நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தில், எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மக்களவையில் பதில் அளித்து பேசி வருகிறார்.
மக்களவையில் மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது இரண்டாவது நாளாக நடைபெற்று வரும் விவாதத்தில், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி இன்று(புதன்கிழமை) பிற்பகல் உரையாற்றினார்.
பிரதமர் நரேந்திர மோடி மணிப்பூரை இரண்டாக உடைத்துவிட்டார். இன்று வரை பிரதமர் மோடி மணிப்பூருக்கு ஏன் செல்லவில்லை? என்று கேள்வி எழுப்பியதுடன் இந்திய நாட்டின் ஒரு பகுதியாக மணிப்பூரை கருதவில்லை, மணிப்பூரை கைவிட்டுவிட்டார் பிரதமர் என்று பிரதமர் மோடியையும் பாஜக அரசையும் கடுமையாக சாடினார்.
இதையும் படிக்க | ராகுல் உரையின்போது மக்களவையில் பிரதமர் இல்லை
இந்நிலையில் எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் விதமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மக்களவையில் பேசி வருகிறார்.
அப்போது பேசிய அவர், 'மத்திய அரசு மீது மக்கள் மிகவும் நம்பிக்கை வைத்துள்ளனர். மக்களால் விரும்பப்படும் பிரதமராக மோடி இருக்கிறார். பாஜக அரசு, ஊழலையும் வாரிசு அரசியலையும் முடிவுக்கு கொண்டு வந்திருக்கிறது.
பிரதமர் மீதும் இந்த அரசாங்கம் மீதும் நம்பிக்கையில்லா நிலை இல்லை. ஒரு போலியான தவறான நம்பிக்கையை ஏற்படுத்தவே இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது
முந்தைய காங்கிரஸ் அரசுகள், தங்கள் அரசைக் காப்பாற்ற ஊழலில் ஈடுபட்டன. சுதந்திரத்துக்குப் பிறகு, பெரும்பாலான மக்களின் நம்பிக்கையைப் பெற்ற அரசாக பிரதமர் மோடியின் அரசு மட்டுமே உள்ளது. அவர் பொதுமக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான தலைவர். ஒரு நாளைக்கு 17 மணி நேரம் என நாட்டு மக்களுக்காக அவர் அயராது உழைக்கிறார். ஒருநாள் கூட விடுப்பு எடுக்காமல் தொடர்ந்து வேலை செய்கிறார். மக்கள் அவரை நம்புகிறார்கள். இந்த அரசு மீது மக்களுக்கு நம்பிக்கை உள்ளது.
இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் அரசியல் உள்நோக்கம் கொண்டதாக இருப்பதால், இந்த அரசு செய்த பணிகளை நான் குறிப்பிட வேண்டும்' என்று பேசினார்.
தொடர்ந்து பிரதமர் மோடி அரசு கொண்டு வந்த திட்டங்கள் குறித்து அமித் ஷா பேசி வருகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.