தேர்தல் பணிகளை கவனிப்பதற்காக பதவியை ராஜினாமா செய்த சட்டப்பேரவை துணைத் தலைவர்!

தேர்தல் நெருங்கி வருவதால் கட்சிப் பணிகளைக் கவனிப்பதற்காக சட்டப்பேரவை துணைத் தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார் ரஜனிகாந்த் சிங்.
தேர்தல் பணிகளை கவனிப்பதற்காக பதவியை ராஜினாமா செய்த சட்டப்பேரவை துணைத் தலைவர்!
Published on
Updated on
1 min read

ஒடிஸா சட்டப்பேரவை துணைத் தலைவர் ரஜனிகாந்த் சிங் தேர்தல் பணிகளைக் கவனிப்பதற்காக தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். 

தனிப்பட்ட காரணங்களுக்காக பதவி விலகுவதாகக் கூறி தனது ராஜினாமா கடிதத்தை ஒடிஸா மாநில சட்டப்பேரவைத் தலைவர் பிரமிளா மல்லிக்கிடம் சமர்ப்பித்தார் ரஜனிகாந்த் சிங்.

நாடாளுமன்ற மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தேர்தல்கள் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ளதால், தேர்தல் ஏற்பாடுகளில் கவனம் செலுத்துவதற்காக பதவி விலகியுள்ளதாகவும், இப்போது கட்சிக்காக அதிக நேரத்தை ஒதுக்கி மக்களைச் சென்றடைய முடியும் என்றும் அவர் தெரிவித்தார். மேலும், சட்டப்பேரவைத் தலைவர் மற்றும் சட்டப்பேரவை துணைத் தலைவர் பதவிகளை வகிப்பவர்கள் அவர்களது கட்சிக்கு பணியாற்ற முடியாது என்பதால் இந்த முடிவெடுத்ததாக கூறினார்.

2019 ஜூன் மாதம் ஒடிஸா சட்டப்பேரவையின் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட சிங், இதற்கு முன்பு நவீன் பட்நாயக் அரசாங்கத்தில் எஃகு மற்றும் சுரங்கத்துறை அமைச்சராக பணியாற்றினார்.

அங்குல் தொகுதியில் இருந்து நான்கு முறை சட்டப்பேரவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ரஜனிகாந்த் சிங்கிற்கு கட்சியில் புதிதாக ஏதேனும் முக்கியப் பொறுப்பு வழங்கப்படுமா என்ற கேள்விக்கு, “அதனை பிஜூ ஜனதா தளத்தின் தலைவர்தான் முடிவு செய்ய வேண்டும்” என்று பதிலளித்தார்.

முன்னாள் அமைச்சர் ஏ.பி.சிங்கின் மகனான ரஜனிகாந்த் சிங், தேன்கனல் மாவட்டத்தில் பிரபலமான தலைவராக உள்ளார். மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் 2024 தேர்தலில் தேன்கனல் அல்லது சம்பல்பூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடுவார் என்று கூறப்பட்டு வரும் நிலையில், சிங் கட்சிப் பணியில் தீவிரமாகப் பங்கேற்பது குறிப்பிடத்தக்கதாகக் கருதப்படுகிறது.

முன்னதாக, இந்த ஆண்டு மே மாதம், கஞ்சம் மாவட்டத்தைச் சேர்ந்த அப்போதைய சட்டப்பேரவைத் தலைவர் பி.கே.அருகா பதவியை ராஜினாமா செய்து, கேபினட் அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

147 தொகுதிகளைக் கொண்ட ஒடிஸா மாநில சட்டப்பேரவைக்கு 2024-ஆம் ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Open in App
Dinamani
www.dinamani.com