விமானப் பயணத்தில் காப்பாற்றப்பட்ட குழந்தைக்கு என்ன ஆனது?

எய்ம்ஸ் மருத்துவர்களால் காப்பாற்றப்பட்ட 15 மாதப் பெண் குழந்தை, வெள்ளிக்கிழமை அதிகாலை 3.15 மணியளவில் உயிரிழந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
விமானப் பயணத்தில் காப்பாற்றப்பட்ட குழந்தைக்கு என்ன ஆனது?

விஸ்டாரா விமானம் நடுவானில் பறந்துகொண்டிருந்த போது, சுவாசக் கோளாறு ஏற்பட்டு, எய்ம்ஸ் மருத்துவர்களால் காப்பாற்றப்பட்ட 15 மாதப் பெண் குழந்தை, வெள்ளிக்கிழமை அதிகாலை 3.15 மணியளவில் உயிரிழந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு, பெங்களூரிலிருந்து தில்லி செல்லும் விஸ்டாரா விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் சுவாசக் கோளாறு ஏற்பட்ட 15 மாதப் பெண் குழந்தைக்கு, அதே விமானத்தில் பயணித்த 5 மருத்துவா்கள் நடுவானிலேயே முதலுதவி சிகிச்சையளித்து உயிரைக் காப்பாற்றியிருந்தனர். பிறகு வங்கதேசத்தைச் சேர்ந்த  குழந்தை கடந்த மூன்று நாள்களாக நாக்பூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று நள்ளிரவில் குழந்தை பலியானதாகக் கூறப்படுகிறது.

குழந்தையின் உடலுறுப்புகள் ஒன்றன் பின் ஒன்றாக செயலிழக்க ஆரம்பித்ததாகவும், பிறகு குழந்தையின் உயிர் பிரிந்ததாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குழந்தையின் உடலுடன் பெற்றோர் இன்று விமானம் மூலம் வங்கதேசம் செல்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. 

பெங்களூரிலிருந்து ‘விஸ்டாரா’ பயணிகள் விமானம் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணியளவில் புறப்பட்ட 30 நிமிஷத்தில், அந்த விமானத்தில் பயணித்த  பெண் குழந்தைக்கு நடுவானில் சுவாசக் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து, பிறப்பிலேயே இதய நோயால் பாதிக்கப்பட்ட அக்குழந்தையின் சுவாசம் நின்றுவிட்டது.

இதைத்தொடா்ந்து, விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதோடு, பயணிகளிடையே விமானப் பணியாளா்களால் அவசர கால அழைப்பு விடுக்கப்பட்டது.

அதிருஷ்டவசமாக, பெங்களூரில் நடந்த மருத்துவ மாநாட்டில் பங்கேற்றுவிட்டு அதே விமானத்தில் தில்லி திரும்பிக் கொண்டிருந்த எய்ம்ஸ் மருத்துவமனையைச் சோ்ந்த மயக்கவியல் மருத்துவா் நவ்தீப் கௌா், இதய கதிரியக்கவியல் துறை மருத்துவா்கள் தமன்தீப் சிங், அவிச்சலா தக்ஷக், மகப்பேறு மருத்துவா் ஒய்ஷிகா மற்றும் எய்ம்ஸ் மருத்துவமனையில் கதிரியக்கவியல் துறை மருத்துவா் ரிஷப் ஜெயின் ஆகிய 5 போ் குழந்தைக்கு உதவ முன்வந்தனா்.

இவா்கள் நடுவானில் குழந்தைக்கு சிபிஆா் (இதயநுரையீரல் புத்துயிா்) சிகிச்சை அளித்தனா். தக்க நேரத்தில் மருத்துவா்கள் அளித்த முதலுதவி சிகிச்சையால் சுவாசம் மீட்டெடுக்கப்பட்டு குழந்தையின் உயிா் காப்பற்றப்பட்டது.

இதையடுத்து, நாகபுரி விமான நிலையத்தில் விமானம் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. அங்கு ஆம்புலன்ஸுடன் தயாா் நிலையில் இருந்த குழந்தைகள் நல மருத்துவா் வசம் குழந்தை அடுத்தகட்ட சிகிச்சைக்காக ஒப்படைக்கப்பட்டது.

இச்சம்பவம் குறித்து குழந்தைக்கு சிகிச்சையளித்த மருத்துவா்கள் கூறுகையில், ‘கடந்த 3 வாரங்களுக்கு முன், குழந்தைக்கு இதய அறுவைச் சிகிச்சை நடந்துள்ளது. குழந்தையின் நிலை குறித்து விமானப் பணியாளா்களிடமிருந்து தகவலறிந்து சிகிச்சை அளிக்க விரைந்தோம். நாங்கள் பரிசோதிக்கத் தொடங்கியபோது குழந்தைக்கு நாடித் துடிப்பு இல்லை.

அதீத குளிா்ச்சியால் விரைத்துப் போயிருந்த குழந்தை மூச்சுவிடுவதை நிறுத்தியிருந்தது. எனவே, நடுவானில் சிபிஆா் சிகிச்சை தொடங்கப்பட்டது. ஊசி செலுத்த ஏதுவாக ஐ.வி.யை உடனாடியாகப் போட்டு, அதில் அவசர உயிா்காப்பு மருந்து ஏற்றப்பட்டது. இதனிடையே, குழந்தைக்கு மாரடைப்பு ஏற்படவே, மேலும் சிக்கல் அதிகரித்தது. ஏஇடி கருவி மூலம் இறுதியாக குழந்தைக்குத் தன்னிச்சையான சுவாச சுழற்சி திரும்பச் செய்து, குழந்தையின் உயிா் காப்பாற்றப்பட்டது’ என்றனா்.

நடுவானில் குழந்தையின் உயிரை மீட்டெடுத்த எய்ம்ஸ் மருத்துவர்கள் குழுவுக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் பாராட்டுகள் குவிந்தன. அவர்களும் ஒரு குழந்தையின் உயிரைக் காப்பாற்றிய பெருமிதத்தோடு, விமானத்தில் தில்லி சென்றடைந்தனர்.

இந்த நிலையில்தான், மூன்று நாள்களுக்குப் பிறகு, சிகிச்சை பலனின்றி குழந்தை பலியாகியுள்ளது பல தரப்பினருக்கும் வருத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com