
பிரதமர் மோடி குறித்து தெரிவித்த கருத்துகளுக்காக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மன்னிப்பு கோரினார்.
இது குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியிருப்பதாவது: எனது கருத்துகள் யாரையாவது புண்படுத்தியிருந்தாலோ மன உளைச்சலுக்கு ஆளாக்கியிருந்தாலோ அதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் எனக் கூறியுள்ளார்.
முன்னதாக கர்நாடகத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட அவர் பேசியதாவது: தவறு செய்யாதீர்கள். மோடி விஷம் நிறைந்த பாம்பு போன்றவர். நீங்கள் அப்படி இல்லை என்று கூறுவீர்களேயானால், தீண்டியபின் உங்களுக்கு அது உண்மை என்று தெரியும். அதனால், தீண்ட விடாதீர்கள். தீண்ட விட்டால் நீங்கள் இறந்து விடுவீர்கள். இல்லை அது விஷமல்ல என்று நம்பினால் நிரந்தரமாக தூங்க வேண்டிய நிலை ஏற்படும் என்றார்.
பொதுக்கூட்டத்தில் பேசியதற்கு பின்பு பத்திரிகையாளர்களை சந்தித்த மல்லிகார்ஜுன கார்கே கூறியதாவது: பாஜக பாம்பு போன்றது என்றும், அதன் சித்தாந்தம் விஷம் போன்றது என்றும் தான் கூறினேன். அதன் சித்தாந்தத்தை ஆதரித்தால் இறப்பு உறுதி. நான் அவருக்கு ( பிரதமர் மோடி) எதிராக எதுவும் பேசவில்லை. நான் தனிப்பட்ட நபர் மீது எனது விமர்சனத்தை முன்வைக்க மாட்டேன் என ஏற்கனவே கூறியிருக்கிறேன் என்றார்.