வயநாடு தொகுதியை கைவிடுகிறாரா ராகுல்?

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் வட இந்தியாவில் குறிப்பாக உத்தர பிரதேசத்தில் போட்டியிட வேண்டும் என்று தேசிய காங்கிரஸ் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். 
வயநாடு தொகுதியை கைவிடுகிறாரா ராகுல்?

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் வட இந்தியாவில் குறிப்பாக உத்தர பிரதேசத்தில் போட்டியிட வேண்டும் என்று தேசிய காங்கிரஸ் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். 

2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்களே உள்ள நிலையில் நாடு முழுவதும் உள்ள கட்சிகள் தீவிரமாக தேர்தல் பணிகளைத் தொடங்கியுள்ளன.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

இந்நிலையில் கடந்த 2019 தேர்தலின்போது பிரதமர் மோடி குறித்து மறைமுகமாக விமரிசித்ததாகக் கூறி வழக்கு தொடரப்பட்டு அவருக்கு சூரத் நீதிமன்றம் 2 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து கடந்த மார்ச் மாதம் உத்தரவிட்டது. ராகுலின் எம்.பி. பதவியும் பறிக்கப்பட்டது. 

ஆனால், இதுதொடர்பான மேல்முறையீட்டு வழக்கில் உச்சநீதிமன்றம் ராகுலின் தண்டனையை நிறுத்தி வைத்தது. இதையடுத்து, ராகுல் காந்திக்கு மீண்டும் எம்.பி. பதவி வழங்கி மக்களவைச் செயலகம் கடந்த ஆகஸ்ட் மாதம் 7-ஆம் தேதி அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி அவர் வயநாடு எம்.பி.யாகத் தொடர்கிறார். 

இந்நிலையில் வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் ராகுல் காந்தி வயநாடு தொகுதியில் போட்டியிட வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. 

'வயநாட்டில் ராகுல் காந்தி மீண்டும் போட்டியிட எந்த காரணமும் இல்லை. அவர் கன்னியாகுமரி அல்லது கர்நாடகத்தில் ஏதேனும் ஒரு தொகுதியில் போட்டியிடலாம்' என்று கேரள காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் முள்ளப்பள்ளி ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். 

கேரளத்தில் உள்ள மேலும் சில காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபாலின் ஆதரவாளர்களும் இதனை ஆமோதிக்கின்றனர். 

அதேநேரத்தில் காங்கிரஸ் தேசிய தலைவர்கள் பலரும், ராகுல் காந்தி வட மாநிலத்தில் போட்டியிட வேண்டும் என்று விரும்புகின்றனர். 

ராஜீவ் காந்தி, சோனியா காந்தி உள்ளிட்டோர் போட்டியிட்டு வெற்றி பெற்ற தங்களின் குடும்பத் தொகுதியான அமேதியில் கடந்த 2019 தேர்தலில் போட்டியிட்ட ராகுல் காந்தி அதில் தோல்வியைத் தழுவினார். 

இதனால் அமேதி தொகுதியை மீண்டும் காங்கிரஸ் வசம் கொண்டுவரும் பொருட்டு ராகுல் அங்கு போட்டியிட வேண்டும் என்றும் இது காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமின்றி இந்தியா கூட்டணிக்கும் வலுசேர்க்கும் என்றும் கூறுகின்றனர். 

ராகுல் காந்தியின் நடைப்பயணம் இந்தியா முழுவதும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே 2024 தேர்தலில் அவர் வடமாநிலத்தில்தான் போட்டியிட வேண்டும் என்று மூத்த காங்கிரஸ் தலைவர் ஒருவர் கூறுகிறார். 

கன்னியாகுமரி தொகுதியைப் பொருத்தவரை ஹெச். வசந்தகுமாரின் மறைவையடுத்து கடந்த 2021 இடைத்தேர்தலில் போட்டியிட்ட அவரது மகன் விஜய் வசந்த் வெற்றி பெற்று எம்.பி. யாக உள்ளார். 

ராகுல் காந்தி, வட இந்தியாவில் குறிப்பாக உத்தர பிரதேசத்தில் போட்டியிட்டால் தேசிய அளவில் காங்கிரஸ் கணிசமான பலனை அடையும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

கேரளத்தில் வயநாட்டில் போட்டியிட அந்த மாநில காங்கிரஸ் தலைவர்கள் சிலர் விரும்பினாலும் அது கேரளத்தில் காங்கிரஸ் வளர்ச்சிக்கு உதவும் என்றாலும், ஒட்டுமொத்த நாட்டின் பார்வையில், அவர் வடஇந்தியாவில் போட்டியிடவே பெரும்பாலான காங்கிரஸ் கட்சியினர் வலியுறுத்துகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com