அமித் ஷா குறித்த ஆட்சேபனைக்குரிய கருத்து : ராகுல் காந்திக்கு சம்மன்

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குறித்து அவதூறாக பேசியதாக காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது. 
கோப்புப்படம்
கோப்புப்படம்

லக்னோ : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குறித்து அவதூறாக பேசியதாக காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது. 

இந்த வழக்கில் ராகுல் காந்திக்கு உத்தரப் பிரதேசத்தின் சுல்தான்பூர் நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.

முன்னதாக கடந்த 2018ஆம் ஆண்டு, பெங்களூருவில் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது பேசிய ராகுல் காந்தி, பாஜகவின் அப்போதைய தலைவராக பொறுப்பு வகித்த அமித் ஷா குறித்து ஆட்சேபனைக்குரிய கருத்துக்களை தெரிவித்ததாக புகார் எழுந்தது. 

இதனைத்தொடர்ந்து, பாஜக தலைவர் விஜய் மிஸ்ரா, கடந்த 2018ஆம் ஆண்டு ராகுல் காந்தி மீது அவதூறு  வழக்கு தொடர்ந்தார். ”நேர்மையான பரிசுத்த அரசியலில் நம்பிக்கை கொண்டுள்ளதாக கூறி வரும் பா.ஜனதா கட்சியின் தலைவராக (2018இல்), கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நபர் (அமித் ஷா) ஒருவர் பொறுப்பு வகிக்கிறார்” என்று அமித்ஷா குறித்து ராகுல் காந்தி பேசியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், இந்த வழக்கின் மீதான விசாரணை சுல்தான்பூர் நீதிமன்றத்தில்  நேற்று(நவ. 28)  நடைபெற்ற நிலையில், டிசம்பர் 16ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு ராகுல் காந்திக்கு நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.

இந்த சம்பவம் நடைபெற்ற 2018ஆம் ஆண்டு, பாஜக தலைவராக அமித் ஷா பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

முன்னதாக, குஜராத்தின் உள்துறை அமைச்சராக அமித் ஷா இருந்தபோது, 2005ஆம் ஆண்டு நிகழ்ந்த போலி என்கவுன்ட்டர் வழக்கில் அவரது பெயரும்  சேர்க்கப்பட்டது. இந்தநிலையில், இந்த வழக்கை  விசாரித்த  மும்பையில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றம் வழக்கிலிருந்து அமித் ஷாவை  விடுவித்து தீர்ப்பளித்தது குறிப்பிடத்தக்கது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com