
நிலவின் சுற்றுவட்டப் பாதைக்குள் சென்றுள்ள சந்திராயன் - 3 விண்கலம், கடந்த 9 ஆம் தேதி 4,400 கி.மீ சுற்றுவட்ட பாதையில் இருந்தபோது லேண்டர் கேமரா மூலம் எடுக்கப்பட்ட நிலவின் மேற்பரப்பு காட்சிகளை படம்பிடித்து அனுப்பிய அடுத்த புகைப்படத்தை இஸ்ரோ பகிர்ந்துள்ளது.
நிலவின் தென் துருவத்துக்கு அருகே தரையிறங்கி ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) சுமாா் ரூ.615 கோடியில் வடிவமைத்த சந்திரயான்-3 விண்கலம் எல்விஎம்-3 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து கடந்த ஜூலை 14-ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. அதைத் தொடா்ந்து பெங்களூரில் உள்ள இஸ்ரோவின் கட்டுப்பாட்டு மையத்திலிருந்து விண்கலத்தை இயக்கும் பணிகள்மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பூமியைச் சுற்றிவந்த விண்கலத்தின் சுற்றுப்பாதை தொலைவு படிப்படியாக அதிகரிக்கப்பட்டது. தொடா்ந்து ஆக. 1-ஆம் தேதி புவியீா்ப்பு விசையிலிருந்து சந்திரயான்-3 விலக்கப்பட்டு நிலவை நோக்கிச் செல்லும்படி அதன் பயணப் பாதை மாற்றப்பட்டது. அதன்படி, வலம் வரும் சந்திரயான்-3 விண்கலத்தின் சுற்றுவட்டப் பாதையின் தொலைவை குறைத்து, நிலவில் மெதுவாக தரையிறக்குவதற்கான பணிகளில் இஸ்ரோ விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனா். அதற்காக சந்திரயான்-3 சுற்றுவட்டப் பாதை இதுவரை 3 முறை மாற்றப்பட்டது.
Image captured by Lander Horizontal Velocity Camera (LHVC) on Chandrayaan-3 from 4400 km altitude on Aug 9. #Chandrayaan3 #isro pic.twitter.com/ByRLXSkxs3
— Science Simplified (@SciSimpAAG) August 16, 2023
இதையும் படிக்க | உ.பி.யில் கிருஷ்ண ஜன்மபூமி கோயில் அருகே வீடுகள் இடிப்பு: உச்சநீதிமன்றம் 10 நாள்களுக்குத் தடை
இந்த நிலையில், நிலவையொட்டிய இறுதிக்கட்ட சுற்றுப் பாதையில் சந்திரயான்-3-ஐ கொண்டு செல்லும் பணிகள் புதன்கிழமை காலை 8.30 மணிக்கு மேற்கொள்ளப்பட்டன. அதன்படி, விண்கலத்தில் இருந்த திரவ வாயு இயந்திரம் இயக்கப்பட்டு வெற்றிகரமாக அதன் சுற்றுவட்டப்பாதை மாற்றியமைக்கப்பட்டதை அடுத்து தற்போது நிலவின் தரைப் பகுதியிலிருந்து குறைந்தபட்சம் 153 கி.மீ. தொலைவும், அதிகபட்சம் 163 கி.மீ. தொலைவும் கொண்ட சுற்றுவட்டப் பாதையில் விண்கலம் நிலவைச் சுற்றி வருகிறது.
இந்த நிலையில், சந்திரயான்-3 விண்கலத்திலிருந்து லேண்டரை விடுவித்து நிலவில் தரையிறக்குவதற்கான பணிகள் வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட உள்ளது.
சந்திரயான்-3 விண்கலத்திலிருந்து லேண்டா் கலன் விடுவிக்கும் பணி வெற்றிகரமாக நிறைவடைந்த பிறகு, அதில் உள்ள சிறிய ராக்கெட்கள், இன்ஜின்கள், சென்சார்கள் உள்ளிட்டவை சரியாக இயங்குகின்றனவா என்ற சோதனைக்குப் பிறகு லேண்டரின் வேகம் படிப்படியாகக் குறைக்கப்பட்டு, நிலவில் வரும் 23-ஆம் தேதி தரையிறக்கப்படவுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
இதனிடையே, சந்திராயன் - 3 விண்கலம், கடந்த 9 ஆம் தேதி 4,400 கி.மீ சுற்றுவட்ட பாதையில் இருந்தபோது நிலவின் மேற்பரப்பு காட்சிகளை படம்பிடித்து அனுப்பிய அடுத்த புகைப்படத்தை இஸ்ரோ பகிர்ந்துள்ளது.
இந்த படம் நிலவின் பள்ளத்தாக்குள் தெளிவாக தெரியும் வகையில் எடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தில் நிலவின் மேற்பரப்பில் உள்ள கூலம்ப், போக்ஸோபட், வெப்பர், டைசன் போன்ற பள்ளத்தாக்குகள் தெளிவாக தெரிகின்றன.
லேண்டரில் உள்ள கிடைமட்ட வேக கேமரா (எல்எச்விசி) மூலம் இந்த படம் எடுக்கப்பட்டுள்ளதால் அதற்கான சோதனையும் வெற்றிகரம் நடந்துள்ளது.
ஜூன் 14 ஆம் தேதி நிலவின் மேற்பரப்பையும், நில நிறத்தில் இருக்கும் பூமியின் தோற்றத்தையும் காட்டும் ஒரு படத்தையும், விடியோவையும் சந்திரயான்-3 விண்கலம் அனுப்பியது குறிப்பிடத்தக்கது.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...