உலகின் மிக வயதானவர் கேரள மூதாட்டி... ஆனால் கின்னஸில் இல்லை!

கேரளத்தைச் சேர்ந்த 120 வயது மூதாட்டி, உலகின் மிக வயதான மனிதராக இருக்கிறார். ஆனால் கின்னஸில் அவர் பெயர் இல்லை. 
குஞ்ஞீட்டுமா
குஞ்ஞீட்டுமா
Published on
Updated on
1 min read

கேரளத்தைச் சேர்ந்த 120 வயது மூதாட்டி, உலகின் மிக வயதான நபராக  இருக்கிறார். ஆனால் கின்னஸில் அவர் பெயர் இல்லை. 

கேரள மாநிலம் மலப்புரம் அருகே வலஞ்சேரி பகுதியைச் சேர்ந்தவர் குஞ்ஞீட்டுமா(Kunheettumma). அவருடைய ஆதார் தகவலின்படி 1903, ஜூன் 2 ஆம் தேதி பிறந்துள்ளார். இவருடைய கணவர் கலம்பன் சைதாலி. இன்றைய(செப். 6) கணக்கின்படி இவரது வயது 120 ஆண்டுகள், 98 நாள்கள். 

ஆனால், ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த மரியா ப்ரன்யாஸ் மொரிரா என்பவர்தான் உலகத்தின் வயதான நபர் என்று கின்னஸ் உலக சாதனை இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மொரிரா 1907, மார்ச் 4 ஆம் தேதி பிறந்துள்ளார். இவரது வயது 116 ஆண்டுகள், 220 நாள்கள். 

மொரிராவைவிட 4 ஆண்டுகள் 122 நாள்கள் மூத்தவரான கேரளத்தைச் சேர்ந்த குஞ்ஞீட்டுமா வாழ்ந்துவரும் நிலையில் இதுகுறித்து கின்னஸ் நிறுவனத்திற்கு தெரியவில்லை என்றே கருதப்படுகிறது. 

115 வயதில் கீழே விழுந்ததால் சக்கர நாற்காலி உதவியுடன் நடமாடி வரும் குஞ்ஞீட்டுமா, மற்றவர்களுடன் சரளமாகப் பேசுகிறார். மேலும் அவருக்கு எந்த உடல்நலப் பிரச்னைகளும் இல்லை, அவர் எந்தவித மருந்துகளும் எடுத்துக்கொள்ளவில்லை. 

தனது உணவு முறை குறித்து குஞ்ஞீட்டுமா கூறுகையில், 'கஞ்சி சாப்பிடுவதுதான் என்னுடைய வழக்கம். யாராவது பிரியாணி கொடுத்தால் கொடுத்தவர்களுக்காக மிகக் குறைந்த அளவு சாப்பிடுவேன். எனக்கு பள்ளியில் சேர வாய்ப்பு கிடைக்கவில்லை. இப்போது, இந்த வயதில் எனக்கு கற்கும் திறன் இல்லை' என்று கூறுகிறார். 

அடிப்படைக் கல்வியை மதரஸாவில் பயின்றுள்ளார். 17 வயதில் சைதாலி என்பவருடன் திருமணம் நடந்தது. அவர்களுக்கு 13 குழந்தைகள். அவர்களில் தற்போது நான்கு பேர் மட்டுமே உயிருடன் இருக்கின்றனர்.

11-வது குழந்தையான மொய்து, கூறுகையில், எங்களை(தன்னுடைய பிள்ளைகளை) தினமும் பார்க்க வேண்டும் என்று அம்மா விரும்புவார். தற்போது என் தம்பி வீட்டில் வசிக்கிறார். அவர் தினமும் என்னை பார்க்க விரும்புவதால் தினமும் சென்று சந்திக்கிறேன்' என்று கூறினார். 

இளைய மகன் முஹம்மது, தனது இளமைப் பருவத்தில் நடந்த சம்பவங்களை தான் தாய் இன்னும் நினைவு கூர்வதாகத் தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com