உத்தரகண்ட் மீட்புத் திட்டம்: யார் இந்த ஆர்னால்டு டிக்ஸ்?

நிலச்சரிவில் சிக்கிய தொழிலாளர்களை மீட்கும் பணியில் முக்கிய அங்கம் வகித்தவர் சர்வதேச நிபுணர் ஆர்னால்டு டிக்ஸ்.
ஆர்னால்டு டிக்ஸ் (படம்: PTI)
ஆர்னால்டு டிக்ஸ் (படம்: PTI)

உத்தரகண்ட் நிலச் சரிவால் சுரங்கப் பாதையில் சிக்கிய தொழிலாளர்கள் செவ்வாய்க்கிழமை இரவு பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.

நாடு முழுவதும் பெரும் கவனம் பெற்ற மீட்புப் பணி 17 நாள்களாக நீடித்தது. இதில் முக்கிய அங்கம் வகித்தவர், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பேராசிரியர் ஆர்னால்டு டிக்ஸ்.

தொழிலாளர்கள் மீட்கப்பட்டப் பிறகு ஆர்னால்டு, அங்குள்ள கோயிலில் அமர்ந்து தியானம் மேற்கொண்டார். சமூக வலைதளங்களில் பலரையும் இந்தச் செயல் நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

வழிபாட்டில் ஆர்னால்டு
வழிபாட்டில் ஆர்னால்டு

யார் இந்த ஆர்னால்டு டிக்ஸ்?

சர்வதேச சுரங்கப்பணி மற்றும் நிலத்தடி கட்டுமானங்களின் கூட்டமைப்புத் தலைவராக உள்ளார், ஆர்னால்டு. உலகளவில் அறியப்படுகிற சுரங்கப்பணி வல்லுனரான இவர் சிக்கலான பணிகளை நடைமுறை சாத்தியங்களோடு நிறைவேற்றுவதில் கவனம் செலுத்தக் கூடியவர்.

நிலத்தடி மற்றும் போக்குவரத்து கட்டுமானத்தில் திறன்பெற்ற ஆர்னால்டு, சட்டம், சூழலியல், அரசியல் மற்றும் நடைமுறை ரீதியாக நிலத்தடி கட்டுமானங்களுக்கான பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

ஏராளமான விருதுகளைப் பெற்றுள்ள ஆர்னால்டு, சுரங்கத்தில் தீவிபத்து ஏற்படாதிருக்கும் மேலாண்மைக்காகவும் விருது பெற்றுள்ளார்.

ராணுவ வீரருடன் ஆர்னால்டு
ராணுவ வீரருடன் ஆர்னால்டு

உத்தரகண்ட் மீட்புப் பணி

வருகிற கிறிஸ்துமஸுக்குள் தொழிலாளர்கள் பாதுகாப்பாக மீட்கப்படுவர் என அவர் ஏற்கெனவே தெரிவித்திருந்த நிலையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய ஆர்னால்டு, “நான் சொன்னதுபோலவே, கிறிஸ்துமஸுக்குள் 41 தொழிலாளர்களும் வீடு திரும்பியுள்ளனர், யாருக்கும் சேதம் இல்லை. கிறிஸ்துமஸ் முன்பாகவே வந்துவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். எங்களுக்கு என்ன வேண்டுமென்பது தெரியும், அதனால் நாங்கள் நிதானமாக இருந்தோம். ஒரு குழுவாகச் சிறப்பாகச் செயலாற்றியுள்ளோம். இந்தியாவில் சிறந்த பொறியாளர்கள் உள்ளனர். இந்த வெற்றிகரமான மீட்புப் பணியில் அங்கம் வகித்தது மகிழ்வுக்குரியதாக உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, மீட்புப் பணியின்போது அவர் , “என்னைப் பொறுத்த வரை இது ஒரு தொன்ம கதையின் அடிப்படையிலானது. மலை எல்லாவற்றையும் கட்டுப்படுத்துகிறது. 41 பேரையும் தாயைப் போல அது பாதுகாக்கும், எந்தவிதத்திலும் காயம் ஏற்படுத்தாது. அவர்கள் காயப்பட்டுள்ளனர், ஆனால், சுரங்கத்துக்குள் பாதுகாப்பாகவே இருப்பர். எப்போது எந்த வழியாக அவர்களை வெளியே அனுப்புவதென மலை தீர்மானிக்கும் ”என பேட்டி அளித்திருந்தார்.

இந்தியாவுக்கான நார்வே தூதர் உள்பட பலரும் இவரது பணியைப் பாராட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com