வேறு எந்த ஜனநாயக நாடும் இப்படிச் செய்ததில்லை: ப. சிதம்பரம்

ஜி20 மாநாட்டையொட்டி குடியரசுத் தலைவர் அளிக்கும் விருந்துக்கு எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு அழைப்பு விடுக்காததற்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார். 
வேறு எந்த ஜனநாயக நாடும் இப்படிச் செய்ததில்லை: ப. சிதம்பரம்

ஜி20 மாநாட்டையொட்டி குடியரசுத் தலைவர் அளிக்கும் விருந்துக்கு எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு அழைப்பு விடுக்காததற்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார். 

இந்தியாவின் தலைமையில் ஜி20 கூட்டமைப்பின் உச்சி மாநாடு, தில்லியில் இன்று(சனிக்கிழமை) காலை தொடங்கி 2 நாள்கள் நடைபெறுகிறது. உலக நாடுகளின் பல்வேறு தலைவர்கள் இதில் கலந்துகொண்டுள்ளனர்.

இன்று இரவு குடியரசுத் தலைவர் சார்பில் அளிக்கும் அரசியல் தலைவர்கள், முக்கிய பிரமுகர்களுக்கு விருந்து அளிக்கப்படுகிறது. இந்த விருந்து நிகழ்ச்சிக்கு காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. 

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி முன்னதாகவே இதுகுறித்துப் பேசியிருந்தார். 

இந்நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவரும் எம்.பி.யுமான ப.சிதம்பரம்,  'உலகத் தலைவர்களுக்கான அரசு விருந்துக்கு, அங்கீகரிக்கப்பட்ட எதிர்க்கட்சித் தலைவரை, வேறு எந்த ஜனநாயக நாட்டின் அரசும் அழைக்காமல் இருந்ததில்லை. மத்திய அரசின் நடவடிக்கையை என்னால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை.

ஜனநாயகமற்ற அல்லது எதிர்க்கட்சிகளே இல்லாத ஒரு நாட்டில்தான் இது போன்று நடக்கும். இந்தியா, அதாவது பாரதம் இன்னும் ஜனநாயகமும் எதிர்க்கட்சியும் இல்லாமல் போகும் நிலையை எட்டவில்லை' என்று குறிப்பிட்டுள்ளார். 

இதனிடையே காரைக்குடியில் உள்ள அவரது எம்.பி அலுவலகத்தில் சனிக்கிழமை மாலையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

 தில்லியில் ஜி 20 உலக பொருளாதார நாடுகள் கூட்டம் நடைபெறுகிறது. அந்தக் கூட்டம் வெற்றி பெற எங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

 ஜி 20 அமைப்புக்கு 2003 ஆம் ஆண்டு இந்தியா தலைமையேற்றது. 2008 -ஆம் ஆண்டு வாசிங்டன்னிலே முதல் முறையாக உலக நாடுகளின் தலைவர்கள் கூடினார்கள். இப்போ 2023 இல் இந்தியா தலைமை ஏற்றுள்ளது. மீண்டும் 2043 இல் இந்தியா தலைமை ஏற்கும். இந்த ஜி 20 மாநாட்டை வரவேற்கிறேன். வாழ்த்துகிறேன். 

அதே நேரத்திலே இந்த மாநாட்டையொட்டி குடியரசுத் தலைவர் மிகப் பெரும் விருந்தளிக்கிறார். அந்த விருந்துக்கு நாடாளுமன்றத்திலே எதிர்க்கட்சித் தலைவராக இருக்கக்கூடிய மல்லிகார்ஜூன கார்க்கேக்கு அழைப்பு இல்லை. எந்த ஜனநாயக நாட்டிலும் இதைப்போன்ற அதிசயம் நடந்ததாக எனக்குத் தெரியவில்லை. இதைப்போன்று நடந்தால் ஒன்று ஜனநாயகம் இல்லாத நாட்டிலோ அல்லது எதிர்க்கட்சிகளே இல்லாத நாடு. எனக்கு அச்சம் என்னவென்றால் இந்தியா ஒரு காலத்திலே ஜனநாயகம் இல்லாத நாடாக மாறிவிடுமோ அல்லது எதிர்க்கட்சிகளே இல்லாத நாடாக மாறிவிடுமோ என்கிற அச்சம் எனக்கு உள்ளது. 

இது மிக வருந்தத்தக்கது. எதிர்க்கட்சித் தலைவரை மதிப்பதுதான் ஜனநாயகம். காங்கிரஸ் ஆட்சி காலத்தில் எதிர்கட்சி தலைவராக இருந்த வாஜ்பாய் தலைமையில் ஐநா சபைக்கு ஒரு குழுக்களோடு அனுப்பினோம். அதைப் போல மன்மோகன் சிங் பிரதமராக இருந்த காலத்தில் ஒவ்வொரு முறையும் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த வாஜ்பாயை மதித்து அவருக்கு உரிய மரியாதை, உரிய அந்தஸ்தை தந்தது. தற்போது எதிர்க்கட்சி தலைவருக்கு அழைப்பு இல்லாதது மிக வருந்தத் தக்கது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com