சிக்கிம் வெள்ளம்: 105 பேரைத் தேடும் பணி நீடிப்பு: பலி 34ஆக உயர்வு

சிக்கிம் வெள்ளம்: 105 பேரைத் தேடும் பணி நீடிப்பு: பலி 34ஆக உயர்வு

சிக்கிம் மாநிலத்தில் பேரழிவை ஏற்படுத்திய வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 105 பேரை தேடும் பணி நடைபெற்று வருகின்றது. 

சிக்கிம் மாநிலத்தில் பேரழிவை ஏற்படுத்திய வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 105 பேரை தேடும் பணி நடைபெற்று வருகின்றது. 

வடக்கு சிக்கிமில் கடந்த புதன்கிழமை மேக வெடிப்பால் பெய்த கனமழையால் தீஸ்தா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுங்தாங் பகுதியில் நீர்மின் திட்ட அணை உடைந்து, பாக்யாங், கேங்டாக் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் வெள்ளம் சூழ்ந்தது. 

இந்த நிலையில், இந்திய விமானப்படை மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளைத் தொடங்கியுள்ளது. சிக்சித் தவிக்கும் சுற்றுலாப் பயணிகளின் முதல் குழு லாச்சனில இருந்து வடக்கு சிக்கிமில் உள்ள மங்கனுக்கு விமானம் மூலம் ஏற்றிச் சென்றது. 

முதல்வர் பிரேம் சிங் தமாங், தலைமைச் செயலாளர் விபி பதக், காங்டாக் சென்றடைந்த ராணுவத் தளபதி ஜெனரல் மனோஜ் பாண்டே மற்றும் ஆயுதப் படைகளுடன் ஒருங்கிணைந்த நிவாரணம் மற்றும் மீட்புப்பணிகளுக்காக அதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டத்தை நடத்தினார். 

சிக்கிமில் பதிவான 34 இறப்புகளைத் தவிர, வடக்கு மேற்கு வங்காளத்தை ஒட்டியுள்ள ஜல்பைகுரி மாவட்ட நிர்வாகம், தீஸ்தாவின் கீழ்நிலையிலிருந்து 40 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

சிக்கிமில், பாக்யோங் மாவட்டத்தில் 10 ராணுவ வீரர்கள் உள்பட 22 பேர் உயிரிழந்துள்ளனர், அதைத் தொடர்ந்து காங்டாக்கில் 6 பேர், மங்கனில் 4, நாம்சியில் இருவரும் உயிரிழந்துள்ளனர். 

சிக்கிமை நாட்டின் இதர பகுதிகளுடன் இணைக்கும் முக்கிய சாலையான தேசிய நெடுஞ்சாலை-10 கடுமையாக சேதமடைந்துள்ளது. மேலும் 13 பாலங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுவிட்டன. இதனால், வடக்கு சிக்கிமின் பல பகுதிகளில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

வெள்ளத்தால் 85 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். நிவாரண முகாம்களில் சுமார் 7,000 போ் தங்கவைக்கப்பட்டுள்ளனர். 1,300-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன. காணாமல் போன மேலும் 105 பேரை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. 

இதற்கிடையில் அடுத்த 5 நாள்களுக்கு மேற்கு வங்கம் மற்றும் சிக்கிமில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com