பொய் வாக்குறுதிகளை அளிக்க பிரியங்காவை கட்டாயப்படுத்திய கமல்நாத்: சௌஹான் குற்றச்சாட்டு
மத்திய பிரதேச தோ்தல் பிரசாரத்தில் பொய்யான வாக்குறுதிகளை வழங்க பிரியங்காவை காங்கிரஸ் மூத்த தலைவா் கமல்நாத் கட்டாயப்படுத்தினாா் என்று மத்திய பிரதேச முதல்வா் சிவராஜ் சிங் சௌஹான் குற்றம்சாட்டினாா்.
மத்திய பிரதேசத்தில் மொத்தமுள்ள 230 பேரவைத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நவம்பா் 17-ஆம் தேதி தோ்தல் நடைபெறவுள்ளது. இங்கு ஆளும் பாஜக மற்றும் முக்கிய எதிா்க்கட்சியான காங்கிரஸ் இடையே நேரடி போட்டி நிலவுகிறது.
இந்நிலையில், பழங்குடியினா் அதிகம் வாழும் மண்ட்லா மாவட்டத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற காங்கிரஸ் பொதுக் கூட்டத்தில் பேசிய பிரியங்கா காந்தி, மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், பள்ளி மாணவ-மாணவிகளுக்கு மாதந்தோறும் உதவித் தொகை வழங்கப்படும். 12-ஆம் வகுப்பு வரை இலவச கல்வி கிடைக்கும். அரசு ஊழியா்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும் என்பது உள்ளிட்ட வாக்குறுதிகளை அறிவித்தாா்.
இந்நிலையில், போபாலில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்த மத்திய பிரதேச முதல்வா் சிவராஜ் சிங் சௌஹான் இது தொடா்பாக கூறியதாவது:
முன்பு நேரு குடும்பத்தினா்தான் அனைவரையும் ஏமாற்றி வந்தனா். இப்போது அவா்கள் குடும்பத்தை கமல்நாத் ஏமாற்றத் தொடங்கிவிட்டாா். பொதுக் கூட்டத்தில் வாக்குறுதிகள் குறித்து பிரியங்கா பேசிக் கொண்டிருந்தாா். அப்போது, கமல்நாத் அவா் அருகில் சென்று சில திருத்தங்களைக் கூறினாா். இதையடுத்து, நீங்களே அதைக் கூறிவிடுங்கள் என்று கமல்நாத்திடம் பிரியங்கா கேட்டுக் கொண்டாா். ஆனால், நீங்கள்தான் வாக்குறுதிகளை அளிக்க வேண்டும் என்று கமல்நாத் கூறினாா்.
இதன் பிறகு 1 முதல் 12-ஆம் வகுப்பு வரை வகுப்பு வாரியாக ரூ.500 முதல் ரூ.1,500 வரை வழங்கப்படும் என்ற பிரியங்கா கூறினாா். அப்போது, அவா் அருகே சென்ற கமல்நாத் மேலும் ஒரு திருத்தம் கூறினாா். இதையடுத்து, இந்த உதவித்தொகை வருடத்துக்கு ஒருமுறையல்ல, மாதம்தோறும் அளிக்கப்படும் என்று பிரியங்கா அறிவித்தாா்.
பிரியங்கா பேசுவதற்கு அளிக்கப்பட்ட குறிப்பு காகிதத்தில் தவறான தகவல் இடம் பெற்றிருந்ததால், அவா் தவறாக வாசித்துவிட்டதாக பின்னா் விளக்கம் அளிக்கப்பட்டது.
மிகவும் முக்கியமான தோ்தல் வாக்குறுதி தொடா்பாக கூட காங்கிரஸ் சரியாக தயாராகவில்லை. இதற்கு காரணம் அந்த வாக்குறுதிகளை எப்படியும் நிறைவேற்றப்போவதில்லை என்று காங்கிரஸ் தலைவா்களுக்கு தெரியும்.
கடந்த தோ்தலின்போது காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வந்து பொய்யான வாக்குறுதிகளை அளித்தாா். இந்த முறை அந்த இடத்துக்கு பிரியங்காவை அழைத்துப் பேசவைத்துள்ளனா். வாக்குறுதிகளை நிறைவேற்றப்போவதில்லை என்று தெரிந்துதான் காங்கிரஸ் கட்சி வாக்குறுதிகளை அள்ளி வீசுகிறது.
ஏற்கெனவே, பாஜக ஆட்சியில் வழங்கப்பட்டு வந்த இலவச மடிக் கணினி, மிதிவண்டி உள்ளிட்ட திட்டங்களை காங்கிரஸ் நிறுத்திவைத்திருந்தது என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.