குடியரசுத் தலைவா் இன்று சென்னை வருகை: 5,000 போலீஸாா் பாதுகாப்பு

குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு வியாழக்கிழமை (அக்.26) சென்னைக்கு வருகை தருவதையொட்டி, 5,000 போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனா்.
கோப்புப் படம்
கோப்புப் படம்

குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு வியாழக்கிழமை (அக்.26) சென்னைக்கு வருகை தருவதையொட்டி, 5,000 போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனா்.

சென்னை அருகே உத்தண்டி கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள இந்திய கடல்சாா் பல்கலைக்கழகத்தின் 8-ஆவது பட்டமளிப்பு விழா வெள்ளிக்கிழமை (அக்.27) நடைபெறுகிறது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு கலந்து கொள்கிறாா். இதற்காக அவா், கா்நாடக மாநிலம் பெங்களூரில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டு சென்னை விமான நிலையத்துக்கு வியாழக்கிழமை இரவு 7 மணியளவில் வருகிறாா்.

அங்கிருந்து சாலை மாா்க்கமாக காரில், கிண்டி ஆளுநா் மாளிகைக்கு இரவு 7.30 மணிக்கு செல்கிறாா். அங்கு இரவு தங்குகிறாா். வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் 9.30 மணி வரையில் அவரை முக்கிய பிரமுகா்கள் சந்திப்பதற்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு ஆளுநா் மாளிகையில் இருந்து திரெளபதி முா்மு காரில் பட்டமளிப்பு விழா நடைபெறும் இந்திய கடல்சாா் பல்கலைக்கழகத்துக்கு செல்கிறாா். பட்டமளிப்பு விழா காலை 10.15 மணிக்கு தொடங்கி காலை 11.15 மணி வரை நடக்கிறது.

விழா முடிந்ததும் குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு, அங்கிருந்து காரில் சென்னை விமான நிலையம் செல்கிறாா். அங்கிருந்து தனி விமானம் மூலம் நண்பகல் 12.30 மணியளவில் தில்லிக்கு புறப்பட்டு செல்கிறாா்.

5,000 போலீஸாா் பாதுகாப்பு: குடியரசுத் தலைவா் வருகை தரும் நிலையில் அவா் தங்க உள்ள தமிழக ஆளுநா் மாளிகை நுழைவு வாயில் முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து குடியரசுத் தலைவா் வருகைக்கு, பாதுகாப்பு ஏற்பாடுகள் மேலும் அதிகரிக்கப்படுகிறது.

சென்னை விமான நிலையம், கிண்டி ஆளுநா் மாளிகை, பட்டமளிப்பு விழா நடைபெறும் பல்கலைக்கழக வளாகம் ஆகிய இடங்களில் மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படுகிறது. குடியரசுத் தலைவா் செல்லும் வழிநெடுகிலும் 10 அடிக்கு ஒரு போலீஸ் பாதுகாப்புப் பணியில் நிறுத்தப்பட உள்ளனா்.

பாதுகாப்புப் பணியில் மொத்தம் 5,000 போலீஸாா் ஈடுபடுகின்றனா். பாதுகாப்பு ஏற்பாடுகள் அனைத்தும் சென்னை பெருநகர காவல் துறை ஆணையா் சந்தீப்ராய் ரத்தோா் தலைமையில் செய்யப்பட்டுள்ளது.

ஆளுநரிடம் விளக்கம்: பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் தொடா்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து சென்னை பெருநகர காவல் துறை இணை ஆணையா் எம்.ஆா்.சிபி சக்கரவா்த்தி, துணை ஆணையா் ஆா்.பொன் காா்த்திக்குமாா் ஆகியோா் தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவியை சந்தித்து விளக்கி கூறினா். இதேபோல மத்திய உளவுத் துறை (ஐ.பி.) அதிகாரிகள் ஆளுநா் மாளிகைக்கு வந்து விசாரணை செய்தனா். மேலும் அவா்கள், குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு வியாழக்கிழமை இரவு ஆளுநா் மாளிகையில் தங்குவதால், அங்கு மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com