சிறந்த சுற்றுலா கிராமம் தோா்தோ-வில் என்ன ஸ்பெஷல்?

குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில் அமைந்துள்ள தோா்தோ கிராமத்தை சிறந்த சுற்றுலா கிராமமாக உலக சுற்றுலா அமைப்பு (டபிள்யூ.டி.ஓ) அறிவித்துள்ளது.
சிறந்த சுற்றுலா கிராமம் தோா்தோ-வில் என்ன ஸ்பெஷல்?

குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில் அமைந்துள்ள தோா்தோ கிராமத்தை சிறந்த சுற்றுலா கிராமமாக உலக சுற்றுலா அமைப்பு (டபிள்யூ.டி.ஓ) அறிவித்துள்ளது.

சிறந்த சுற்றுலா கிராமமாக தோர்தோ தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது சிலிா்ப்பூட்டுகிறது என்று பிரதமா் நரேந்திர மோடி தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அது மட்டுமல்லாமல், தோர்தோ கிராமத்தின் சில புகைப்படங்களையும், அங்கு தான் சென்றிருந்தபோது எடுத்த புகைப்படங்களையும்கூட அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் எல்லையோரம் அமைந்திருக்கும் இந்த தோர்தோ கிராமத்துக்கு அப்படி என்னதான் ஸ்பெஷல் என்று பார்த்தால், கண்ணுக்கு எட்டியவரை வெள்ளை  வெளேறென்று காணப்படும் வெள்ளை மணல்தான். உப்பு சதுப்பு நிலப்பரப்பான  ஒட்டுமொத்த கிராமமும் நிலவொளியில் காண கண் கோடி வேண்டும் என்பார்கள் இங்கு வரும் சுற்றுலா பயணிகள்.

வெள்ளைவெளேறென்று இருக்கும் மணலின் பின்னணியில் எல்லாமே வண்ணமயமாக இருந்தால் எப்படி இருக்கும்? அங்கிருக்கும் அனைத்தும் அப்படித்தான் அலங்கரிக்கப்பட்டிருக்கும். இந்த ரம்மியத்தை மேலும் கூட்டும் வகையில் ஒட்டகங்களின் அணிவகுப்புகள் வேறு.

தார் பாலைவனத்தை ஒட்டிய உப்பு சதுப்பு நிலப்பரப்பாக இருந்தாலும், இதனை சுற்றுலா  பயணிகள் கொண்டாடித் தீர்க்கின்றனர். இதற்கெல்லாம் உச்சமாக ஆண்டுதோறும் நடைபெறும் ரன் உற்சவம் என்ற திருவிழா மூன்று மாதங்களுக்கு களைகட்டும்.

இந்த ரன் உற்சவத்தில் பங்கேற்கும் மக்களுக்கு நிச்சயம் வாழ்வில் ஒரு புதிய அனுபவம் கிடைக்குமாம். பிற நாள்களிலும்கூட இங்கு சுற்றுலாப் பயணிகளுக்கு சிறப்பான காட்சிகள் காத்திருக்கும்.  எங்குப் பார்த்தாலும் வெள்ளைநிற மணல்,, எப்போதும் சாயம் போகாத காட்சிகளுடன், 

ரன் உற்சவம் அக்டோபர் மாதம் கடைசி வாரத்தில் தொடங்கி பிப்ரவரி மாதம் வரை நடைபெறுகிறது. உலகின் வேறு எங்குமே காண முடியாத ஒரு காட்சியை இங்குக் காண முடியும் என்பதால், உலகம் முழுவதிலும் இருந்து இங்கு ஆண்டு முழுவதும் சுற்றுலா பயணிகள் வந்துகொண்டே இருக்கிறார்கள். இங்குள்ள சிறு குடில்களை வாடகைக்கு எடுத்து ஒரு சில நாள்கள் தங்கியிருப்பது பேரனுபவமாக இருக்குமாம்.

இங்கு பகல் பொழுதைவிடவும், இரவு நேரம் மிக அழகாக இருக்கும் என்றும், நட்சத்திரங்கள் மின்னும் வானமும், வெள்ளை வெளேறென்ற மணல் பரப்பும் ரம்மியமான காட்சியாக இருக்குமாம்.

தோா்தோ கிராமத்துக்கு கடந்த 2009 மற்றும் 2015-ஆம் ஆண்டுகளில் சென்றபோது எடுத்த புகைப்படங்களுடன் ‘எக்ஸ்’ வலைதளத்தில் பிரதமா் மோடி வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

தனது உயா்ந்த கலாசார பாரம்பரியம், இயற்கை அழகுக்காக தோா்தோ கொண்டாடப்படுவது முற்றிலும் சிலிா்ப்பூட்டுகிறது. உலக சுற்றுலா அமைப்பின் அங்கீகாரம் இந்திய சுற்றுலாவின் திறனை மட்டுமின்றி, கட்ச் மக்களின் அா்ப்பணிப்பையும் வெளிப்படுத்துகிறது. தோா்தோ தொடா்ந்து மிளிா்ந்து, உலகம் முழுவதுமுள்ள பாா்வையாளா்களைக் கவரட்டும் என்று பதிவிட்டுள்ளாா்.

முன்னதாக, தோா்தோவை சிறந்த சுற்றுலா கிராமமாக டபிள்யூ.டி.ஓ. கெளரவப்படுத்தியுள்ளதாக மத்திய சுற்றுலாத் துறை அமைச்சகம் அறிவித்திருந்தது.

ஐக்கிய நாடுகளின் உலக சுற்றுலா அமைப்பு (UNWTO), நிலையான வளர்ச்சிக்கான சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக செயல்படும் ஐக்கிய நாடுகளின் அமைப்பாகும். இது கடந்த வியாழன் அன்று, உலகளவில் உள்ள சிறந்த சுற்றுலா கிராமங்கள் - 2023 பட்டியலை அறிவித்தது.

சிறப்பான நிலப்பரப்புகள், கலாசார பன்முகத்தன்மை மற்றும் சமையல் மரபுகளைப் பாதுகாக்கும் அதே வேளையில் கிராமப்புறங்களின் வளர்ச்சியில் முன்னணியில் இருக்கும் கிராமங்களுக்கு இந்த அங்கீகாரம் வழங்கப்படுகிறது என்று உலக சுற்றுலா அமைப்பு வெளியிட்ட அறிக்கை தெரிவித்துள்ளது.


எப்படி செல்வது?
ரயிலில் செல்வதாக இருந்தால் 80 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள புஜ் ரயில் நிலையம் சென்று அங்கிருந்து சாலை மார்கமாக செல்ல வேண்டும். 

புஜ் பகுதியிலிருந்தும், குஜராத் மாநிலத்தின் இதர நகரங்களிலிருந்தும் தோர்தோ கிராமத்துக்கு சாலை வழியாகச் செல்ல முடியும்.

தோர்தோ கிராமத்திலிருந்து 80 கிலோ மீட்டர் தொலைவில் புஜ் உள்ளூர் விமான நிலையம் அமைந்துள்ளது. 384 கிலோ மீட்டர் தொலைவில் அகமதாபாத் சர்வதேச விமான நிலையம் உள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com