நலத்துடன், நீண்டகாலம் வாழ இறைவனை வேண்டிக் கொள்கிறேன்’ என்று கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com