
பழங்குடியினத் தலைவர் பிர்சா முண்டா பிறந்தநாளை முன்னிட்டு இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் மோடி ஆகியோர் அவருக்கு மரியாதை செலுத்தி, ‘ஜன்ஜாதியா கௌரவ் திவாஸ்’ வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
ஜனாதிபதி முர்மு எக்ஸ் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ஜார்க்கண்ட் மாநில உருவாக்க தினத்தை முன்னிட்டு ஜார்க்கண்டில் வசிக்கும் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள். பிர்சா முண்டாவின் பிறந்தநாள் 'பழங்குடியினரின் பெருமைமிகு தினமாக' கொண்டாடப்படுகிறது. பிர்சா முண்டாவின் ஆசிர்வாதம் என்றும் நிலைத்திருக்கும். ஜார்க்கண்ட் மாநிலம் அதன் இயற்கை வளங்களால் முன்னேற வேண்டும்." என்று தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியும் அவரது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில், “பிர்சா முண்டாவின் பிறந்தநாளில் அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன். பழங்குடியினரின் பெருமைமிகு தினமான இந்த சிறப்பு நன்னாளில் நாடு முழுவதும் உள்ள எனது குடும்ப உறுப்பினர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.
நாட்டின் முன்னேற்றத்திற்கு ஜார்கண்ட் மக்கள் முக்கிய பங்களிப்பை வழங்கியுள்ளனர் என்றும், அவர்களுக்கு பிரகாசமான எதிர்காலம் அமைய வாழ்த்துவதாகவும் பிரதமர் கூறினார்.
"ஜார்கண்ட் மாநிலம் அதன் கனிம வளங்களுக்கும், பழங்குடி சமூகத்தின் தைரியம், துணிச்சல் மற்றும் சுயமரியாதை ஆகியவற்றிற்கும் பிரபலமானது. இங்குள்ள எனது குடும்ப உறுப்பினர்கள் நாட்டின் முன்னேற்றத்திற்கு முக்கிய பங்களிப்பைச் செய்துள்ளனர். அவர்களுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மாநிலத்தின் உருவாக்க நாளில் ஜார்க்கண்டிற்கு ஒளிமயமான எதிர்காலம் அமைய வாழ்த்துகள்" என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
மறைந்த பழங்குடியினத் தலைவர் பிர்சா முண்டாவின் பிறப்பிடமான உலிஹட்டு கிராமத்திற்கு சென்று அவருக்கு அஞ்சலி செலுத்த உள்ளார் பிரதமர் மோடி.
அதையடுத்து குந்தியில் காலை 11:30 மணியளவில் நடைபெறும் மூன்றாவது ஜன்ஜாதியா கௌரவ் திவாஸ் நிகழ்ச்சியிலும் மோடி பங்கேற்கிறார். பழங்குடியின தலைவர் பிர்சா முண்டா பிறந்தநாள் ‘ஜன்ஜாதிய கவுரவ் திவாஸ்’ என்று கொண்டாடப்படுகிறது.
நிகழ்ச்சியின் போது, பிரதமர் மோடி 'விக்சித் பாரத் சங்கல்ப் யாத்ரா' இயக்கத்தை தொடங்கிவைத்து, ஜார்க்கண்ட் மாநிலத்தின் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.