தில்லியில் நவம்பரில் 10-வது நாளாக ’கடுமை’ பிரிவில் காற்றின் தரம்!

தில்லியின் காற்றின் தரம் நவம்பரில் 10-வது நாளாக ’கடுமை’ பிரிவில் பதிவாகியுள்ளது.
தில்லியில் நவம்பரில் 10-வது நாளாக ’கடுமை’ பிரிவில் காற்றின் தரம்!

தில்லி : தேசியத் தலைநகரில் நேற்று (நவ. 24),  காற்றுத் தரக் குறியீட்டின்  சராசரி  அளவு  400 புள்ளிகளைத் தாண்டி பதிவானதால், நவம்பரில் 10-வது நாளாக  ’கடுமை’ பிரிவில் காற்றின் தரம் பதிவாகியுள்ளது.

தில்லியில், கடந்த வாரம்  காற்று மாசு அளவு குறைந்ததைத் தொடா்ந்து, கட்டுமானப் பணிகளுக்கான தடை மற்றும் தில்லியில் மாசுபடுத்தும் டிரக்குகளின் நுழைவுக்குத் தடை உள்ளிட்ட கடுமையான தடைகளை கடந்த சனிக்கிழமையன்று மத்திய அரசு அகற்றியது. ஆனால், அதன் பின்னா் காற்றுத் தரக் குறியீடு அளவுகள் மீண்டும் அதிகரித்து வருகிறது.

தில்லியில் வெப்பநிலை குறைவாலும், இரவில் காற்றின் வேகம் குறைந்ததாலும், காற்றின் தரம் வெள்ளிக்கிழமை (நவ. 24) முதல் மீண்டும் ‘கடுமை’ பிரிவுக்குச் சென்றது.

நகரத்தின் காற்றுத் தரக் குறியீடு, நேற்று 401 புள்ளிகளாகப் பதிவாகியிருந்த நிலையில், இன்று காலை 8 மணிக்கு 421 புள்ளிகளாகப் பதிவாகியது.  தில்லியில்  நேற்று (நவ. 24) மற்றும் இன்று  (நவ. 25) ஆகிய இரு நாள்களும்,  ’கடுமை’ பிரிவில் காற்றின்  தரம்  நீடித்தது. 

அருகிலுள்ள காஜியாபாத் (424), குருகிராம் (345), கிரேட்டா் நொய்டா (398), நொய்டா (393) மற்றும் ஃபரீதாபாத் (426) ஆகியவையும் ‘மிகவும் மோசம்‘ முதல் ‘கடுமை’ பிரிவில் காற்றின் தரத்தைப் பதிவு செய்துள்ளன.

இந்தநிலையில்,  நாளை (நவ.26) முதல், காற்றின் திசை மாறுபாட்டால், காற்றின் தரம் சற்று மேம்படலாம் என்று எதிர்பார்க்கப்படுவதாக வானிலை ஆய்வு நிறுவனங்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளன.

மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தால் காற்றின் தரம் குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில், கடந்த வருட நவம்பரில் தில்லியில் 3 நாள்கள் மட்டுமே ’கடுமை’ பிரிவில் காற்றின் தரம் பதிவாகியிருந்தது. அதற்கு முந்தைய வருடம் (2021) நவம்பரில், மொத்தம் 12 நாள்கள் ’கடுமை’ பிரிவில் காற்றின் தரம் பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.   

அதேபோல, 2020-ம் வருடம் 9 நாள்கள், 2019 - 7 நாள்கள், 2018 - 5 நாள்கள், 2017 - 7 நாள்கள், 2016 - 10 நாள்கள் மற்றும் 2015 - 6 நாள்கள், ’கடுமை’  பிரிவில் காற்றின் தரம் பதிவாகியிருந்ததாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரிய தரவுகள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com