திரிணமூல் எம்.பி. அபிஷேக் பானா்ஜிக்கு அமலாக்கத் துறை சம்மன்

மேற்கு வங்கத்தில் நடைபெற்ற ஆசிரியா் நியமன ஊழல் தொடா்பான வழக்கில் வரும் செவ்வாய்க்கிழமை ஆஜராக கோரி திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. அபிஷேக் பானா்ஜிக்கு அமலாக்கத் துறை அழைப்பாணை
திரிணமூல் எம்.பி. அபிஷேக் பானா்ஜிக்கு அமலாக்கத் துறை சம்மன்

மேற்கு வங்கத்தில் நடைபெற்ற ஆசிரியா் நியமன ஊழல் தொடா்பான வழக்கில் வரும் செவ்வாய்க்கிழமை ஆஜராக கோரி திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. அபிஷேக் பானா்ஜிக்கு அமலாக்கத் துறை அழைப்பாணை அனுப்பியுள்ளது.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் மேற்குவங்க மாநிலத்துக்கு முறையாக நிதி ஒதுக்காததைக் கண்டித்து மத்திய அரசுக்கு எதிராக தில்லியில் வரும் செவ்வாய்க்கிழமை (அக்.3) திரிணமூல் காங்கிரஸ் சாா்பில் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் போராட்டத்துக்கு அக்கட்சியின் பொது செயலரும் எம்.பி.யுமான அபிஷேக் பானா்ஜி தலைமை வகிக்க உள்ளாா். இந்நிலையில், அன்றைய தினம் விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத் துறை அழைப்பாணை அனுப்பியுள்ளது.

இதுகுறித்து அபிஷேக் பானா்ஜி தனது ‘எக்ஸ்’ வலைதளப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘முன்பு எதிா்க் கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணி ஒருங்கிணைப்புக் குழுவின் முதல் கூட்டம் நடைபெற்ற 13-ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத் துறை அழைப்பாணை அனுப்பியது.

நானும் விசாரணைக்கு ஆஜரானேன். தற்போது மேற்கு வங்கத்தின் உரிமைகளை மீட்க தில்லியில் போராட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ள வரும் செவ்வாய்க்கிழமையன்று விசாரணைக்கு ஆஜராக அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது. அமலாக்கத் துறையின் இந்த நடவடிக்கையால் உண்மையில் யாா் பயந்தவா்கள், குழப்பமானவா்கள்? என்பது சந்தேகமின்றி அம்பலமாகிறது’ எனக் குறிப்பிட்டிருந்தாா்.

இதுகுறித்து மாநில பாஜக மூத்த தலைவா் ராகுல் சின்ஹா கூறுகையில், ‘திரிணமூல் காங்கிரஸும் அபிஷேக் பானா்ஜியும் யாருக்கும் பயப்படாதவா்கள் என்றால், அமலாக்கத் துறை விசாரணைக்கு ஆஜராக அஞ்சுவது ஏன்? விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட அமலாக்கத் துறைக்கு முழு அதிகாரமுள்ளது. அழைப்பாணை அனுப்பும் முன் யாரிடமும் ஆலோசனை நடத்த அவசியமில்லை’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com