
திருவனந்தபுரம்: பிரதமர் நரேந்திர மோடி கேரளத்துக்குப் பயணம் மேற்கொள்ள உள்ள நிலையில் அவருக்கு எதிராக தற்கொலைத் தாக்குதல் மிரட்டல் கடிதம் அனுப்பிய நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைப்பதற்காக ஏப்ரல் 24, 25 ஆகிய தேதிகளில் பிரதமர் மோடி கேரளத்துக்கு பயணம் மேற்கொள்கிறார்.
இந்நிலையில், மாநில பாஜக தலைவர் கே.சுரேந்திரனின் அலுவலகத்துக்கு மாலையாள மொழியில் எழுதப்பட்ட மிரட்டல் கடிதம் வந்தது. அந்த மிரட்டல் கடிதத்தை உடனடியாக போலீசாரிடம் ஒப்படைத்தார்.
உளவுப் பிரிவு ஏடிஜிபியின் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பான அறிக்கை ஊடகங்களில் வெளியான நிலையில், மிரட்டல் கடிதம் குறித்த தகவல் வெளிச்சத்துக்கு வந்தது.
மிரட்டல் கடிதத்தின் உண்மைத்தன்மை குறித்து அடை அனுபரிடம் விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டது.
இதனிடையே, உளவுப் பிரிவின் அறிக்கை கசிந்தது தொடர்பாக மாநில அரசை குற்றம்சாட்டிய மாநில பாஜக தலைவர் சுரேந்திரன், இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்த கொச்சியைச் சேர்ந்த என்.ஜெ.ஜானனி என்பவரிடம் போலீசார் சனிக்கிழணை விசாரணை மேற்கொண்டனர். அவருடைய கையொப்பம் உள்ளிட்ட ஆய்வு செய்யப்பட்டன.
இது குறித்து ஜானி கூறுகையில், பிரதமருக்கு நான் மிரட்டல் கடிதம் அனுப்பவில்லை. என்னுடன் முன்விரோதம் கொண்ட நபர், என்னை பழிவாங்கும் நோக்கில் இதுபோன்ற செயலில் ஈடுபட்டிருக்கலாம் என தெரிவித்தார்.
இந்நிலையில், தற்கொலைத் தாக்குதல் மிரட்டல் கடிதம் அனுப்பிய சேவியர் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இதுகுறித்து கொச்சி நகர காவல் ஆணையாளர் சேதுராமன் செய்தியாளர்களிடம் கூறுகையில், குற்றவாளியான சேவியர் கைது செய்யப்பட்டுள்ளார். தனிப்பட்ட பகை காரணமாக இந்த சம்பவம் நடந்துள்ளது.
தடய அறிவியல் நிபுணர்கள் உதவியுடன் அவரை கண்டறியப்பட்டதாகவும், கொச்சிக்கு வரும் பிரதமர் மோடிக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.