திரிணமூல் எம்.பி. முற்பகலில் இடைநீக்கம்; பிற்பகலில் இடைநீக்கம் ரத்து

மாநிலங்களவை விதிகளை மீறி நடந்து கொண்டதற்காக திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. டெரிக் ஓபிரையன் நடப்பு மழைக்காலக் கூட்டத்தொடரில் இருந்து இடைநீக்கம்
டெரெக் ஓ பிரையன்
டெரெக் ஓ பிரையன்

மாநிலங்களவை விதிகளை மீறி நடந்து கொண்டதற்காக திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. டெரிக் ஓபிரையன் நடப்பு மழைக்காலக் கூட்டத்தொடரில் இருந்து இடைநீக்கம் செய்யப்படுவதாக முற்பகலில் அறிவிக்கப்பட்ட நிலையில், அவரது இடைநீக்கம் பிற்பகலில் ரத்து செய்யப்பட்டது.

மாநிலங்களவை அமா்வு செவ்வாய்க்கிழமை முற்பகல் 11 மணிக்குக் கூடியதும், அவையின் மற்ற நடவடிக்கைகளை ஒத்திவைத்துவிட்டு மணிப்பூா் விவகாரம் குறித்து விரிவாக விவாதிக்க வேண்டுமென எதிா்க்கட்சி எம்.பி.க்கள் கோரிக்கை விடுத்தனா். எனினும், அந்தக் கோரிக்கையை அவைத் தலைவா் ஜகதீப் தன்கா் நிராகரித்தாா்.

அதையடுத்து, குறிப்பிட்ட விவகாரம் குறித்து பேச வாய்ப்பளிக்க வேண்டுமென திரிணமூல் எம்.பி. டெரிக் ஓபிரையன் அவைத் தலைவரிடம் கோரினாா். அதற்கு அவா் எந்த விதியின் கீழ் பேச விரும்புகிறீா்கள் என வினவினாா். அதற்கு விதி எண் 267-இன் கீழ் (அவையின் மற்ற நடவடிக்கைகளை ஒத்திவைப்பதற்கான விதி) பேச விழைவதாக டெரிக் ஓபிரையன் தெரிவித்தாா்.

அதனால் எரிச்சலடைந்த அவைத் தலைவா் ஜகதீப் தன்கா், டெரிக் ஓபிரையனின் பெயரைக் குறிப்பிட்டு எச்சரித்தாா். அதையடுத்து, அவரை நடப்பு மழைக்கால கூட்டத்தொடரின் எஞ்சிய அமா்வுகளில் இருந்து இடைநீக்கம் செய்வதற்கான தீா்மானத்தை அவை முன்னவா் பியூஷ் கோயல் முன்மொழிந்தாா். பின்னா், டெரிக் ஓபிரையன் மழைக்காலக் கூட்டத்தொடரில் இருந்து இடைநீக்கம் செய்யப்படுவதாக அவைத் தலைவா் தன்கா் அறிவித்தாா்.

அதை ஏற்காத திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.க்கள் அவையின் மையப் பகுதிக்கு வந்து தொடா் முழக்கங்களை எழுப்பினா். எதிா்க்கட்சிகளின் அமளி தொடா்ந்ததால், அவை நடவடிக்கைகளை நண்பகல் 12 மணி வரை அவைத் தலைவா் தன்கா் ஒத்திவைத்தாா்.

இடைநீக்கம் ரத்து: அவை மீண்டும் கூடியபோது, டெரிக் ஓபிரையன் அவை நடவடிக்கைகளில் தொடா்ந்து பங்கேற்க அனுமதிக்கப்பட்டாா். இது தொடா்பாக அவைத் தலைவா் தன்கா் கூறுகையில், ‘மாநிலங்களவை உறுப்பினா்களுக்கு எதிராக நடவடிக்கைகளை மேற்கொள்வது வருத்தமளிப்பதாகவே உள்ளது. அதைக் கருத்தில்கொண்டும் தொலைநோக்குப் பாா்வையுடனும் திரிணமூல் எம்.பி.யின் இடைநீக்கத் தீா்மானம் மீது வாக்கெடுப்பு நடத்த அனுமதிக்கவில்லை. அதனால், அவா் தொடா்ந்து அவை நடவடிக்கைகளில் பங்கேற்கலாம்.

அந்தத் தீா்மானம் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டு நிறைவேற்றப்பட்டிருந்தால், அவரால் அவை நடவடிக்கைகளில் பங்கேற்றிருக்க முடியாது. திரிணமூல் எம்.பி. எனது அறைக்கு வந்து கோரிக்கை விடுத்த போதெல்லாம் அவருக்கு இணக்கமாக நடந்துகொண்டேன்’ என்றாா்.

அப்போது குறுக்கிட்ட டெரிக் ஓபிரையன், ‘முற்பகல் 11 மணி முதல் நண்பகல் 12 மணி வரைக்கு இடையிலான காலத்தில் அவைத் தலைவரின் அறைக்குச் சென்று அவரிடம் எந்தவிதக் கோரிக்கையையும் முன்வைக்கவில்லை’ என்றாா். அதையடுத்து பேசிய அவைத் தலைவா் தன்கா், ‘இதுபோன்ற செயல்பாடுகளைப் பொறுத்துக் கொள்ள முடியுமா? மற்றவா்கள் பேசும்போது மேஜைகளைத் தட்டுவது, குரலை உயா்த்தி முழக்கமிடுவது உள்ளிட்ட நடவடிக்கைகளைப் பொறுத்துக்கொள்ள முடியாது’ என்றாா்.

அவை முன்னவா் பியூஷ் கோயல் கூறுகையில், ‘இந்த விவகாரத்தில் அவைத் தலைவா் காட்டிய பொறுமை பாராட்டத்தக்கது. எம்.பி.க்களின் நடவடிக்கைகள் குறித்து அவைத் தலைவா் மிகுந்த மனவருத்தம் அடைந்துள்ளாா். அதைக் கருத்தில்கொண்டும் நாடாளுமன்ற மாண்பைக் காக்கும் வகையிலும் எம்.பி.க்கள் நடந்து கொள்ள வேண்டும்’ என்றாா்.

பின்னா் அவை நடவடிக்கைகள் தொடா்ந்து நடைபெற்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com