நேரு, வாஜ்பாயால் நாடாளுமன்றத்துக்கு பெருமை: மக்களவையில் மோடி

நேரு, வாஜ்பாய், மன்மோகன் சிங் போன்ற பிரதமர்கள் நாடாளுமன்றத்துக்கு பெருமை சேர்த்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.
நேரு, வாஜ்பாயால் நாடாளுமன்றத்துக்கு பெருமை: மக்களவையில் மோடி
Published on
Updated on
2 min read

நேரு, வாஜ்பாய், மன்மோகன் சிங் போன்ற பிரதமர்கள் நாடாளுமன்றத்துக்கு பெருமை சேர்த்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

நாடாளுமன்றத்தில் சிறப்பு கூட்டத்தொடர் இன்று தொடங்கி நடைபெற்று வருகின்றது. பழைய கட்டடத்தின் கடைசி நாளாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை புதிய கட்டடத்தில் கூட்டம் தொடங்கவுள்ளது.

இந்த நிலையில், நாடாளுமன்றத்தின் 75 ஆண்டுகால வரலாறு குறித்த விவாதத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்து உரையாற்றினார்.

அப்போது பிரதமர் மோடி பேசியது:

“இந்த வரலாற்று கட்டடத்திலிருந்து நாம் விடைபெறுகிறோம். நாம் புதிய கட்டடத்துக்குச் செல்வதற்கு முன், இந்த நாடாளுமன்ற கட்டடத்துடன் தொடர்புடைய உத்வேகமான தருணங்களை நினைவில் கொள்ள வேண்டிய நேரம் இது.

இந்த கட்டமானது ஆங்கிலேயர்களால் கட்ட முடிவெடுக்கப்பட்டது என்றாலும்,  நம் நாட்டு மக்களின் வியர்வை, உழைப்பு மற்றும் பணத்தால் கட்டடப்பட்டது என்பதை பெருமையுடன் சொல்வோம்.

இந்தியர்களின் சாதனைகள் இன்று அனைத்து பகுதிகளிலும் விவாதிக்கப்படுகின்றன. இது 75 ஆண்டுகால நமது நாடாளுமன்ற வரலாற்றின் ஒன்றுபட்ட முயற்சியின் பலம்.

சந்திரயான் 3-ன் வெற்றி இந்தியாவை மட்டுமின்றி உலகையே பெருமைப்படுத்தியுள்ளது. தொழில்நுட்பம், அறிவியல், விஞ்ஞானிகளின் திறன் மற்றும் 140 கோடி மக்களின் பலம் ஆகியவற்றுடன் இணைந்த நாட்டின் வலிமை புதிய வடிவத்தை எடுத்துக்காட்டுகிறது.

ஜி20 மாநாட்டின் வெற்றி என்பது தனி நபரோ, தனி கட்சியின் வெற்றி அல்ல. இது ஒட்டுமொத்த நாட்டு மக்களின் வெற்றி. இந்தியாவின் தலைமைத்துவம் குறித்து எழுப்பப்பட்ட அனைத்து கேள்விகளுக்கும் ஜி20 மாநாடு பதிலளித்துள்ளது.

நாட்டின் பன்முகத்தன்மையை இந்த நாடாளுமன்றம் பறைசாற்றுகிறது. நாடாளுமன்றத்தில் எம்பியாக முதல்முறையாக நுழைந்தபோது நான் கீழே விழுந்து ஜனநாயகத்தின் கோவிலை வணங்கிவிட்டு நுழைந்தேன். ரயில்வே நடைமேடையில் வசிக்கும் ஏழைக் குடும்பத்தை சேர்ந்த ஒரு குழந்தை நாடாளுமன்றத்துக்குள் நுழைய முடியும் என்று நான் நினைத்துகூட பார்க்கவில்லை. மக்களிடம் இவ்வளவு அன்பை பெறுவேன் என்பதையும் நினைத்து பார்த்ததில்லை.

கடந்த 75 ஆண்டுகளாக நாடாளுமன்றம் மீது மக்கள் அசைக்க முடியாது நம்பிக்கை வைத்துள்ளனர். இந்த நம்பிக்கை தொடரவேண்டும் என்பதே எனது விருப்பம். அனைத்து சமூகத்தினரும் நாடாளுமன்றத்தில் இடம்பெற்றுள்ளனர். அதிகளவிலான பெண்களின் பங்களிப்பு இந்த நாடாளுமன்றத்துக்கு பெருமை சேர்த்துள்ளது.

நேரு, வாஜ்பாய், மன்மோகன் சிங் போன்ற பிரதமர்கள் நாடாளுமன்றத்துக்கு பெருமை சேர்த்துள்ளனர். இந்த நாடாளுமன்றத்தில் பணியாற்றும் ஒவ்வொரு ஊழியர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.

இதே அவையில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டு ஜனநாயகம் மீதான தாக்குதல் நடத்தப்பட்டது. வங்கதேசத்துக்கு சுதந்திரம் பெற்றுதரும் வரலாற்று முடிவும் இதே நாடாளுமன்றத்தில் எடுக்கப்பட்டது.

இந்திய ஜனநாயகத்துக்கு மிகப்பெரிய பங்களிப்பை கொடுத்தவர் அம்பேத்கர். நாட்டின் பொருளாதார சுமையை குறைக்க நரசிம்மராவ் தலைமையிலான அரசு பாடுபட்டது.

அதேபோல், பசுமை புரட்சிக்கான புதிய திட்டத்தை வகுத்தவர் முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி.”

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com