தமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் கேரளத்துக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு அசாம்: ஏப்ரல் 9 பேரவைத் தேர்தல் 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 824 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது 5 மாநில தேர்தல்களில் மொத்தம் 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கலையே உயிர்மூச்சு...

வீட்டில் ஒலித்த பாடல்கள், பள்ளி நிகழ்ச்சிகளில் கேட்ட உரைகள், நூலகத்தில் வாசித்த கவிதைகள் போன்றவை என் உள்ளத்தில் தீப்பொறியை ஏற்படுத்தின.

News image
Updated On :15 மார்ச் 2026, 10:32 am

தினமணி செய்திச் சேவை

பொ.ஜெயச்சந்திரன்

'வீட்டில் ஒலித்த பாடல்கள், பள்ளி நிகழ்ச்சிகளில் கேட்ட உரைகள், நூலகத்தில் வாசித்த கவிதைகள் போன்றவை என் உள்ளத்தில் தீப்பொறியை ஏற்படுத்தின. மொழியின் இனிமை என்னைக் கவர்ந்தது. இசையின் ராகம் மனதை ஈர்த்தது. நடன அசைவுகள் என் உணர்வுகளை வெளிப்படுத்தியது.

இவ்வாறு பல துறைகளின் அழகை உணர்ந்தபோது, அவற்றைக் கற்று மேடையில் வெளிப்படுத்த வேண்டும் என்ற ஆர்வம் இயல்பாக உருவானது. கலை என்பது சிலருக்கு ஒரு பொழுதுபோக்காக இருக்கலாம். அதுவே எனக்கு ஒரு உயிர் மூச்சாகவே மாறியது' என்கிறார் விளையாட்டுப் போட்டிகளிலும், இலக்கிய மேடைகளிலும் அசத்தும் அரசுப் பள்ளி மாணவி ரா.ஷண்முக ஷிவானி.

இவர் சிவகங்கை மாவட்டத்துக்கு உள்பட்ட அரியக்குடி அரசு மேல்நிலைப்பள்ளியில் 12-ஆம் வகுப்புப் படிக்கிறார். 2025-ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை சார்பில் நடைபெற்ற மாநில அளவிலான கவிதைப் போட்டியில் முதலிடம் பெற்றமைக்காக 'இளம் கவிஞர் விருது' உள்ளிட்ட 75-க்கும் மேற்பட்ட பதக்கங்கள், சான்றிதழ்களைப் பெற்றுள்ளார்.

அரசுப் பள்ளியில் பயின்று அசத்தி வரும் ஷண்முக ஷிவானியிடம் பேசியபோது:

'எனது சிறுவயதில் பாடல், பேச்சு, கவிதை, நடனத்தில் எனக்குத் திறமை இருப்பதை என் பெற்றோர் இராம.சுப்பிரமணியன்- லட்சுமி அறிந்துள்ளனர். அப்போதில் இருந்து அதற்கான பயிற்சியையும் அளித்தனர்.

இரண்டு வயதிலேயே கவிமணி குழந்தைகள் சங்கத்தில் முனைவர் தேவி நாச்சியப்பன் என்பவர் மேடையில் பேசுவதற்கான வாய்ப்பை எனக்கு வழங்கினார். குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பாவின் 'தோட்டம் நல்ல தோட்டம்' எனும் பாடலையே முதலில் பாடினேன்.

பேச்சாற்றல் திறனை நாளுக்கு நாள் வளர்த்துக் கொண்டதால், சவால்களை எளிதாகச் சமாளிக்க முடிந்தது. அரசுப் பள்ளி மாணவி என்பதால், சில இடங்களில் புறக்கணிப்பும், பல இடங்களில் சிறப்பாக கவனிப்பு நிகழ்வும் நடந்ததுள்ளது. தாத்தா பாலு, பாட்டி ஆனந்தா உள்ளிட்ட உறவினர்களும், ஆசிரியர் த.பிரிட்டோ உள்ளிட்ட அனைத்து ஆசிரியர்களும் தந்த ஊக்கம்தான் என்னை பல உதாசீனங்களை உதறித்தள்ளிவிட்டு உயர வைத்தது.

பள்ளி நூலகமே எனக்கு முதன்மை ஆசிரியராக இருந்தது. புத்தகங்கள் என் தோழிகளாயின. ஆசிரியர் கொடுத்த சிறிய வாய்ப்புகளை நான் பெரிய மேடையாக மாற்றிக் கொண்டேன். சிலவற்றில் தோல்வி ஏற்பட்டாலும் மனம் வருந்தவில்லை. அதனை ஒரு பாடமாக எடுத்துக் கொண்டு மீண்டும் முயன்றேன். 'வாய்ப்பு இல்லை' என்று சொல்லாமல் 'வாய்ப்பை உருவாக்கிக் கொள்வோம்' என்ற எண்ணமே என்னை முன்னேற்றியது. பயிற்சிகள்தான் தன்னம்பிக்கையின் தாய் என்று நான் நம்புகிறேன். ஓர் உரையை பல முறை படித்து, அதன் அர்த்தத்தை உள்ளத்தில் உணர்ந்து பேசும்போது பயம் குறைகிறது.

நான் எந்த மேடையில் நின்றாலும், அது என் தனிப்பட்ட சாதனை அல்ல. அது என் குடும்பத்தின் ஆதரவு, ஆசிரியர்களின் வழிகாட்டுதல், தோழிகளின் உற்சாகம், என் பள்ளியின் சூழல் இவை அனைத்தும் சேர்ந்து உருவாக்கிய ஒரு பயணத்தின் பலன். அரசுப் பள்ளியில் படிப்பது ஒரு குறை அல்ல. அது ஒரு வலிமை. தடைகளையும் தாண்டி வெற்றி பெற வேண்டும். சாதிக்க வேண்டும். ரோல் மாடலாக உயர வேண்டும் என்ற எண்ணம் மனதில் தோன்றும்போது, தன்னம்பிக்கை தானாக வந்து இதயத்தில் இருக்கைப் போட்டு அமர்ந்து கொள்கிறது. மேடைக்காகவோ, பரிசுக்காகவோ மட்டுமே பேசாமல் சமூக மாற்றத்துக்கான விதையாக நம் பேச்சு இருக்க வேண்டும். எதிர்மறை சிந்தனைகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

கவிதை, கட்டுரை எழுதும்போது எனக்கு ஊக்கம் தருவது இயற்கையும், மனிதர்கள் வாழ்க்கை அனுபவங்களுமே. மழை பெய்யும் சத்தம், காலையில் உதிக்கும் சூரியன், பறவைகளின் குரல் உள்ளிட்டவை என் எண்ணங்களுக்கு வண்ணம் தருகின்றன. சமுதாயத்தில் நான் காணும் சிறிய சம்பவங்களும்கூட, என் மனதில் பல கேள்விகளை எழுப்புகின்றன.

பிளஸ் 2 பொதுத்தேர்வு நடைபெற்றுக் கொண்டிருப்பதால் சில போட்டிகளைத் தவிர்த்துள்ளேன்' என்கிறார் ரா.ஷண்முக ஷிவானி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.