
ஒடிசா மாநிலத்தில் பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருவதால் அங்குள்ள மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
வடமாநிலங்களில் கடந்த சில வாரங்களாக கனமழை பெய்து வருவதால், பஞ்சாப், ஹரியாணா, உ.பி., ம.பி., மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் ஒடிசா மாநிலத்தில் பெய்த கனமழையால் அங்குள்ள சாலைகள் வெள்ளக்காடாக மிதந்து வருகின்றது. போக்குவரத்து, மின்சாரம் உள்ளிட்ட பாதிப்புகளால் மக்கள் அவதியடைந்துள்ளனர். முக்கியமாக, பல மாவட்டங்களில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
கனமழை காரணமாக, சாலைகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதன் காரணமாக தண்ணீர் லாரிகள் மாவட்டங்களின் பல பகுதிகளுக்குச் செல்ல முடியாமல் ஆங்காங்கே தேங்கி நிற்கின்றது. இதனால், குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பலர் வெள்ளநீரைக் கொதிக்க வைத்து குடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதனால், தண்ணீரால் பரவும் நோய்கள் ஏற்படுத்தும் அபாயம் உள்ளதாக மக்கள் அஞ்சி வருகின்றனர்.
படிக்க மணிப்பூர் விவகாரம்: 4-வது வாரமாக நாடாளுமன்றம் முடங்கியது!
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அரசு தண்ணீர் டேங்கர்களை அனுப்புவதாகக் கூறினாலும், சாலைகளில் வாகனங்கள் சிக்கியதால், குறித்த இடங்களுக்குச் சென்றடைய முடியவில்லை. முக்கிய ஆறுகளில் நீர்மட்டம் குறைந்தாலும், 75 கிராமங்கள் வெள்ளத்தின் பிடியில் சிக்கியுள்ளன.
ஞாயிறன்று வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையின்படி,
11 மாவட்டங்களில் மொத்தம் 6.24 லட்சம் பேரி பாதிக்கப்பட்டுள்ளனர். வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்கள் அங்குள்ள பள்ளிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மனஹந்தி டெல்டா பகுதிகள் உள்ளிட்ட கேந்திரபாரா, ஜகத்சிங்பூர், பூரி மற்றும் குர்தா ஆகிய மாவட்டங்களிலும் குடிநீர் பற்றாக்குறை நிலவி வருவதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருந்துகளை வழங்க ஊரக நீர் வழங்கல் மற்றும் துப்புரவு துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மூத்த சுகாதார அதிகாரி ஒருவர் தெரிவித்தார். பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு தண்ணீர் டேங்கர்கள் அனுப்பும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாக கேந்திரபாரா மாவட்ட துணை ஆட்சியர் நிரஞ்சன் பெஹெரா தெரிவித்தார்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...