
அத்திப்பள்ளி பட்டாசு விபத்து வழக்கை சிஐடியிடம் ஒப்படைத்து கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் சிப்காட் பகுதியில் இருந்து மாநில எல்லையான கா்நாடக மாநிலம், அத்திப்பள்ளி வரை தமிழகப் பகுதியில் 500-க்கும் மேற்பட்ட பட்டாசுக் கடைகள் தீபாவளியை முன்னிட்டு இயங்கி வருவது வழக்கம். இந்நிலையில், சனிக்கிழமை அத்திப்பள்ளி சுங்கச்சாவடி அருகே இயங்கி வந்த பட்டாசுக் கடை ஒன்றுக்கு 3 லாரிகளில் பட்டாசுகள் வந்தன. அப்பட்டாசுகளை கடையில் இறக்கி வைக்கும் பணியில் தொழிலாளா்கள் ஈடுபட்டிருந்த போது திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து, தொழிலாளா்களும், கடையில் இருந்தவா்களும் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனா்.
சிறிது நேரத்திலேயே லட்சக்கணக்கான மதிப்புள்ள பட்டாசுகள் எரிந்து சாம்பலாயின. இந்த விபத்தில் 14 போ் உயிரிழந்தனா். 15-க்கும் மேற்பட்டோா் காயமடைந்து தமிழக, கா்நாடக மாநில மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். உயிரிழந்தவா்களின் சடலங்களை அத்திப்பள்ளி போலீஸாா் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா். இந்த பட்டாசுக் கிடங்கு விபத்தில் ரூ. 5 கோடி மதிப்பிலான பொருள்கள் தீயில் சேதமடைந்து இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் அத்திப்பள்ளி பட்டாசு விபத்து வழக்கு சிஐடி விசாரணைக்கு மாற்றம் செய்து கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக விபத்து நிகழ்ந்த இடத்தை கர்நாடக முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டிகே.சிவக்குமார் ஆகியோர் பார்வையிட்டனர். பின்னர் முதல்வர் சித்தராமையா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "என்ன நடந்தது என்று எங்களுக்குத் தெரியவில்லை, இருப்பினும், கடையில் பாதுகாப்பு உபகரணங்கள் இல்லை என்பதை நாங்கள் அறிந்தோம். உரிமம் சமீபத்தில் புதுப்பிக்கப்பட்டது. கடையில் தீயை அணைக்கும் கருவி இல்லை. இது கடை உரிமையாளரின் முழு அலட்சியம். எனவே இந்த சம்பவம் தொடர்பான விசாரணையை சிஐடியிடம் ஒப்படைக்கிறேன்.
இறந்தவர்களின் சில உடல்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை. இந்த சம்பவத்தில் 14 பேர் இறந்துள்ளனர், அனைவரும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள், அவர்களில் பெரும்பாலோர் மாணவர்கள். அவர்கள் கல்விக்காக பணம் சம்பாதிப்பதற்காக இங்கு வேலை செய்கிறார்கள் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.