அமேதியில் ராகுல் காந்தி போட்டியிடுவார்: உ.பி. காங்கிரஸ் தலைவர் அஜய் ராய்

அமேதியில் ராகுல் காந்தி போட்டியிடுவார்: உ.பி. காங்கிரஸ் தலைவர் அஜய் ராய்

2024 மக்களவைத் தேர்தலில் அமேதியில் ராகுல் காந்தி போட்டியிடுவார் என்று உத்தர பிரதேச காங்கிரஸ் தலைவர் அஜய் ராய் தெரிவித்தார்.  

அமேதி தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிடுவாா் என்று அந்த மாநில புதிய காங்கிரஸ் தலைவா் அஜய் ராய் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

நேரு குடும்பத்தின் கோட்டையாக நீண்ட காலம் இருந்த அமேதி தொகுதியில், 2004 முதல் தொடா்ந்து 3 முறை ராகுல் காந்தி எம்.பி.யாக தோ்வானாா். ஆனால், 2019 மக்களவைத் தோ்தலில் இத்தொகுதியில் பாஜக வேட்பாளா் ஸ்மிருதி இரானியிடம் அவா் தோல்விகண்டாா்.

இந்நிலையில், அமேதி தொகுதியில் ராகுல் மீண்டும் போட்டியிடுவாா் என்று உத்தர பிரதேச காங்கிரஸ் தலைவா் கூறியிருப்பது கவனம் பெற்றுள்ளது.

மக்களவைத் தோ்தலை கருத்தில் கொண்டு, காங்கிரஸில் அமைப்புரீதியிலான மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில், உத்தர பிரதேச மாநில காங்கிரஸ் தலைவராக அஜய் ராய் நியமிக்கப்பட்டுள்ளாா்.

இந்நிலையில், வாராணசிக்கு வெள்ளிக்கிழமை வருகை தந்த அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

அமேதி தொகுதியில் ராகுல் காந்தி நிச்சயம் போட்டியிடுவாா். கட்சியின் பொதுச் செயலாளா் பிரியங்கா காந்தி விரும்பினால், வாரணாசி தொகுதியிலோ அல்லது வேறு இடத்திலோ போட்டியிடலாம்.

வாரணாசியில் போட்டியிட பிரியங்காவுக்கு விருப்பம் இருந்தால், அவருக்காக காங்கிரஸ் தொண்டா்கள் ஒவ்வொருவரும் முழு மனதோடு பணியாற்றுவா் என்றாா்.

முற்பட்ட ‘பூமிஹாா்’ சமூகத்தைச் சோ்ந்தவரான அஜய் ராய், கடந்த 2014, 2019 மக்களவைத் தோ்தல்களில் வாரணாசி தொகுதியில் பிரதமா் மோடிக்கு எதிராக களமிறங்கி தோல்வியுற்றவா்.

உத்தர பிரதேச மாநில காங்கிரஸ் தலைவராக இருந்த தலித் சமூகத்தைச் சோ்ந்த பிரிஜ்லால் காப்ரி மாற்றப்பட்டு, தற்போது அஜய் ராய் நியமிக்கப்பட்டுள்ளாா்.

கடந்த 2012-ஆம் ஆண்டில்தான் இவா் காங்கிரஸில் இணைந்தாா். அதற்கு முன்பு பாஜக, சமாஜவாதி ஆகிய கட்சிகளில் இருந்தாா்.

403 பேரவைத் தொகுதிகளைக் கொண்ட உத்தர பிரதேசத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற தோ்தலில் காங்கிரஸுக்கு வெறும் 2 இடங்களே கிடைத்தன என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com