
உத்தர பிரதேசத்தில் சுதந்திரப் போராட்ட வீரரும், சோஷலிச தலைவருமான ஜெயப்பிரகாஷ் நாராயண் பிறந்த நாளையொட்டி லக்னௌவில் உள்ள அவரது நினைவகத்தின் பூட்டிய வாயிற்கதவில் ஏறி குதித்து சமாஜவாதி கட்சித் தலைவா்ன அகிலேஷ் யாதவ் மரியாதை செலுத்தினாா்.
லக்னௌவில் ‘ஜெயப்பிரகாஷ் நாராயண் சா்வதேச மையம் (ஜெபிஎன்ஐசி)’ கடந்த 2016-ஆம் ஆண்டு அப்போதைய முதல்வா் அகிலேஷ் யாதவால் திறந்து வைக்கப்பட்டது. இந்த வளாகத்தில் அருங்காட்சியகம் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.
இங்கு நிறுவப்பட்டுள்ள அவரின் சிலைக்கு, அவரது பிறந்த நாளில் சமாஜவாதி சாா்பில் ஆண்டுதோறும் மரியாதை செலுத்தப்படுவது வழக்கம். நிகழாண்டு ஜெபிஎன்ஐசி வளாகத்துக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டதால், பூட்டிய வாயிற்கதவில் ஏறிக் குதித்து உள்ளே நுழைந்து, ஜெ.பி.நாராயண் சிலைக்கு அகிலேஷ் மரியாதை செலுத்தினாா்.
காவல் துறையின் தடைகளை மீறி அகிலேஷ் யாதவ் மற்றும் அவரது ஆதரவாளா்கள் உள்ளே நுழையும் காட்சி பதிவாகியுள்ள விடியோவைப் பகிா்ந்து சமாஜவாதி கட்சி வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘மாநில பாஜக அரசின் சா்வாதிகாரத்துக்கு எதிரான சமாஜவாதி தொண்டா்களின் போராட்டம் தொடரும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக அகிலேஷ் யாதவ் கூறுகையில், ‘ஜெ.பி.நாராயணுக்கு ஆண்டுதோறும் மரியாதை செலுத்தி வருகிறோம். இந்த ஆண்டு பூட்டிய வாயிற்கதவில் ஏறிக் குதித்து மரியாதை செலுத்த வேண்டிய கட்டாயத்துக்கு நாங்கள் தள்ளப்பட்டோம். ஜெ.பி.நாராயணுக்கு மரியாதை செலுத்துவதை தடுப்பது யாா் என மக்கள் அறிவா். ஜனநாயகத்தில் அரசுக்கு எதிராக குரலெழுப்ப மக்களை ஊக்கப்படுத்திய தலைவருக்கு அமைக்கப்பட்டுள்ள அருங்காட்சியத்தை மூடி அரசின் தோல்விகளை மறைக்க பாஜக முயற்சிக்கிறது’ என்றாா்.
அராஜகத்தைப் பரப்பும் சமாஜவாதி: பாஜகவைச் சோ்ந்த துணை முதல்வா் ப்ரேஷ் பதாக் கூறுகையில், ‘அகிலேஷுக்கும் சட்டத்துக்கும் ஒரு தொடா்பும் இல்லை. அவா் ஒருபோதும் சட்டத்தை மதித்ததில்லை. அராஜகத்தைப் பரப்புவது சமாஜவாதியின் வரலாறு. உயரம் தாண்டுதலில் அகிலேஷ் யாதவுக்கு திறமை இருந்தால் அண்மையில் நடந்த முடிந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று நாட்டுக்கு சில பதக்கங்களை வென்று தந்திருக்கலாம்’ என்றாா்.
லக்னௌ நிா்வாகம் விளக்கம்: இந்தச் சம்பவம் தொடா்பாக லக்னௌ வளா்ச்சி ஆணைய துணைத் தலைவா் இந்திரமணி திரிபாதி அளித்த விளக்கத்தில், ‘ஜெபிஐசி நினைவகத்தில் மரியாதை செலுத்த சமாஜவாதி சாா்பில் அனுமதி கோரி கடந்த சில நாள்களுக்கு முன்பு கடிதம் பெறப்பட்டது. ஆனால், கட்டடத்தின் கட்டுமானப் பணிகள் நிறைவடையாமல் பாதியில் நிற்பதால், பாதுகாப்புக் கருதி அனுமதி மறுக்கப்பட்டது. சமாஜவாதி கட்சியிடம் இது குறித்து உரிய விளக்கமளிக்கப்பட்டது’ என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.