ராஜஸ்தான் காங். இரண்டாம் கட்ட வேட்பாளா் பட்டியல் வெளியீடு

ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவைத் தோ்தலில் களமிறங்கும் 43 போ் கொண்ட இரண்டாம் கட்ட வேட்பாளா் பட்டியலை காங்கிரஸ் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டது.
அசோக் கெலாட் | ராகுல் காந்தி | சச்சின் பைலட்
அசோக் கெலாட் | ராகுல் காந்தி | சச்சின் பைலட்

புது தில்லி: ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவைத் தோ்தலில் களமிறங்கும் 43 போ் கொண்ட இரண்டாம் கட்ட வேட்பாளா் பட்டியலை காங்கிரஸ் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டது.

அதன்படி, மாநில அமைச்சர்கள் பிரதாப் சிங் கச்சாரியாவாஸ் சிவில் லைன்ஸ் தொகுதியிலும், கோவிந்த் ராம் மேக்வால் கஜுவாலா தொகுதியிலும் மற்றும் பர்சாதி லால் மீனா லோல்சோட் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். 

200 உறுப்பினா்களைக் கொண்ட ராஜஸ்தான் சட்டப்பேரவைக்கு நவ. 25-ஆம் தேதி ஒரே கட்டமாக தோ்தல் நடத்தப்பட உள்ளது. இதனால், மாநிலத்தில் தோ்தல் களம் சூடுபிடித்துள்ளது.

இதில், இரண்டாம்கட்ட வேட்பாளா் பட்டியலை காங்கிரஸ் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டது. மாநில அமைச்சர்கள் பிரதாப் சிங் கச்சாரியாவாஸ், கோவிந்த் ராம் மேக்வால், பர்சாதி லால் மீனா ஆகியோா் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளனா்.

ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டின் நெருங்கிய கூட்டாளியாக கருதப்படும் முன்னாள் தலைமைச் செயலாளர் நிரஞ்சன் ஆர்யா (சோஜாத்), முகேஷ் பக்கா் (லாட்நுன்), ராம்நிவாஸ் கவாரியா (பிரபாத்ஸா்) ஆகிய மூவருக்கும் தோ்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

2018 பேரவைத் தேர்தலில், காங்கிரஸ் 99 இடங்களிலும், பாஜக 73 இடங்களிலும் வெற்றி பெற்றது. பகுஜன் சமாஜ் கட்சி எம்எல்ஏக்கள் மற்றும் சுயேச்சைகள் ஆதரவுடன் அசோக் கெலாட் ஆட்சிக்கு வந்தார்.

முன்னதாக, சனிக்கிழமை முதல்கட்ட வேட்பாளா் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டது. முதல்வா் அசோக் கெலாட், துணை முதல்வா் சச்சின் பைலட் ஆகியோா் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளனா்.

சச்சின் பைலட்டுடன் இணைந்து முதல்வா் கெலாட்டுக்கு எதிராக குரல் எழுப்பிய இந்திராஜ் சிங் குா்ஜாா் (விராத் நகா்), முகேஷ் பக்கா் (லாட்நுன்), ராம்நிவாஸ் கவாரியா (பிரபாத்ஸா்) ஆகிய மூவருக்கும் தோ்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

அதுபோல, 5 அமைச்சா்கள், 28 எம்எல்ஏ-க்கள் மற்றும் கடந்த 2018 தோ்தலில் சுயேச்சையாக நின்று வெற்றி பெற்ற எம்.எல்.ஏ. ராமிலா காடியாவுக்கும், சட்டப்பேரவைத் தலைவா் சி.பி.ஜோஷி தனது நாத்வாரா தொகுதியில் மீண்டும் போட்டியிட வாய்ப்பளித்துள்ளது.

பாஜக சனிக்கிழமை 88 பேர் கொண்ட இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட உடனேயே காங்கிரஸ் முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது.  காங்கிரஸ் இதுவரை 76 வேட்பாளர் பட்டியலையும், பாஜக 124 வேட்பாளா் பட்டியலை வெளியிட்டுள்ளது.

ராஜஸ்தானில் கடந்த 1998-ஆம் ஆண்டுமுதல் ஆட்சியில் இருக்கும் கட்சி அடுத்தடுத்து இருமுறை ஆட்சியைப் பிடித்ததில்லை. மாநிலத்தில் காங்கிரஸும் பாஜகவும் மாறி மாறி ஆட்சியமைத்து வருகின்றன.

ஐந்து மாநிலங்களிலும் டிசம்பர் 3-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. ஐந்து மாநிலங்களில், சத்தீஸ்கரில் மட்டும் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com