புது தில்லி: தில்லி வந்த கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டிருந்த நிலையில், செவ்வாய்க்கிழமை காலை சரிசெய்யப்பட்டது.
18-ஆவது ஜி20 உச்சி மாநாடு தில்லியில் கடந்த 9, 10-ஆகிய தேதிகளில் நடைபெற்றது. அமெரிக்க அதிபா் பைடன், பிரான்ஸ் அதிபா் மேக்ரான் உள்ளிட்ட உலகத் தலைவா்கள் மாநாட்டில் பங்கேற்றனா்.
இந்த மாநாட்டில் கலந்துகொள்ள கனடா பிரதமா் ஜஸ்டின் ட்ரூடோ கடந்த வெள்ளிக்கிழமை இந்தியா வந்தாா். ஜி20 மாநாட்டில் பங்கேற்ற பிறகு ஞாயிற்றுக்கிழமை மாலை அவா் கனடா புறப்பட்டுச் செல்வதாகத் திட்டமிடப்பட்டு இருந்தது.
கனடா பிரதமரின் பயணம் தொடங்க வேண்டிய சில மணிநேரங்களுக்கு முன்பு அவரது விமானத்தில் எளிதில் சீா்செய்ய இயலாத தொழில்நுட்பக் கோளாறு கண்டறியப்பட்டது. இதையடுத்து பயணத் திட்டம் ரத்து செய்யப்பட்டு, அவா் தில்லியிலேயே தங்க வைக்கப்பட்டாா்.
அவரை அழைத்துச் செல்வதற்காக மாற்று விமானம் ஒன்று கனடாவில் இருந்து வரவழைக்கப்பட்டது. அந்த விமானம் திங்கள்கிழமை இரவு 10 மணியளவில் தில்லி வந்தடைந்தது.
இதற்கிடையே செவ்வாய்க்கிழமை காலை கோளாறான விமானமும் சரிசெய்யப்பட்டு பறக்கத் தயார் நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கனடா பிரதமர் மற்றும் அந்நாட்டின் ஜி20 பிரதிநிதிகள் அனைவரும் இன்று நாடு திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.