எதிர்க்கட்சியினர் கைப்பேசிகளை உளவுப் பார்க்கிறதா மத்திய அரசு? ஆப்பிள் எச்சரிக்கையால் பரபரப்பு!

‘இந்தியா’ கூட்டணிக் கட்சிகளை சேர்ந்த முக்கியத் தலைவர்களின் கைப்பேசிகளுக்கு இன்று காலை ஆப்பிள் நிறுவனம் அனுப்பிய குறுஞ்செய்தியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
எதிர்க்கட்சியினர் கைப்பேசிகளை உளவுப் பார்க்கிறதா மத்திய அரசு? ஆப்பிள் எச்சரிக்கையால் பரபரப்பு!

‘இந்தியா’ கூட்டணிக் கட்சிகளை சேர்ந்த முக்கியத் தலைவர்களின் கைப்பேசிகளுக்கு இன்று காலை ஆப்பிள் நிறுவனம் அனுப்பிய குறுஞ்செய்தியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அடுத்தாண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலுக்கு தயாராகும் விதமாக மத்திய பாஜக அரசுக்கு எதிராக காங்கிரஸ், சமாஜ்வாதி, திமுக, ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் இணைந்து ‘இந்தியா’ என்ற பெயரில் கூட்டணியை ஏற்படுத்தியுள்ளனர்.

‘இந்தியா’ கூட்டணியின் கட்சித் தலைவர்கள் மக்களவைத் தேர்தல் மற்றும் அடுத்த மாதம் நடைபெறவுள்ள 5 மாநில தேர்தலுக்காக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் முக்கிய தலைவர்கள் மற்றும் முக்கிய பத்திரிக்கையாளர்கள் சிலரின் ஆப்பிள் கைப்பேசிகளுக்கு, “உங்கள் ஆப்பிள் கைப்பேசி அரசு உதவிபெறும் அமைப்பால் தாக்குதல் நடத்தக்கூடும்” என்று இன்று அதிகாலை குறுஞ்செய்தி வந்துள்ளது.

சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, திரிணாமூல் எம்பி மஹுவா மொய்த்ரா, சிவசேனை(உத்தவ் பிரிவு) எம்பி பிரியங்கா சதுர்வேதி, ஆம் ஆத்மி எம்பி ராகுல் சத்தா, காங்கிரஸ் எம்பி சசி தரூர், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பவன் கேரா உள்ளிட்டோரின் கைப்பேசிகளுக்கு இந்த குறுஞ்செய்தியை ஆப்பிள் நிறுவனம் அனுப்பியுள்ளது. மேலும், இ-மெயில் மூலமாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், நாட்டின் பிரபல செய்தியாளர்கள் மற்றும் ராகுல் காந்தி அலுவலக பணியாளர்கள் மூவருக்கும் இந்த குறுஞ்செய்தி வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆப்பிள் நிறுவனம் அனுப்பிய குறுஞ்செய்தி, “அரசு நிதியுதவிபெறும் நிறுவனத்தால் உங்கள் கைப்பேசி தாக்குதல் நடத்தப்படலாம். அவ்வாறு உங்கள் கைப்பேசி தாக்குதலுக்கு உள்ளானால், கைப்பேசியில் உள்ள முக்கிய தரவுகள் திருடப்படலாம். மேலும், உங்கள் கைப்பேசியின் கேமிரா மற்றும் மைக்ரோபோன்களைகூட அவர்களால் அணுக முடியும்.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த குறுஞ்செய்தியை எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள சசி தரூர், ராகவ் சத்தா, மஹுவா மொய்த்ரா உள்ளிட்ட தலைவர்கள் மத்திய அரசை கண்டித்து பதிவிட்டுள்ளனர்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, இஸ்ரேல் நிறுவனம் தயாரித்த பெகாசஸ் என்ற மென்பொருள் மூலம் ராகுல் காந்தி, அபிஷேக் பானர்ஜி, பிரசாந்த் கிஷோர் உள்பட பல உலகத் தலைவர்கள் கைப்பேசிகள் உளவு பார்க்கப்பட்டதாக குற்றம்சாட்டது குறிப்பிடத்தக்கது.  

இந்த நிலையில், எதிர்க்கட்சித் தலைவர்களின் கைப்பேசிகளுக்கு தாக்குதல் அபாயம் இருப்பதாக ஆப்பிள் நிறுவனம் அனுப்பிய குறுஞ்செய்து அரசியல் அரங்கில் புயலைக் கிளப்பியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com