இவர்கள் குற்றவாளிகள் அல்லர் என்றால் எங்கள் குழந்தைகளைக் கொன்றது யார்?

நிதாரி தொடர் கொலை வழக்கில் மரண தண்டனை பெற்ற இருவர் விடுதலை செய்யப்பட்ட நிலையில், இவர்கள் குற்றவாளிகள் அல்லர் என்றால் எங்கள் குழந்தைகளைக் கொன்றது யார் என்று பெற்றோர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
சுரேந்திர கோஹ்லி, மொனீந்தர் சிங் பாந்தர்
சுரேந்திர கோஹ்லி, மொனீந்தர் சிங் பாந்தர்

நிதாரி தொடர் கொலை வழக்கில் மரண தண்டனை பெற்ற இருவர் விடுதலை செய்யப்பட்ட நிலையில், இவர்கள் குற்றவாளிகள் அல்லர் என்றால் எங்கள் குழந்தைகளைக் கொன்றது யார் என்று பெற்றோர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய நிதாரி தொடர் கொலை வழக்கில், 13 மரண தண்டனைகளைப் பெற்ற சுரீந்தர் கோலியை விடுதலை செய்து அலகாபாத் உயர் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்திருந்தது.

நிதாரி தொடர் கொலை வழக்கில் போதிய ஆதாரம் இல்லை எனக் கூறி குற்றஞ்சாட்டப்பட்ட தொழிலதிபர் மொனீந்தர் சிங் பாந்தர், அவரது வீட்டுப் பணியாளர் சுரேந்திர கோலி ஆகிய இருவரையும் விடுதலை செய்து நேற்று தீர்ப்பு வெளியாகியிருந்தது.

2006ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஜபுலால் - சுனிதா தம்பதி தங்களது 10 வயது மகளை கடைசியாகப் பார்த்தனர். பிறந்ததிலிருந்து நிதாரி கிராமத்தை விட்டு ஒருமுறை கூட வெளியே சென்றிராத அந்தச் சிறுமி காற்றில் மாயமாகக் கரைந்துபோனார். இரண்டு மாதங்களுக்குப் பிறகு, பாந்தரின் பயங்கர வீட்டில் நடந்த கொலைகளில் பலியானவர்களில் அந்தச் சிறுமியும் ஒருவர் என்று காவல்துறை தெரிவித்திருந்தது.

நிதாரி கிராமத்தில் இன்று இளைஞர்களாகவும் இளைஞிகளாகவும் திருமணமாகி குழந்தைகளுடன் இருந்திருக்க வேண்டிய பல குழந்தைகள் அந்தச் சிறுமியைப் போலவே காணாமல் போயிருந்தனர். அவர்களது குடும்பத்தினர் பலருக்கும் நேற்று ஒரு செய்தி காத்திருந்தது. தொலைக்காட்சி மற்றும் தொலைபேசி வாயிலாக அவர்களுக்கு அந்தச் செய்தி கிடைத்திருந்தது. அதுதான், சுரீந்தர் கோலி விடுதலை செய்யப்பட்டார் என்பது.

நிதாரி தொடர் கொலைச் சம்பவத்தில் பலியான குழந்தைகளின் பெற்றோர், இந்தச் செய்தியைக் கேட்டதும் அதிர்ச்சி அடைந்தனர். அவர்களின் ஒருமித்த குரலில், எங்கள் பிள்ளைகளை கோலியும் பாந்தரும் கொல்லவில்லை எனில், எங்கள் குழந்தைகளைக் கொன்றது யார்? என்று கேள்வி எதிரொலித்தது.

ஊரில் காலணி விற்பனை செய்துவந்த பெண்மணி கூறுகையில், எங்களுக்குத் திருமணமாகி எட்டு ஆண்டுகளுக்குப் பிறகுதான் எனக்கு மகன் பிறந்தார். அவர் இப்போது இல்லை. என் இதயத்தின் ஒரு பகுதியாக இன்னும் துடித்துக்கொண்டிருக்கிறார். ஆனால், அவரைக் கொலை செய்ததாகத் தண்டிக்கப்பட்ட இருவரும் விடுதலை செய்யப்பட்டுவிட்டனர்.  பிறகு எங்கள் பிள்ளைகள் எப்படி இறந்தார்கள்? என்று தயவு செய்து யாராவது சொல்லுங்கள் என்று கண்ணீர் வடிக்கிறார் மகனை இழந்த தாய்.

நிதாரி சம்பவத்தில் தங்களது பிள்ளைகளை இழந்த பெற்றோர்களில் தற்போது அந்த ஊரில் வெறும் இரண்டு குடும்பங்கள்தான் வசிக்கின்றன. அதிலும், 10 வயது சிறுமியை இழந்த பெற்றோர், தங்களுக்கு என இருந்த ஒரு துண்டு நிலத்தையும் இந்த வழக்குக்காக ரூ.4 லட்சத்துக்கு விற்று வழக்குரைஞருக்காக செலவிட்டு இன்று தெருவில் நிற்பதாகவும், குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டபோது கடைசியாக நியாயம் கிடைத்துவிட்டது என்று மகிழ்ந்திருந்தோம். ஆனால் எங்கள் நம்பிக்கை அனைத்தும் தகர்ந்துவிட்டது என்கிறார்கள்.

