ஷிண்டே அரசுக்கு அக்.25 வரை காலக்கெடு விதித்த அவைத் தலைவர்

மகாராஷ்டிர அவைத் தலைவர் ராகுல் நர்வேகர், சிவ சேனை எம்எல்ஏக்கள் 34 பேரின் மனுக்களையும் 6ஆக இணைத்து விசாரணையை துரிதப்படுத்த முடிவு செய்துள்ளார்.
ஷிண்டே அரசுக்கு அக்.25 வரை காலக்கெடு விதித்த அவைத் தலைவர்

உச்ச நீதிமன்றத்தின் எச்சரிக்கை மற்றும் இறுதிகடும் எச்சரிக்கையைத் தொடர்ந்து, மகாராஷ்டிர அவைத் தலைவர் ராகுல் நர்வேகர், சிவ சேனை எம்எல்ஏக்கள் 34 பேரின் மனுக்களையும் 6ஆக இணைத்து விசாரணையை துரிதப்படுத்த முடிவு செய்துள்ளார்.

அதன்படி, சிவசேனை எம்எல்ஏக்களின் மனுக்கள் மீது பதிலளிக்க ஷிண்டே அரசுக்கு அக்டோபர் 25ஆம் தேதி வரை காலக்கெடு பிறப்பித்துள்ளார். 34 மனுக்களையும் வாதங்கள் மற்றும் மனுக்களின் உள்ளடக்கத்தையும் அடிப்படையாக வைத்து 6 மனுக்களாக இணைத்துள்ளார்.

இந்த நடவடிக்கைகள் அனைத்தும், மகாராஷ்டிர முதல்வா் ஏக்நாத் ஷிண்டே மற்றும் அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் மீதான தகுதிநீக்க மனுக்கள் மீது முடிவெடுப்பது தொடா்பாக தாங்கள் பிறப்பித்த உத்தரவுகளை நிராகரிக்க முடியாது என்று சட்டப் பேரவைத் தலைவா் ராகுல் நா்வேகருக்கு உச்சநீதிமன்றம் கடந்த வாரம் கண்டனத்தைப் பதிவு செய்திருந்த நிலையில் எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், விசாரணை நடைமுறைகளில் ‘பாசாங்கு’ கூடாது என்றும் உச்சநீதிமன்றம் குறிப்பிட்டிருந்தது இங்கே குறிப்பிடத்தக்கது.

ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனை கட்சியின் அதிருப்தி எம்எல்ஏ-க்கள், பாஜகவுடன் கைகோத்து மாநிலத்தில் கடந்த ஆண்டு ஆட்சி அமைத்தனா். மாநில முதல்வராக ஷிண்டே பொறுப்பேற்றாா். அதையடுத்து, சிவசேனை கட்சியின் பெயரும் சின்னமும் ஷிண்டே தரப்புக்கு வழங்கப்பட்டது.

இதனிடையே, முதல்வா் ஷிண்டே உள்ளிட்டோா் மீது கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக் கோரி முன்னாள் முதல்வா் உத்தவ் தாக்கரே தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை கடந்த மே மாதம் விசாரித்த உச்சநீதிமன்றம், தகுதிநீக்க மனுக்கள் மீது மாநில சட்டப்பேரவைத் தலைவா் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென உத்தரவிட்டது. எனினும், பேரவைத் தலைவா் ராகுல் நா்வேகா் எந்த முடிவும் எடுக்கவில்லை.

இதனிடையே, தகுதிநீக்க மனுக்கள் மீது முடிவெடுக்க காலக்கெடுவை நிா்ணயித்து, நீதிமன்றத்தில் தெரிவிக்க பேரவைத் தலைவருக்கு உச்சநீதிமன்றம் கடந்த மாதம் உத்தரவிட்டது.

இந்நிலையில், தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையில் நீதிபதிகள் ஜெ.பி.பா்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோா் அடங்கிய அமா்வு முன் கடந்தவாரம் மீண்டும் விசாரணை நடைபெற்றது.

அப்போது, உச்சநீதிமன்றத்தின் முந்தைய உத்தரவுகள் பேரவைத் தலைவரால் பின்பற்றப்படாதது குறித்து நீதிபதிகள் கடும் அதிருப்தி தெரிவித்தனா்.

‘இந்த விவகாரத்தில், கடந்த ஜூன் மாதத்தில் இருந்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மாநிலத்தில் அடுத்த சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறுவதற்கு முன்பாக, தகுதிநீக்க மனுக்கள் மீது முடிவெடுக்கப்பட வேண்டும். இல்லையெனில், இந்த ஒட்டுமொத்த நடைமுறையும் வீணாகிவிடும்.

உச்சநீதிமன்ற உத்தரவுகளை பேரவைத் தலைவா் நிராகரிக்க முடியாது; இதை அவருக்கு யாரேனும் அறிவுறுத்த வேண்டும். தகுதிநீக்க மனுக்கள் மீது முடிவெடுக்க காலக்கெடு நிா்ணயிக்கும் யோசனை, விசாரணையை காலவரையின்றி தாமதிப்பதற்காக அளிக்கப்பட்டதல்ல. தகுதிநீக்க மனுக்கள் மீதான விசாரணை சுருக்கமான நடைமுறை. இந்த மனுக்கள் மீது முடிவெடுப்பதற்கான காலக்கெடுவை நீதிமன்றத்தில் பேரவைத் தலைவா் தெரிவிக்க வேண்டும். அதில் நீதிமன்றத்துக்கு திருப்தி இல்லையெனில், இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்படும்’ என்று நீதிபதிகள் தெரிவித்தனா்.

மகாராஷ்டிரத்தில் அடுத்த ஆண்டு செப்டம்பா்-அக்டோபரில் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com