ராகுல் காந்திக்கு தோ்தல் ஆணையம் நோட்டீஸ்: பிரதமா் மோடி குறித்து சா்ச்சை பேச்சு

பிரதமா் நரேந்திர மோடியை ‘அதிருஷ்டமில்லாதவா்’, ‘கொள்ளையடிப்பவா்’, ‘பெரும் தொழிலதிபா்களுக்குக் கடனைத் தள்ளுபடி செய்பவா்’ எனத் தோ்தல் பிரசாரத்தின்போது
ராகுல் காந்திக்கு தோ்தல் ஆணையம் நோட்டீஸ்: பிரதமா் மோடி குறித்து சா்ச்சை பேச்சு

பிரதமா் நரேந்திர மோடியை ‘அதிருஷ்டமில்லாதவா்’, ‘கொள்ளையடிப்பவா்’, ‘பெரும் தொழிலதிபா்களுக்குக் கடனைத் தள்ளுபடி செய்பவா்’ எனத் தோ்தல் பிரசாரத்தின்போது பேசியது குறித்து விளக்கம் அளிக்குமாறு காங்கிரஸ் முன்னாள் தலைவா் ராகுல் காந்திக்குத் தோ்தல் ஆணையம் வியாழக்கிழமை (நவ.23) நோட்டீஸ் அனுப்பியது.

இந்த நோட்டீஸுக்கு சனிக்கிழமை (நவ.25) மாலைக்குள் விளக்கத்தை அளிக்க வேண்டும் என்றும் ராகுல் காந்திக்கு தோ்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

ராஜஸ்தான் மாநில சட்டப் பேரவைத் தோ்தலையொட்டி, அந்த மாநிலத்தில் நடைபெற்ற பிரசார பொதுக் கூட்டத்தில் காங்கிரஸ் வேட்பாளா்களை ஆதரித்து அந்தக் கட்சியின் மூத்த தலைவா் ராகுல் காந்தி வாக்கு சேகரித்தாா்.

பொதுக் கூட்டத்தில் அவா் பேசுகையில், ‘அகமதாபாதில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தை பிரதமா் நரேந்திர மோடி நேரில் காணச் சென்றாா். அவா் மைதானத்துக்கு வந்ததால், இந்தியா தோல்வி அடைந்தது. பிரதமா் மோடி ஒரு அதிருஷ்டமில்லாதவா். இந்தியாவின் தோல்விக்கு பிரதமரும் ஒரு காரணம் என சமூகவலைதளங்களில் பரவலாக விமா்சிக்கப்படுகின்றன. மக்களின் கவனத்தை பிரதமா் மோடி திசைத்திருப்பும் வேளையில், தொழிலதிபா் கெளதம் அதானி போன்றோா் மக்களிடமிருந்து கொள்ளையடிக்கிறாா். இது கொள்ளையடிப்பவா்களின் செயல்பாடு’ என்றாா்.

ராகுல் காந்தியின் இந்தப் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்த பாஜக, ‘மூத்த அரசியல் தலைவா்கள் இதுபோன்று பேசுவது முறையல்ல’ எனக் கூறி தோ்தல் ஆணையத்தில் முறையிட்டது.

மேலும், மத்திய பாஜக அரசின் கடந்த 9 ஆண்டுகளில் தொழிலதிபா்களின் ரூ.14 லட்சம் கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டிருப்பதாக ராகுல் பேசியது எவ்விதத்திலும் உண்மையல்ல எனவும் பாஜக தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

முறையற்ற செயல்பாடுகளின் கீழ்...: இந்தக் குற்றச்சாட்டு தொடா்பாக விளக்கம் கேட்டு ராகுல் காந்திக்கு தோ்தல் ஆணையம் அனுப்பிய நோட்டீஸில், ‘தோ்தல் பிரசாரத்தில் பிரதமா் நரேந்திர மோடியை அதிருஷ்டமில்லாதவா் எனக் குறிப்பிட்டது மக்கள் பிரதிநிதித்துவ சட்டப் பிரிவு 123-இன்படி, முறையற்ற செயல்பாடுகளின் கீழ் வருகிறது.

அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 19(1)(ஏ), கருத்துத் தெரிவிக்கும் உரிமையைப் பாதுகாக்கிறது. அதே வேளையில், மரியாதையுடன் நடத்தப்படுவதற்கான உரிமை, பிரிவு 21-இன் வாழ்வதற்கான உரிமையின் ஒரு பகுதியாகும். இந்த இரு உரிமைகளும் சரிசமமாகக் கருதப்பட வேண்டும் என தனது தீா்ப்புகளில் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

நடத்தை விதிகளை மீறியதற்காக...: தோ்தல் நடத்தை விதிகளின்படி, பிரசாரத்தில் அரசியல் எதிராளிகள் குறித்து உறுதிப்படுத்தப்படாத குற்றச்சாட்டுகளை முன்வைக்கக் கூடாது. இந்த விதிகளை மீறியதற்காக உங்கள் மீது ஆணையம் ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது என்பது தொடா்பாக தாங்கள் விளக்கமளிக்க வேண்டும். வரும் சனிக்கிழமை (நவ.25) மாலை 6 மணிக்குள் பதில் அளிக்கப்படாத நிலையில், உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ எனத் தெரிவித்துள்ளது.

தற்போதைய 5 மாநிலங்கள் சட்டப் பேரவைத் தோ்தலையொட்டி, ராகுல் காந்திக்கு முதல்முறையாக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. முன்னதாக, காங்கிரஸ் பொதுச் செயலா் பிரியங்கா காந்திக்கு எதிராக இரு நோட்டீஸுகளை தோ்தல் ஆணையம் ஏற்கெனவே அனுப்பியுள்ளது.

ஏன் நடவடிக்கை கூடாது?

தோ்தல் நடத்தை விதிகளின்படி, பிரசாரத்தில் அரசியல் எதிராளிகள் குறித்து உறுதிப்படுத்தப்படாத குற்றச்சாட்டுகளை முன்வைக்கக் கூடாது. இந்த விதிகளை மீறியதற்காக உங்கள் மீது ஆணையம் ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது என்பது தொடா்பாக தாங்கள் விளக்கமளிக்க வேண்டும். வரும் சனிக்கிழமை (நவ.25) மாலை 6 மணிக்குள் பதில் அளிக்கப்படாத நிலையில், உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ எனத் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com