இவர்களது மற்ற பிள்ளைகள் திருமணமாகி, பல்வேறு இடங்களில் குடும்பமாக வாழ்ந்து வரும் நிலையில், எங்களது 10 வயது மகளை மறக்க முடியாமல் அமைதியில்லாமல் தவிப்பதாகவும் கூறுகிறார்கள். என் மகளின் துப்பட்டா கிழிந்திருந்தது. அதனைத் தைப்பதற்காக அவளிடம் கொடுத்து தையல்கடைக்கு அனுப்பியிருந்தேன். ஆனால் அவள் திரும்பவேயில்லை.. இதுவரை என்கிறார்கள் கண்ணீர் சிந்தியபடி.

உத்தரப்பிரதேசத்தின் நொய்டாவில் கடந்த 2006ஆம் ஆண்டு பல இளம்பெண்கள் மற்றும் சிறுமிகள் தொடர்ச்சியாக காணாமல் போயினர். விசாரணையில், நகரின் நிதாரி பகுதியில் தொழிலதிபர் மொனீந்தர் சிங் பாந்தரின் வீட்டின் பின்புறம் வடிகாலில் மனித எலும்புக் கூடுகள் கண்டறியப்பட்டன.

இதையடுத்து, அப்பகுதியில் நடத்தப்பட்ட சோதனையில் மேலும் பல எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டன.

இவற்றில் பெரும்பாலும் அந்தப் பகுதியில் காணாமல் போன இளம்பெண்கள் மற்றும் சிறுமிகளின் எலும்புக்கூடுகள் என்பது விசாரணையில் தெரிய வந்தது. பலியான பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்பட்டது. இந்தக் கொலைகளில் தொழிலதிபர் பாந்தர், அவரது வீட்டுப் பணியாளர் கோலி ஆகிய இருவரும் ஈடுபட்டதோடு, மனித மாமிசத்தை உண்டு, எலும்புக்கூடுகளை கழிவுநீர் கால்வாயில் வீசியதாக குற்றம் சுமத்தப்பட்டது.

வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது. கோலி மீது 19 வழக்குகளும், பாந்தர் மீது 6 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டன. கோலி மீதான 19 வழக்குகளில் 3ல் போதிய ஆதாரமில்லை என்று முடித்துக் கொண்டது சிபிஐ. மற்ற 16 வழக்குகளில் 3 வழக்குகளில் அவர் விடுவிக்கப்பட்டார்.

மற்றொரு வழக்கில் மரண தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக அலகாபாத் உயர் நீதிமன்றம் குறைத்தது. இது தொடர்பான மேல்முறையீடு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. பாந்தரின் 6 வழக்குகளில் 4ல் அவர் ஏற்கனவே விடுவிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் மற்ற வழக்குகளில் இருந்து விடுவிக்கக் கோரி அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் இருவரும் மேல்முறையீடு செய்தனர். விசாரணையின் முடிவில் உயர் நீதிமன்ற நீதிபதிகள், ஆதாரங்கள் கைப்பற்றப்பட்ட நாளில் காவல்துறையிடம் கோலி தெரிவித்த தகவலின் அடிப்படையில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் விதிகளை மீறும் வகையில், குற்றவாளிக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்படாமல், சட்ட உதவிகளை வழங்காமல் 60 நாள்கள் காவல்துறை விசாரணைக்குப் பிறகு வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. வாக்குமூலத்தைப் பதிவு செய்ய பின்பற்ற  வேண்டிய நடைமுறைகள் எதுவும் பின்பற்றப்படவில்லை.

முதலில் பாந்தர், கோலி ஆகிய இருவர் மீதும் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. பிறகு முழு குற்றச்சாட்டும் கோலி மீது மட்டும் சுமத்தப்பட்டது. விசாரணை காலக்கட்டத்தில் அரசுத் தரப்பு சாடசியங்கள் மாறிக் கொண்டே இருந்தன. ஆனால் அவை அனைத்தும் குற்றஞ்சாட்டப்பட்ட கோலி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் இருக்குமாறு கவனம் செலுத்தப்பட்டது.

மனித உறுப்பு வர்த்தகம் தொடர்பான வழக்கில் சிக்கியுள்ள மருத்துவர், தொழிலதிபர் பாந்தர் வீட்டுக்கு இடையிலுள்ள வடிகாலில்தான் மனித எலும்புக்கூடுகள் கண்டறியப்பட்டன. எனினும் மனித உறுப்பு வர்த்தகத்தின் பங்குக்கான சாத்தியக்கூறுகளை விசாரணை அமைப்புகள் கண்டுகொள்ளவில்லை. 

மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத் துறை அமைச்சகத்தின் பரிந்துரைகளுக்குப் பிறகும் இந்த விசாரணையைத் தவிர்த்திருப்பது புலனாய்வு அமைப்புகள் மீது மக்கள் கொண்ட நம்பிக்கையைச் சிதைக்கும் வகையில் உள்ளது.

ஆதாரங்களைச் சேகரிப்பதில் அப்பட்டமான விதிமீறல் மூலம் விசாரணையின் தரம் தாழ்ந்துவிட்டது. உறுப்பு வர்த்தகத்தின் ஒழுங்கமைக்கப்பட்ட செயல்பாட்டை ஆராயாமல் ஏழை வீட்டுப் பணியாளரைச் சிக்கவைப்பதற்கான முயற்சியாக விசாரணை அமைந்துள்ளது.

குற்றஞ்சாட்டப்பட்டவர்களின் குற்றத்தை நிரூபிக்க அரசு தரப்பு தவறிவிட்டது எனத் தெரிவித்து இருவரையும் விடுவித்து உத்தரவிட்டனர்.

6 வழக்குகளிலும் விடுவிக்கப்பட்ட நிலையில், நொய்டா சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாந்தர் விரைவில் விடுதலை ஆக உள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com