
புதுதில்லி: நாடாளுமன்றம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் ஜனநாயகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
நாடாளுமன்றத்தில் ஐந்து நாள் சிறப்பு கூட்டத்தொடர் திங்கள்கிழமை தொடங்கி நடைபெற்று வருகின்றது. பழைய கட்டடத்தின் கடைசி நாளாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை புதிய கட்டடத்தில் நான்கு நாள் கூட்டம் நடைபெற உள்ளது.
இந்த நிலையில், நாடாளுமன்றத்தின் 75 ஆண்டுகால வரலாறு குறித்த விவாதத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்து உரையாற்றி வருகிறார்.
அப்போது, “இந்த வரலாற்று கட்டடத்திலிருந்து நாம் விடைபெறுகிறோம். நாம் புதிய கட்டடத்துக்குச் செல்வதற்கு முன், இந்த நாடாளுமன்ற கட்டடத்துடன் தொடர்புடைய உத்வேகமான தருணங்களை நினைவில் கொள்ள வேண்டிய நேரம் இது.
இந்த கட்டமானது ஆங்கிலேயர்களால் கட்டப்பட்டது என்றாலும், நம் நாட்டு மக்களின் வியர்வை, உழைப்பு மற்றும் பணத்தால் கட்டடப்பட்டது என்பதை பெருமையுடன் சொல்வோம்.
இந்தியர்களின் சாதனைகள் இன்று அனைத்து பகுதிகளிலும் விவாதிக்கப்படுகின்றன. இது 75 ஆண்டுகால நமது நாடாளுமன்ற வரலாற்றின் ஒன்றுபட்ட முயற்சியின் பலம்.
நாட்டின் பன்முகத்தன்மையை இந்த நாடாளுமன்றம் பறைசாற்றுகிறது. நாடாளுமன்ற உறுப்பினராக முதல்முறையாக நாடாளுமன்ற கட்டடத்திற்குள் நுழைந்தபோது நான் கீழே விழுந்து வணங்கிவிட்டே நுழைந்தேன்.
ஏழை குடும்பத்தில் பிறந்து, ரயில்வே நடைமேடையில் வளர்ந்த நான், மக்களின் பேராதரவை பெற்று நாடாளுமன்றத்திற்குள் நுழைய முடியும் என நினைத்துக்கூட பார்த்ததில்லை.
இதையும் படிக்க | நான் ரயில்வே நடைமேடையில் வளர்ந்தவன்: பிரதமர் மோடி
கடந்த 75 ஆண்டுகளாக நாடாளுமன்றம் மீது மக்கள் அசைக்க முடியாது நம்பிக்கை வைத்துள்ளனர். இந்த நம்பிக்கை தொடரவேண்டும் என்பதே எனது விருப்பம்.
நாடாளுமன்றம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் ஜனநாயகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல்.
நாடாளுமன்றம் மீதான பயங்கரவாத தாக்குதலை ஒவ்வொரு இந்தியரும் மறக்க மாட்டார்கள்.
நாடாளுமன்றத்தை காக்க உயிர்த்தியாகம் செய்த ஒவ்வொரு வீரருக்கும் நான் தலை வணங்குகிறேன்.
600 பெண்கள் எம்.பி.யாக உள்ளனர். அதிகளவிலான பெண்களின் பங்களிப்பு இந்த நாடாளுமன்றத்திற்கு பெருமை சேர்த்துள்ளது.
நாடாளுமன்றத்தின் பெருமையை பெண் எம்.பி.க்கள் உயர்த்தியுள்ளனர். அனைத்து சமூக அமைப்புகளில் உள்ளவர்களும் நாடாளுமன்றத்தில் இடம்பெற்றுள்ளனர் என்று தொடர்ந்து பேசி வருகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.