பீமா கோரேகான் வழக்கு: வரவர ராவுக்கு ஹைதராபாத் செல்ல அனுமதி

இடதுசாரி செயல்பாட்டாளர் வரவர ராவுக்கு ஹைதராபாத் செல்ல, சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
வரவர ராவ்
வரவர ராவ்

மும்பை: தேசிய புலனாய்வு முகமையின் சிறப்பு நீதிமன்றம், செயல்பாட்டாளர் வரவர ராவுக்கு கண்புரை சிகிச்சை மேற்கொள்ள ஹைதராபாத் செல்ல அனுமதியளித்துள்ளது.

நீதிபதி ராஜேஷ் கட்டாரியா தலைமையிலான அமர்வில் புதன்கிழமை அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தெலங்கானா தலைநகருக்கு டிச. 5 முதல் 11 தேதிக்குள், இடது கண் அறுவை சிகிச்சை மேற்கொள்ள வரவர ராவ் செல்லலாம் என உத்தரவிடப்பட்டுள்ளது.

ஹைதராபாத்தில் எங்கு தங்கவிருக்கிறார், அவரின் பயண விபரங்கள், தங்குமிட முகவரி மற்றும் தொடர்பு எண் ஆகியவற்றைத் தேசிய புலனாய்வு முகமைக்கு டிச.4-ம் தேதி அன்று தெரியப்படுத்த வேண்டும் எனவும் அதில் குறிப்பிட்டுள்ளது.

இந்த அனுமதியைத் தவறாகப் பயன்படுத்தக் கூடாது எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

2017, டிசம்பா் 31-ஆம் தேதி புணேவில் நடைபெற்ற எல்கா் பிரிஷத் மாநாட்டில் வரவர ராவ் பேசிய மறுநாள் பீமா கோரேகானில் வன்முறை நடைபெற காரணமாக அமைந்ததாகவும், இதற்கு மாவோயிஸ்ட் தொடா்பு இருப்பதாகவும் புணே போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தெலுங்கு கவிஞரும் செயல்பாட்டாளருமான வரவர ராவைக் கைது செய்தனர்.

ஆகஸ்டு 2022, உச்ச நீதிமன்றம் மருத்துவ காரணங்களுக்காக வரவர ராவுக்கு ஜாமீன் வழங்கியது.

கடந்த மாதம், உயர் நீதிமன்றம் வலது கண்ணில் சிகிச்சை மேற்கொள்ள அனுமதித்திருந்த நிலையில் சிகிச்சைக்குப் பிறகு திரும்பி வந்தவுடன் மற்றொரு கண்ணில் சிகிச்சை மேற்கொள்ள விசாரணை நீதிமன்றத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் அவருக்கு தற்போது அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 2018 பீமா கோரேகான் வழக்கைத் தேசிய புலனாய்வு முகமை விசாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com