‘இந்தியா, பயங்கரவாதத்தைத் தன் துணிச்சலால் ஒடுக்கி வருகிறது’: மோடி

பிரதமர் மோடி மனதின் குரல் நிகழ்ச்சியில் 26/11 மும்பை தாக்குதல் குறித்து பேசியுள்ளார். 
பிரதமர் நரேந்திர மோடி (கோப்புப் படம்)
பிரதமர் நரேந்திர மோடி (கோப்புப் படம்)

பிரதமர் நரேந்திர மோடி, ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் மும்பை தாக்குதல் குறித்தும் அதிலிருந்து இந்தியா மீண்டு வந்தது குறித்தும் பேசியுள்ளார்.

26/11 மும்பையில் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு தனது அஞ்சலியை செலுத்தியதுடன் இந்தியா அவர்களை என்றும் நினைவுகூரும் எனத் தெரிவித்துள்ளார்.

இன்று (ஞாயிற்றுக்கிழமை) ‘மனதின் குரல்’ ரேடியோ நிகழ்ச்சியில் பேசிய நரேந்திர மோடி,  “நவம்பர் 26 நாளை நம்மால் மறக்க முடியாது. இந்த நாடு பயங்கரமான தாக்குதலை எதிர்கொண்ட நாள். பயங்கரவாதிகள் மும்பையை மட்டுமில்லாது ஒட்டுமொத்த நாட்டையும் அதிர்வுக்குள்ளாக்கினர். அந்தத் தாக்குதலில் இருந்து மீண்டு வந்ததும் இப்போது முழு துணிச்சலோடு பயங்கரவாதத்தை எதிர்ப்பதும் இந்தியாவின் திறனால் நடந்தவை” எனப் பேசியுள்ளார்.

நவம்பர் 26, 2008 அன்று லக்‌ஷர்-இ-தொய்பா பயங்கரவாதிகள், பாகிஸ்தானில் இருந்து கடல் வழியாக மும்பைக்குள் நுழைந்து துப்பாக்கிச்சூடு நிகழ்த்தினர். இதில் 18 பாதுகாப்பு அதிகாரிகள் உள்பட 166 பேர் பலியாகினர். மும்பையில் 60 மணி நேரம் நீடித்த இந்த முற்றுகையில் பலர் காயமுற்றனர்.

மேலும், இந்த நாள் (நவ.16) இன்னொரு வகையிலும் முக்கியத்துவம் வாய்ந்தது என பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

1949-ல் இந்திய அரசு தனக்கான அரசியலமைப்பை ஏற்ற நாள் என்பதைக் குறிப்பிட்டு இந்திய மக்களுக்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

தீபாவளி நேரத்தில் நாடு முழுவதும் 4 லட்சம் கோடி ரூபாய்க்குத் தொழில் நடந்துள்ளதாகவும் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட பொருள்களை வாங்குவதில் மக்கள் ஆர்வம் அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் அவர்களின் திருமணத்தை இந்தியாவில் நடத்துமாறும் கேட்டுக் கொண்டுள்ளார், பிரதமர் மோடி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com