தமிழகத்துக்கு 38 நாள்களுக்கு காவிரியில் 3,216 கனஅடி நீர் திறக்க பரிந்துரை

காவிரியில் வெள்ளிக்கிழமை (நவ. 24)  முதல் வருகின்ற டிசம்பர் 31-ஆம் தேதி வரை (38 நாள்கள்) விநாடிக்கு 3,216 கன அடி நீரை தமிழகத்துக்கு திறந்து விட கர்நாடகத்துக்கு காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு
தமிழகத்துக்கு 38 நாள்களுக்கு காவிரியில் 3,216 கனஅடி நீர் திறக்க பரிந்துரை

காவிரியில் வெள்ளிக்கிழமை (நவ. 24)  முதல் வருகின்ற டிசம்பர் 31-ஆம் தேதி வரை (38 நாள்கள்) விநாடிக்கு 3,216 கன அடி நீரை தமிழகத்துக்கு திறந்து விட கர்நாடகத்துக்கு காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு (சி.டபிள்யு.ஆர்.சி.) வியாழக்கிழமை பரிந்துரைத்தது.  
தமிழகத்துக்கு மழைப்பற்றாக்குறை காலத்தில் காவிரியில் வழங்க வேண்டிய  நிலுவைத் தண்ணீரை முற்றிலும்  வழங்கும் விதமாக  இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவின் 90-ஆவது கூட்டம்  வியாழக்கிழமை  காணொலி வழியாக நடைபெற்றது. அதன் தலைவர் வினித் குப்தா தலைமையில் நடைபெற்ற  இக்கூட்டத்தின் விவரம்:
தமிழகம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த மழை அளவு விவரங்கள், அடுத்த சில வாரங்களுக்கு எதிர்பார்க்கப்படும் மழை விவரங்கள் குறித்த தகவல்கள் இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) சார்பில் கூட்டத்தில் வைக்கப்பட்டு விவாதிக்கப்பட்டது.  
கடந்த அக்டோபர் வரை மழைப் பற்றாக்குறை காலங்களில்  தமிழகத்துக்கு வழங்க வேண்டிய அளவின் படி சுமார் 13.5 டிஎம்சி தண்ணீர் வழங்கப்படாமல் கர்நாடகம் நிலுவை வைத்திருந்தது. இதனால், கடந்த நவம்பர் 3 -ஆம் தேதி காவிரி நீர் மேலாண்மை ஆணையம், சி.டபிள்யு.ஆர்.சி.யின் பரிந்துரையின்படி நவம்பர் 23- ஆம் தேதி வரை விநாடிக்கு 2,600 கனஅடி தண்ணீர் வீதம் திறந்துவிட  உத்தரவிட்டது.
இந்த உத்தரவின் மூலம் சுமார் 2 டிஎம்சி தண்ணீர் பிலிகுண்டுலுவில் தமிழகம் பெற்றது. மீதமுள்ள 11 டிஎம்சி தண்ணீரை கர்நாடகம் வழங்க வேண்டும் என்று தமிழகம் சார்பில் வாதிடப்பட்டது.  மேலும், சில  புள்ளிவிவரங்களும் வைக்கப்பட்டன. 
கடந்த அக்டோபர் 1 முதல் நவம்பர் 21- ஆம் தேதி வரை காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழையின் காரணமாக கர்நாடகத்தின் நான்கு அணைகளுக்கு 25 டிஎம்சி தண்ணீர் கூடுதலாக வந்துள்ளது.  தற்போது கர்நாடக அணைகளில் 47 டிஎம் சி தண்ணீர் இருப்பு உள்ளது. இதே காலகட்டத்தில் தமிழகத்தில் மேட்டூர் அணைக்கு 22 டிஎம்சி தண்ணீர் மட்டுமே கிடைத்தது. இதனால்,  நிலுவையில் உள்ள 11 டிஎம்சி தண்ணீரை கர்நாடகம் வழங்கும் விதமாக வெள்ளிக்கிழமை (நவம்பர்  24) முதல் விநாடிக்கு 5,000 கன அடி தண்ணீர் தர வேண்டும் என தமிழகம் கோரிக்கை வைத்தது.
முன்னதாக, கூட்டத்தில் கர்நாடகம் தனது வாதங்களைச் சமர்ப்பித்தது. அதில் கர்நாடகத்தின் நான்கு நீர்த்தேக்கங்களுக்கு நவம்பர் 22 வரை வரவேண்டிய மொத்த நீர் வரத்தில் 52.24 சதவீதம் குறைவு. அக்டோபர் 1-ஆம் தேதி முதல் தமிழகத்தில் மழைப் பொழிவு இயல்பானது என ஐஎம்டி தெரிவித்துள்ளது. வரும் நாள்களிலும் வடகிழக்குப் பருவமழையின் போது காவிரி டெல்டாவான மேட்டூருக்கு கீழே உள்ள பகுதிகளில் திருப்திகரமான மழை பெய்வதற்கான அறிகுறிகள் உள்ளன. 
மேலும், குறுவை பயிர் செப்டம்பர் இறுதிக்குள் அறுவடை முடிந்துவிட்டது. சம்பா பயிர் முதிர்வடையும் நிலையில் (டிசம்பர் முதல் வாரம்) உள்ளது. அணைகளுக்கு நீர்வரத்து நின்றுவிட்டதால், தற்போதுள்ள தண்ணீர் நீர்ப்பாசனம், குடிநீர் தேவைகளைப் பூர்த்தி செய்யப் போதுமானதாக இல்லை எனக் கூறி வழக்கம் போல் தண்ணீரை விடுவிக்க முடியாது என கர்நாடகம் குறிப்பிட்டது. 
ஆனால், சி.டபிள்யு.ஆர்.சி. இறுதியாக, நவம்பர் 24-ஆம் தேதி முதல் டிசம்பர் 31-ஆம் தேதி வரை 38 நாள்களுக்கு தமிழகத்திற்கு காவிரியில் பிலிகுண்டுலுவில் நாளொன்றுக்கு விநாடிக்கு 3,216 கன அடி அளவு நீரோட்டத்தை உறுதிப்படுத்த கர்நாடகம் தனது அணைகளிலிருந்து தண்ணீரைத் திறந்துவிட வேண்டும் என பரிந்துரைத்தது.
இக்கூட்டத்தில் தமிழக காவிரி தொழில்நுட்பக் குழு தலைவர் ஆர்.சுப்பிரமணியன்,  தமிழக உறுப்பினர்  திருச்சி காவிரி வடிநீர் கோட்டத் தலைமைப் பொறியாளர் எம். சுப்பிரமணியன், கர்நாடகம், கேரளம், புதுவை மாநில உறுப்பினர்களான முறையே மகேஷா (காவிரி நீரவாணி நிகம் இயக்குநர்), ஆர்.பிரியேஷ், கே.வீராசெல்வம் மற்றும் மத்திய நீர்வளத்துறை, இந்திய வானிலை ஆய்வுப் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com