தெலங்கானா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், மிசோரம், சத்தீஸ்கர் ஆகிய 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
சத்தீஸ்கர், ராஜஸ்தானில் காங்கிரஸும், மத்திய பிரதேசத்தில் பாஜகவும் தெலங்கானாவில் சந்திரசேகர் ராவின் பாரத ராஷ்ட்ரிய சமிதியும், மிசோரத்தில் மிசோ தேசிய முன்னணியும் ஆட்சி செய்து வருகின்றன. அடுத்தாண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கும்நிலையில், இந்த 5 மாநில பேரவைத் தேர்தல் முடிவுகள் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேதியை தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் புது தில்லியில் இன்று செய்தியாளர்கள் சந்திப்பின்போது அறிவித்தார்.
செய்தியாளர்கள் சந்திப்பின் போது ராஜீவ் குமார் கூறியது:
5 மாநிலங்களில் ஆண் வாக்காளர்கள் 8.2 கோடி பேர், பெண் வாக்காளர்கள் 7.8 பேர் உள்ளனர். முதல் முறையாக 60.2 லட்சம் பேர் வாக்களிக்கவுள்ளனர். 5 மாநிலங்களில் உள்ள 679 தொகுதிகளுக்கு 1.77 லட்சம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்படவுள்ளன.
சத்தீஸ்கரில் இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது. முதல் கட்டமாக நவம்பர் 7-ஆம் தேதியும், இரண்டாம் கட்டமாக நவம்பர் 17-ஆம் தேதியும் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
மிசோரம் மாநிலத்தில் ஒரே கட்டமாக நவம்பர் 7-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும். மத்தியப் பிரதேசத்தில் நவம்பர் 17-ஆம் தேதியும், ராஜஸ்தான் மாநிலத்தில் நவம்பர் 23-ஆம் தேதியும், தெலங்கானாவில் நவம்பர் 30-ஆம் தேதியும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
அனைத்து மாநிலங்களுக்கும் வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 3-ஆம் தேதி நடைபெற்று அன்றே தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும். இந்த தேர்தல் நடைமுறை டிசம்பர் 5ஆம் தேதி நிறைவுபெறுகிறது” என்று அறிவித்துள்ளார்.
மேலும், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து 5 மாநிலங்களிலும் தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.